CBC Radio 1 shows - My Favourites முன்பெல்லாம் என்னுடைய வார-இறுதி பொழுதுபோக்குகளில் மிகவும் முக்கியமான இடம் வானொலிக்கென்று இருந்தது. அதுவும் பனிக்காலத்தில் பல வார-இறுதி நிகழ்ச்சிகளைத் தவற விடுவதேயில்லை. இந்த வாரம், கனேடிய எழுத்தாளர் Anne Carsonக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பதை அறிந்ததும், எனக்குப் பிடித்த Eleanor Wachtel அவருடைய ‘Writers and Company’ நிகழ்ச்சிக்காக, நேர்காணல் செய்திருக்கிறாரா என்று தேடிப் பார்க்க நினைத்தேன். அந்த நிகழ்ச்சியைத் தேடத் தொடங்கியதும் எனக்குள் இதுவரை நான் இரசித்த தொடர்களை ஒவ்வொன்றாக சிபிசி இணையத்தளத்தின் உதவியோடு இரை மீட்டேன். இங்கே சுட்டிகளோடு பதிந்து வைத்துவிட்டு, பாட்காஸ்டில் கிடைக்கும் நிகழ்ச்சிகளைக் கேட்க வேண்டும் என்ற உந்துதல் வந்திருக்கிறது. -0- Stuart McLeanஇன் Vinyl Cafe இசை தொடர்பான நிகழ்ச்சி. நிறைய புதிய விசயங்களைத் தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது. -0- Shaun Majumdarஇன் The Debators பொழுதுபோக்கு நிகழ்ச்சி இது. சகட்டு மேனிக்கு நக்கலடிப்பதோடு, அதை சுவாரசியமாகவும் கொண்டு சென்றார்கள் என்பது இப்போது நினைவில் இருக்கு. -0- Bob McDonaldஇன் Quirks and Quarks - https://www.cbc.ca/listen/live-radio/1-51-quirks-and-quarks ரொம்பப் பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று. எப்போதாவது தவற விட்டாலும், மறு ஒலிபரப்பில் கேட்டுவிடுவேன். -0- Paul Kennedyஇன் Ideas - https://www.cbc.ca/ideas/about/ https://www.cbc.ca/ideas/episodes/2010/12/ https://longplay.substack.com/p/paul-kennedy-cbc-doesnt-understand https://www.youtube.com/watch?v=xWaHTRATF8s Paul Kennedy அவர்களின் குரல் ஒரு மந்திரக்குரல் போல இருக்கும்! ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு விசயங்களை ஆழமாக அழகாக அலசுவார்கள். இந்தத் தொடரின் archives இருக்கிறது. ஆனால், அதைக் கேட்க adobe flashplayer வேலை செய்ய மாட்டேனென்கிறது. தேடணும். இப்ப Nahlah Ayad நடத்தும் ஷோ. ஒரு சில தடவை கேட்டுட்டு தொடராமல் விட்டது நினைவுக்கு வருது. Ideas by Paul Kennedy என்ற குரலில் இருந்த மந்திரத்தன்மையை ரொம்பவும் மிஸ் செஞ்சதில் தொடரைக் கேட்காமல் விட்டேன். இன்னிக்கு வேறேதோ விசயத்தை எழுதத் தொடங்கி, அது எங்கெங்கேயோ போய் பிடித்த ரேடியோ நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாகப் போய் தேடிக்கொண்டிருக்கிறேன். அப்படி தேடும்போது கடைசியாக Ideasஇல் நடந்த நிகழ்ச்சியின் தலைப்பு ஈர்த்துவிட்டது. // The Battle for Empathy Empathy is having a moment. Scientific research has indicated empathy works against selfishness and indifference, strengthening societies. But there’s a growing number of mostly conservative voices — in the U.S. and in Canada — who strongly disagree. Their argument is that empathy can be dangerous — driving irrational thinking and behaviour in public life. The result is a growing battle over empathy in a world that has never seemed to need it more. *This episode originally aired on Jan. 28, 2026. https://www.cbc.ca/listen/live-radio/1-23-ideas/clip/16194665-the-battle-empathy // -0- Dr.Brian