Sunday, November 30, 2003

Poutine


இன்றைக்கு இங்கே பனி பெய்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு அதிகாலையில் லேசாகத்தூவியிருந்ததைத்தான் இந்த வருடத்தின் முதல் பனியாகக் கொள்ளலாமென்றாலும், இன்றுதான் தொடர்ந்து காலையிலிருந்து பின்னேரம்வரை பொழிந்தது. கூடவே வேகமான காற்றும். இதனால் ஏறக்குறைய முகத்திலே வந்து ஊசிமுள்ளாய்க் குத்தியது.

இனிமேல் சந்திரனுக்குப் போவதுபோல் உடை உடுத்தவேண்டும். குறைந்தது மூன்று உடுப்புகளாவது மாட்டிக்கொண்டு மேலே பனிக்கால மேலங்கி அணிந்துகொள்ளவேண்டும். கைக்கு கிளவுஸ், தலைக்குத் தொப்பி, கழுத்துக்கு ஸ்கார்·ப் என்று அணிந்ததுபோக காலுக்கு பனிக்கால சப்பாத்தும் தேவை.

இதோடு சுவாரசியமான விஷயம் புட்டின் (Poutine). கியூபெக் மாகாணத்து உணவான இது இப்போது கனடா முழுவதும் பரவலாகக் கிடைக்கிறது. அமெரிக்காவிலும் கிழக்குக்கரையோர நகரங்களில் கிடைப்பதாக சொல்கிறார்கள். பிரெஞ்ச் ·ப்ரைஸ் (Freedom Fries? :p) உருளைக்கிழங்கு வறுவல், அதற்கு மேலே அன்றோ, முதல்நாளோ தயாரான Cheddar Cheese Curds அவற்றுக்கு மேலே சுடச்சுட ஊற்றப்பட்ட கிரேவி. உருளை வறுவலும், கிரேவியும் சூடாக இருப்பதால் இடையில் இருக்கும் சீஸ் கொஞ்சம் உருகி உருளைக்கிழங்கில் ஒட்டிக்கொள்கிறது.

Poutine

பனிக்காலத்திற்கு நல்ல உணவாகக்கருதுகிறார்கள் இதை. ஏதோ காலகாலமாக இந்த ஊர்க்காரர்கள் உண்டுவந்த உணவு என்று நினைக்காதீர்கள். சில வருடங்களுக்கு முன்புதான் நாற்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறது புட்டின். 1957 வாக்கில் கியூபெக் மாகாணத்தில் வார்விக் நகரத்தில் Fernand Lachance என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் என்னமோ அவருடைய சமையலறையில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கவில்லை. ஒரு நாள் இவருடைய உணவகத்துக்கு வந்த ஒரு ஆள், உருளை வறுவலையும் சீஸையும் ஒரே பையில் போட்டுத்தரும்படி கேட்டிருக்கிறார். இப்போது எண்பத்திமூன்று ஆகும் Fernand Lachanceம் முனகிக்கொண்டே செய்து கொடுத்தாராம். சில நாட்களிலேயே, பிரபலமாகிவிட்ட புட்டினுக்கு Fernand Lachanceஇன் மனைவி கொஞ்சம் காரமான சாஸ் செய்து தனியாகக்கொடுத்தாராம். இதை 65 சதத்திற்கு விற்ற Fernand Lachance தன் உணவகத்தில் புட்டினை உண்பவர்களால் தான் நிறையவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது என்று சொல்கிறார். வேறென்ன சுத்தப்படுத்தும் வேலைதான்.

La Belle Province, Montreal

இப்போது புட்டின் இரண்டு வகைகளில் கிடைக்கிறதான் இத்தாலியன் புட்டின் என்று சொல்லி ஸ்பாகட்டி சாஸ¤டன் உருளை வறுவல், சீஸ் சேர்த்துக்கொடுக்கிறார்களாம். நான் உண்டது என்னவோ Fernand Lachance உருவாக்கிய புட்டின்தான். செமிப்பதற்குப் பலமணிநேரம் எடுக்கும் இந்த உணவை பனிநாட்களில் சாப்பிட்டால்தான் சரிவரும். மேலும் நான் இங்கு கண்ட இன்னொரு விஷயம். பனிநாட்களில் பலரும் சின்னச்சின்ன பைகளில் சீஸ் துண்டங்களை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். La Belle Provinceஇல்தான் மான்ரியலில் நல்ல புட்டின் கிடைக்குமென்றாலும் மாக்டொனால்ட், பர்கர் கிங் போன்ற இடங்களிலும் கிடைக்குமென்று அறிகிறேன்.

