Tuesday, May 11, 2004

குமுதினி

இன்று சுந்தரவடிவேல் எங்கேயோ இருந்து 'குமுதினி' பற்றித் தெரிந்துகொண்டு எழுதி இருந்தார். நானும் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு இணையப்பக்கம் வந்தபோது தேடிய வி்ஷயங்களில் குமுதினியும் ஒன்று. ஏறக்குறைய மூன்று நான்கு பதிவுகளே இருந்தன.



இலங்கையில் வடகோடியில் இருக்கும் தீவுக்கூட்டத்தில் ஒன்றுதான் நெடுந்தீவு. அருகே புங்குடுதீவு, நயினாதீவு, வேலணை, அனலைதீவு என்று இன்னும் சில தீவுகள் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வேலணைக்கு கடலுக்கு நடுவே பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, புங்குடுதீவுக்கும் வேலணைக்கும் நடுவே கடலில் சாலை போடப்பட்டிருக்கிறது. நாற்பதுகளின் கடைசியில்தான் இந்தப் பாதைகள் அமைக்கப்பட்டன என்று அறிகிறேன். அதற்கு முன்னார் படகில்தான் போகவேண்டும். அப்போதிருந்ததைப் போல நெடுந்தீவு, நயினாதீவு, மக்களும் படகில் புங்குடுதீவுக்கு வந்து, பிறகு வானில்(van)இல் யாழ்ப்பாணம், கொழும்பு, மற்ற இடங்களுக்கு எல்லாம் செல்வார்கள். முன்பு நயினாதீவுக்குப் படகில் போனதைப்பற்றி எழுதியிருக்கிறேன்.



லோஞ்சி என்று சொல்வார்கள் Launch என்று பிற்பாடு புரிந்துகொண்டேன். பழைய படகுகள், அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றுதல் என்று எல்லாம் நடக்கும். எங்கள் தீவுகளில் சிற்சில மரக்கறிகள் விளைவித்தாலும், மற்ற சாமான்கள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் இருந்துதான் வரவேண்டும். புங்குடுதீவுக்குப் பரவாயில்லை, நெடுந்தீவு, நயினாதிவுக்கெல்லாம் சாமான்கள் போட்டில்தான் போகவேண்டும்.



இப்படியான ஒரு நாளில்தான், குமுதினி என்ற படகும் நெடுந்தீவில் இருந்து புங்குடுதீவில் குறிகாட்டுவான் ஜெட்டியை நோக்கி வந்துகொண்டிருந்தது. புங்குடுதீவில் பெரிய ஜெட்டி இதுதான். இதற்கு அருகில்தான் என் பெரிய அம்மம்மா, பெரியம்மா, வீடுகள் எல்லாம் இருந்தன. இறுபிட்டிக்கு வருவதை விட குறிகாட்டுவானுக்கு நிறைய வான்கள் ஓடும். குமுதினியை நடுக்கடலில் நிறுத்திய நேவிக்காரர், எல்லாரையும் கொன்று தீர்த்தனர். ஒரு சின்னப்பிள்ளை மட்டும் வெட்டுக்காயத்தோடு தப்பியது என்று சொல்வார்கள். 'நீள நடக்கின்றேன்'இல் வெள்ளவத்தையை எழுதும்போது வெள்ளவத்தை மார்க்கெட் நினைவுக்கு வந்தது. அங்கே ஒரு பெரிய மீன்மார்க்கெட்டும் இருக்கிறது. பெரிய பெரிய மீன்களை எல்லாம் அநாயாசமாக பட்டரை வெட்டுவதைப்போல பென்னாம்பெரிய கத்திகளைக் கொண்டு வெட்டுவார்கள். பெரிதாக ஓங்கிவெட்டியதுபோல எல்லாம் நினைவில்லை. பிறகு பிறகு 83இல் மீன் வெட்டுற கத்தியால வெட்டினவங்கள் என்றெல்லாம் மற்றவர்கள் சொல்லிக்கேள்விப்படும்போது, நான் பார்த்த அந்தக் கத்திகளே நினைவுக்கு வரும். குமுதினியைப்பற்றிப் பேசும்போதும் மீன் வெட்டுற கத்தியால வெட்டினவங்கள் என்றுதான் சொல்வார்கள்.



குமுதினிப் படுகொலை நடக்கும்போது நானும் தம்பியும் யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பள்ளிக்கூட விடுதிகளில் இருந்தோம். அன்றைக்கு அம்மா, யாழ்ப்பாணம் வந்து என்னையும் தம்பியையும் பார்த்துவிட்டு, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிக்கொண்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் பயணம் செய்துகொண்டிருந்த வான் (van) போவதற்கு ஏறக்குறைய 15 நிமிடம் முன்புதான் எதிர்த்திசையில் ஒரு லாரியில் குமுதினியில் கொலையுண்டவரின் சடலங்கள் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாம். இந்தியாவில், தண்ணீர் லாரியைப் பார்த்திருப்பீர்கள். லாரியில் தண்ணீர் தழும்பி, சாலையின் இருமருங்கும் கொட்டிக்கிடக்கும் இல்லையா? அதுமாதிரி சாலையின் இரண்டு பக்கமும் ரத்தம். பார்த்துவிட்டு, நிறுத்து வானில் இருந்தவர்கள் என்ன என்று விசாரித்து அறிந்துகொண்டார்கள். அன்றைக்குத் தான், இங்கே இனி நிம்மதியாக வாழமுடியாது என்ற முடிவுக்கு வந்ததாக அம்மா அடிக்கடி சொல்வார்.

Comments on "குமுதினி"

 

post a comment