Goldman இன் White Coat, Black Art - https://www.cbc.ca/radio/whitecoat மிகவும் யோசிக்க வைத்த ஷோ. தடுப்பூசிகள் தொடங்கி மருத்துவத்துறை, மருத்துவர்கள் என்று பற்பல விசயங்களை புட்டுப்புட்டு வைத்த தொடர். இந்த நிகழ்ச்சி வரும் நேரத்தில் வீட்டில் இல்லையென்றாலும், எப்படியாவது கேட்டிருவேன். அந்தளவு பிடித்திருந்தது. Dr.Brian Goldman கொடுத்த TED Talk: https://www.ted.com/talks/brian_goldman_doctors_make_mistakes_can_we_talk_about_that வேறேதோ ஒரு விசயத்துக்காக CBC Radio 1 இல் கேட்ட தொடர்களைப்பற்றி எழுதத் தொடங்கினேன். இப்போதெல்லாம் ரேடியோ கேட்கும் பழக்கமே இல்லாமல் போய் விட்டிருக்கிறது. திரும்பவும் முன்பு கேட்ட நிகழ்ச்சிகளை நடாத்தியவர்கள் இப்போதும் நடாத்தினால் கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இப்போது Dr.Brian Goldman, ‘The Dose’என்றொரு நிகழ்ச்சி நடாத்துகிறார். கேட்டுப் பார்க்க வேண்டும். https://www.cbc.ca/listen/cbc-podcasts/410-the-dose -0- Jian Gomeshi வழிநடத்திய Canada Reads நிகழ்ச்சி - https://www.cbc.ca/books/canadareads பல புத்தகங்களைக் கண்டடைய வைத்த நிகழ்ச்சி. இப்போதும் நினைவிருப்பது, இந்த நிகழ்ச்சியில் Yann Martelஇன் ‘Life of Pi’ புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, நூலகத்தில் தேடிக் கண்டடைந்தது. https://www.cbc.ca/listen/live-radio/1-6-canada-reads -0- Terry O’Reilly’s ‘The Age of Persuasion - https://en.wikipedia.org/wiki/The_Age_of_Persuasion விளம்பரங்கள் பற்றிய அருமையான நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியின் archives இருக்கும் என்று தேடிப்போனால் ஏமாற்றமாக இருந்தது. CBC Radio தளத்தில் அருமையான பழைய நிகழ்ச்சிகள் பலதையும் காணவில்லை. :( நல்ல வேளை, விக்கிபீடியாவில் தலைப்புகளை யாரோ பகிர்ந்திருக்கிறார்கள். தேடிப்பார்த்ததில் Terry O’Reillyயின் பாட்காஸ்ட் தளம் கிடைத்திருக்கிறது. Under the influence with Terry O’Reilly - https://podcasts.apple.com/ca/podcast/under-the-influence-with-terry-oreilly/id493536367 -0- Rick McInnes-Raeஇன் Dispatches நிகழ்ச்சி - https://www.cbc.ca/dispatches/ உலகமெங்கிலும் நடக்கும் சில பல நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வார்கள். சுவாரசியமாக நடக்கும். நேரம் கிடைக்கும்போது இந்த நிகழ்ச்சி ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருக்கும். -0- Michael Enright’s Sunday Edition https://www.cbc.ca/radio/author/michael-enright-1.2454380 -0- Eleanor Wachtel’s Writers and Company ஒரு பனிக்காலப் பொழுதில்தான் நான் Eleanor Wachtelஇன் குரலை ரேடியோவில் கேட்டேன். ஒரு காலத்தில் பின்னணியில் CBC Radio 1, பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும். https://en.wikipedia.org/wiki/Writers_&_Company #CBCRadio1 #CBC #Radio #PaulKennedy #EleanorWachtel |
Previous Posts
- CBC Radio 1 shows - My Favouritesமுன்பெல்லாம் என்...
- Filmmaker Varunaஎனக்கு ஜெர்மனில கொஞ்சம் கசின்ஸ் இ...
- Sportsmanshipநான் முந்தி, நீ முந்தின்னு போட்டிபோட...
- தண்ணீர் பாட்டில். என்னோடு எப்போதும் எங்கேயும் வரு...
- நேற்று, நான் மதிக்கிற ஆட்களில் ஒருத்தர் ஆசாத் பா...
- moved
- Lava flowing into Pacific Ocean
- Kilauea Volcano, Hawaii
- Kilauea Volcano, Big Island, Hawaii
- Rue. St.Catherine, Montreal
Saturday, October 10, 2026
Thursday, August 05, 2021
Filmmaker Varuna எனக்கு ஜெர்மனில கொஞ்சம் கசின்ஸ் இருக்கிறாங்க. கண்ணே கண்ணுன்னு ஒரு தங்கச்சியும் ஒருத்தி இருக்கிறாள். சில பல வருடங்களுக்கு முந்தி இங்கே கனடாவுக்கு வந்திருந்தாள். வந்தவள் என்னேரமும் ஒரு நோட்டுப் புத்தகத்தோடுதான் இருப்பாள். மனதில் தோன்றும் கதைத் துணுக்குகளையெல்லாம் அதிலே எழுதி வைத்திருந்தாள். இருவரும் அந்தப் பயணத்தில் நிறையப் கதைத்தோம். பகிர்ந்துகொண்டோம். அதில் ஒன்று, அவளுடைய படம் இயக்கும் கனவு! கனவுகளைத் துரத்திப் பிடிக்க ஊக்கம் மட்டுமே அவளுக்குத் தேவையாக இருந்தது. அவளுடைய விடா முயற்சியினால், அவள் அவளுடைய கனவுகளைத் துரத்திக் கொண்டிருக்கிறாள். அதற்கான முயற்சியில், அவள் இந்தியாவிற்கு நிறையத் தரம் போய் வந்தாள். அங்கேயே பல மாதங்கள் இருந்தாள். முயற்சிகள் செய்த படி இருக்கிறாள். அவளுடைய முதலாவது முயற்சியைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. மிக மிக மகிழ்ச்சியான தருணம் அது!! இன்றைக்கு, அவளுடைய இரண்டாவது குறும்படம் பற்றிய செய்தியை மணி அவர்கள் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்தைப் பற்றிய விவரங்களையும் படம் உருவானபோதிலிருந்து அவளிடமிருந்து அறிந்திருந்தாலும், பங்கு பெற்ற ஒருவர் பகிரும்போது வரும் சந்தோசம் வேறுதானே! அவளுடைய விடாமுயற்சியால்தான் அவள் இந்த இரண்டு குறும்படங்களையும் உருவாக்கி இருக்கிறாள். இன்னமும் அவள் மென்மேலும் வளருவாள் என்பது அவளுடைய விடாமுயற்சியே சொல்லுகிறது. வருணாவின் குறும்படம் இன்னமும் அவள் பொதுவில் பகிரவில்லை. திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியபடி இருக்கிறாள். என்றைக்கு, அவள் பொதுவில் பகிருகிறாளோ, அப்போது நானும் இங்கே பகிருகிறேன். |
Tuesday, August 03, 2021
Sportsmanship நான் முந்தி, நீ முந்தின்னு போட்டிபோடும் இந்த உலகத்தில் எப்போதாவது நடக்கும் சில விசயங்கள் நம் மனதில் நின்றுவிடுகின்றன இல்லை... நேற்றைக்கு நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில் இரண்டு பேர் தங்கப்பதக்கம் வென்றார்கள். முதலில் ஒரு தலையங்கமாகப் பார்க்கும்போது இது வித்தியாசமான விசயம் என்பது பிடிபடவில்லை. பிறகு FBஇல் ஷாஜஹான் அவர்களின் வலைப்பதிவையும் வீடியோவையும் பார்க்கும்போதுதான் இது எவ்வளவு அருமையான விசயம் என்று பட்டது. சதா நெகடிவ் விசயங்களே கண்களில் படும் இந்நாட்களில் இது போன்ற விசயம் மனதிற்கு இதமாகிப் போகிறது.
அதேபோல ஹாக்கிப் போட்டியில் இந்தியப் பெண்கள் அணி semi-finalsக்குத் தேர்வான செய்தியும் மனதிற்கு இதமாக, உத்வேகமாக இருந்தது. இந்தியா போன்ற நாட்டில் விளையாட்டிற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விளையாட்டரசியல் எந்தளவு இருக்கிறது என்பதை எத்தனையெத்தனையோ படங்களிலும் செய்தித் துணுக்குகளிலும் பார்த்துவிட்டோம். ஏதாவது வித்தியாசமாக நடக்கிறதா என்று பார்த்தால், ஒன்றுமே இல்லையென்றுதான் தோன்றுகிறது. ஆனால், இதுபோன்ற வெற்றிகள், நிலை மாறும் என்ற நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. ஷாஜகான் சார் மொழிபெயர்த்த இன்னொரு பதிவையும் இங்கே பகிர்கிறேன். // நான் இந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்காதா என்று ஏங்கினேன். மின் தடைகளிலிருந்து, தூங்கும்போது காதைச் சுற்றி ரீங்காரமிடும் கொசுக்களிடமிருந்து, இரண்டு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதிலிருந்து, மழை பெய்யும்போதெல்லாம் நீரில் மிதக்கும் வீட்டிலிருந்து விடுதலையை விரும்பினேன். என் பெற்றோரும் தம்மால் இயன்ற அளவு முயற்சி செய்தார்கள்தான், ஆனால் அவர்களால் அவ்வளவுதான் செய்ய முடிந்தது – அப்பா வண்டியை இழுக்கும் கூலி வேலை செய்பவர், அம்மா வீடுகளில் வேலை செய்பவர். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு ஹாக்கி அகாதமி இருந்தது. எனவே, அங்கே பயிற்சி பெறுவதைப் பார்ப்பதிலேயே பல மணிநேரம் செலவு செய்வேன். எனக்கும் விளையாட ஆர்வம் இருந்தது. அப்பாவுக்கு தினக்கூலி 80 ரூபாய்தான், ஹாக்கி மட்டை வாங்கும் அளவுக்கு வசதியில்லை. எனக்கும் சொல்லிக் கொடுங்கள் என்று ஹாக்கி பயிற்சியாளரிடம் தினமும் கேட்பேன். ஆனால் நான் பலவீனமாக இருப்பதாகக் கூறி மறுத்து விடுவார். “பயிற்சிகளைத் தாங்கும் அளவுக்கு உனக்கு வலிமை இல்லை” என்பார் அவர். உடைந்த ஹாக்கி மட்டை ஒன்று மைதானத்தில் கிடைத்தது, அதை வைத்துக் கொண்டு பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். எனக்கு ஹாக்கிக்கு ஏற்ற ஆடைகள் இருக்கவில்லை. சல்வார்-கமீஸுடன்தான் ஓடுவேன். ஆனாலும், என்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு வாய்ப்பாவது கொடுங்கள் என்று பயிற்சியாளரிடம் கெஞ்சினேன். கடைசியில் ஒருவழியாக அவரை ஒப்புக்கொள்ள வைத்து விட்டேன்! ஆனால், இதை என் வீட்டில் சொன்னபோது அவர்கள் மறுத்து விட்டார்கள். “பெண்கள் வீட்டு வேலைதான் செய்ய வேண்டும். நீ ஸ்கர்ட் போட்டுக்கொண்டு விளையாடுவதை எல்லாம் அனுமதிக்க முடியாது” என்பார்கள். “தயவுசெய்து என்னை அனுமதியுங்கள். நான் இதில் தோல்வி கண்டால், நீங்கள் சொல்வதை எல்லாம் செய்கிறேன்” என்று பெற்றோரிடம் கெஞ்சினேன். அரைமனதாக அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதிகாலையிலேயே பயிற்சி துவங்கி விடும். எங்களிடம் கடிகாரம்கூடக் கிடையாது. அம்மா விழித்துக்கொண்டே இருப்பார். வானத்தைப் பார்த்து விடியலை அறிந்து என்னை எழுப்புவார். பயிற்சிக்கு வரும் ஒவ்வொரு ஆட்டக்காரரும் 500 மி.லி. பால் கொண்டு வர வேண்டும் என்பது அகாதமியில் விதியாக இருந்தது. எங்கள் வீட்டிலோ, 200 மிலிதான் ஏற்பாடு செய்ய முடிந்தது. நான் அதில் தண்ணீர் கலந்து கொண்டு குடிப்பன். ஏனென்றால், எனக்கு விளையாட வேண்டும். எனக்கு ஏற்பட்ட ஒவ்வொரு சிரமங்களின்போதும் என் பயிற்சியாளர் துணையாக நின்றார். ஹாக்கி கிட்களும் ஷூக்களும் வாங்கிக் கொடுப்பார். தன் குடும்பத்திலேயே என்னையும் தங்க வைத்து, எனக்குத் தேவையான உணவு கிடைக்கச் செய்தார். நான் கடுமையாகப் பயிற்சி செய்தேன். ஒரு நாளும்கூட பயிற்சியைத் தவற விட்டதில்லை. எனக்குக் கிடைத்த முதல் ஊதியம் நினைவில் இருக்கிறது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக 500 ரூபாய் கிடைத்த்து. அதை அப்பாவிடம் கொடுத்தேன். இதற்கு முன்னால் அவர் இவ்வளவு பணத்தைத் தொட்டதே இல்லை. ஒருநாள் நமக்கென ஒரு நல்ல வீடு இருக்கும் என்று என் பெற்றோருக்கு உறுதியளித்தேன். அந்த இலக்கை நோக்கிச் செல்வதில் என்னால் இயன்ற அனைத்தையும் செய்தேன். என் மாநில அணியில் இடம் பெற்றும், பல போட்டிகளில் பங்கேற்ற பிறகும், 15 வயதில் தேசியக் கோப்பை எனக்குக் கிடைத்தது! அப்போதும்கூட, நீ எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்றுதான் உறவினர்கள் கேட்டார்கள். “உனக்கு ஆசை தீரும்வரை விளையாடு” என்று சொன்னார் அப்பா. வீட்டாரின் ஒத்துழைப்பும் கிடைத்த பிறகு என்னால் இயன்ற அனைத்தையும் இந்திய அணிக்காகச் செய்வதில் முனைந்தேன். இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஆனேன். அடுத்த சில நாட்களில், ஒருநாள் நான் வீட்டில் இருந்தபோது, அப்பாவின் நண்பர் ஒருவர் வந்தார். தன் பேத்தியையும் உடன் அழைத்து வந்திருந்தார். “இவள் உன்னைப் பார்த்து ஈர்க்கப்பட்டு விட்டாள். இவளும் ஹாக்கி விளையாட விரும்புகிறாள்” என்றார். எனக்குப் பெரு மகிழ்ச்சியாக இருந்தது. அடக்க முடியாமல் அழுதேன். என் பெற்றோருக்கு அளித்த உறுதிமொழியை 2017இல் நிறைவு செய்தேன் – ஒரு வீட்டை வாங்கினேன். நாங்கள் எல்லாரும் சேர்ந்து அழுது கொண்டே அணைத்துக் கொண்டோம். எனக்கு இதுவே முடிவு அல்ல. என் பெற்றோருக்கும் பயிற்சியாளருக்கும் நன்றிக்கடனாக அவர்கள் எப்போதும் கனவு கண்டு வரும் ஒன்றைத் தருவதில் உறுதியாக இருக்கிறேன் – டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கம் பெறுவதுதான் அது. - இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் (முந்தைய பதிவில் நண்பர் பதிந்த ஆங்கிலக் கமென்ட்டின் மொழியாக்கம்.) உன் கரங்களுக்கு அன்பு முத்தங்கள் மகளே. // |
Thursday, July 29, 2021
தண்ணீர் பாட்டில். என்னோடு எப்போதும் எங்கேயும் வரும் ஒரு பொருள். இங்கே, எங்கேயும் தண்ணீர் குடிக்கும் வசதியும் தண்ணீர் பாட்டில் வாங்கும் வசதியும் இருந்தாலும், என்னோடு எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டில் இருக்கும். அதற்காகவே சிறிது பெரிதென தண்ணீர் பாட்டில்களும் என்னிடம் இருந்தன. அதற்காக கிண்டலடிக்கப்பட்டாலும் பெரிதும் பொருட்படுத்திக் கொள்வதில்லை. வேறெந்த குளிர்பானங்களை விடவும் தண்ணீர் விருப்பமெனக்கு. தண்ணீரைப் பற்றிய நினைவுகள் என்று பார்த்தால் ஹொஸ்டலில் தண்ணீர் தனியா வைத்திருந்த நினைவொன்றுமில்லை. புங்குடுதீவில், சில நேரங்களில் நல்ல தண்ணீர்க் கிணற்றுக்குப் போய் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்த நினைவுகள் உண்டு. குடத்தை இடுப்பில் வைக்கக் கஷ்டப்பட்டதும், வெறும் குடத்தை இடுப்பில் வைத்துப் பழகியதும், குறையத் தண்ணீர் இருந்தால், குடத்தைக் கொண்டு நடக்கக் கஷ்டம், நிரம்பி இருந்தால்தான் அதைக் கொண்டு நடக்கலாம் என்றும் அன்ரி சொன்ன நினைவுகளும் உண்டு. பிறகு தண்ணீர் குறித்த முக்கியமான நினைவுகளென்றால் 90களில் சென்னையில் தண்ணீருக்குக் கஷ்டப்பட்ட நாட்கள்தான். லாரியில் கொண்டு வந்து கொடுத்தார்கள்/வாங்கினோம். இப்ப ஏன் தண்ணீரைப் பற்றிய கதையென்றால் பிசிக்ஸ் இதழொன்றில், Water as a Metal என்றொரு செய்தி. சாதாரண நேரத்தில் சுத்தத் தண்ணீர் ஒரு நல்ல கடத்தியாம். அதுவே நிறைய pressure இருக்கும் இடங்களில் ஒரு உலோகத்தின் தன்மையைக் கொண்டு விடுகிறதாம். மற்றக் கிரகங்களில் அடியாழத்தில் அப்படி இருக்கிறதென்று சொல்கிறார்கள். அதே கூகுள் நியூஸ் பக்கத்தில் செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதுபோலத் தெரிவது களிமண் என்று இன்னொரு செய்தி. இதற்கெல்லாம் நடுவில் என்டிபியின் ஜங்கீட் சிங், கனேடிய வடக்குப் பிராந்தியத்தில் சுற்றுப் பிரயாணம் செய்துகொண்டிருக்கிறார். உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான கனடாவில், இப்போதும் குடிதண்ணீர்ப் பிரச்சினை இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? குழாயைத் திறந்தால் குடிதண்ணீர் கிடைக்கும், அந்தத் தண்ணீரை எந்தவிதமான பயமுமின்றிக் குடிக்கலாம் என்று எல்லா இடங்களிலும் இங்கே சொல்வார்கள். ஆனால், கனேடிய பூர்வகுடிகள் வாழும் நிறைய reserveகளில் தண்ணீரைக் கொதிக்க வைத்துத்தான் குடிக்கவேண்டும். அதுவும் Attawapisket போன்ற நிலத்தின் அடியில் பல கோடி மதிப்புள்ள கனிம வளங்களும் வைரங்களும் இருக்கும் இடத்தில் வாழும் பூர்வகுடிகள் தண்ணீருக்கு இன்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாறவில்லை. Attawapisket வடக்கு ஒண்டாரியோ மாநிலத்தில் இருக்கிறது. அதே ஒண்டாரியோ மாநிலத்தில்தான் உலகின் மிகப்பெரிய நன்னீர் வளம்கொண்ட great lakesகளில் ஒன்றான ஓண்டாரியோ லேக் இருக்கிறது. இங்கே ஒன்டாரியோ மாநிலத்தில் Elmvale என்ற இடத்தில்தானாம் உலகிலேயே மிகவும் சுத்தமான தண்ணீர் இருக்கிறதாம். சில வாரங்களுக்கு முன்பு செய்தியில் சொன்னார்கள். விவசாய கிராமமான Elmvaleஇன் அடியில் இருக்கும் glacial deposits களில் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு ஆர்டிக் பனி தண்ணீராக இருப்பதாகவும், சில இடங்களில் மாடர்ன் தண்ணீர் - 1950களில் பெய்த மழை தண்ணீர் சேமிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த இடமும் ஐரோப்பியர்களும் பூர்வ குடியினரும் தத்தமக்கு முக்கியம் என்று சொல்லும் இடந்தான். Tiny and Wye Marshes என்னும் தண்ணீர்ப்பகுதிகள் அங்கே இருக்கின்றன. The area was known as Wendake to the first Indigenous inhabitants, the Wendat people, who farmed this area. Called “Huron” by the French, present day Huronia is the birthplace of Canadian agriculture. A Wendat settlement near Elmvale was known as Ekhiondastsaan (“the lands which exude water”). The French Jesuit community of Sainte-Marie among the Hurons was built at the mouth of the Wye River in 1636. இப்ப இந்த இடத்திலும் தண்ணீரின் தன்மையில் பிரச்சினைகள் வருகின்றன. தொழில்களுக்காக நிலத்தைப் பயன்படுத்தும் தன்மை மாறுவதால் வரும் பிரச்சினைகள். |






