Tuesday, November 25, 2003

மஞ்சள் மகிமை


நான் சமைக்க வெளிக்கிட்டா குசினில கட்டாயம் இருக்கவேண்டிய சாமான் மஞ்சள்தூள். எங்கட ஊரில மஞ்சள்தூள் சமையலுக்கு பயன்படுத்துறவைதான் ஆனா, நானும் நீங்களும் பயன்படுத்துறமாதிரி இல்ல. மிளகாய்த்தூளில, மற்றது வெள்ளைக்கறிகளிலயும் பயன்படுத்துவினம். எங்கட ஊர் மிளகாய்த்தூளைப்பற்றி உங்களுக்குத்தெரியுமோ தெரியாது. மிளகாய், மல்லி எல்லாம் தனியத்தனிய அரைச்சு வைக்கிறதில்லை நாங்கள். ஊரிலயும் சென்னையிலயும் மிளகாய்த்தூளை மில்லில குடுத்து அரைப்பிப்பினம். எனக்குத்தெரிஞ்சு எங்கட ஊர்மிளகாய்த்தூளில, மிளகாய், மல்லி, பெருஞ்சீரகம், சின்னச்சீரகம், வெந்தயம், மஞ்சள் துண்டு, கொஞ்சம் அரிசி, கருவேப்பிலை எல்லாம் வறுத்து சேர்ப்பினம். கனடாவிலயும், இங்கிலாந்து, ஜேர்மனி, அமெரிக்காவிலயும் மிளகாய்த்தூளை கடையில வாங்கலாம். அதிலயும் நிறைய பிராண்ட் இருக்கு. 'நிரு' எண்ட பிராண்ட்தான் நல்லமெண்டு ஆக்கள் சொல்லீனம். நீங்க வீட்டுக்கு வந்தாலும் அந்த மிளகாய்த்தூளிலதான் கறிகாய்ச்சித்தரப்படும். :)

சரி மஞ்சள்தூளைப்பற்றித்தான் கதைக்கவந்தனான் நான். மஞ்சள்தூளை நான் பயன்படுத்துறமாதிரிதான் பெங்காலிகளும் எல்லாக்கறிகளுக்குள்ளயும் போடுறவை. என்ர ரூம்-மேட் ஒரு ஆள் பெங்காலி எண்டபடியா, எங்களுக்குள்ள பிரச்சினையே இல்ல. இப்பித்தான் ஒரு நாள் நான் சைனா-டவுனுக்குப் போயிருக்கேக்க அங்கயிருந்த தாய்லாந்துக்காரரின்ற கடையில அம்மா பயன்படுத்துறமாதிரி ஒரு வஸ்துவைக்கண்டன். எடுத்து மணந்து பார்த்தா, அதே கஸ்தூரி மஞ்சள் வாசம். கடைக்காரி என்னைப்பார்த்து சிரிக்கிறா. என்ன இது எண்டு கேட்டா. மஞ்சள்தானாம். பெயர் Kha-min. 'தாய்' கறிகளில உடன அரைச்சுப்போடுறவையாம். தாய் சிக்கன் கறி சாப்பிட்டு இருப்பீங்க. நான் பேஸ்ட்-தான் வாங்கிறனான். சிவப்பு பேஸ்ட். அதில மஞ்சள் பேஸ்டும், பச்சை பேஸ்டும் இருக்கு. சிவப்புத்தான் உள்ளதுக்குள்ள உறைப்புக் கூடினது.


நீங்க வியன்நாமீஸ் உணவுக்கடைகளில் சாப்பிட்டிருக்கிறீங்களா? அவர்களுடைய Pho சூப்பிற்கு அடிமை நான். அதிலும் நம்முடைய மஞ்சள் அரைக்கப்பட்டு சேர்க்கப்படுகிறது. மஞ்சள்கிழங்கு கிடைக்கவில்லை என்றால் மஞ்சள்பொடியைச் சேர்ப்பார்கள். அவர்கள் மஞ்சள்கிழங்கை Cu nghe, மஞ்சள்தூளை Bot nghe என்று சொல்வார்கள்.

சீன உணவு இருக்கிறதே அதில் சில சூப்புகளிலும் அரிசியிலும் மஞ்சள்தூள் சேர்க்கிறார்கள். மஞ்சள் இந்தியாவைச்சேர்ந்தது என்றாலும் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு மார்க்கோபோலோ சீனா சென்றபோது அங்கே மஞ்சள் பயன்படுத்துவதைக்கண்டு, குங்குமப்பூவிற்கு பதிலாகப்பயன்படுத்துக்கூடியது என்று சொல்லி இருக்கிறார். சீனமருத்துவத்திலும் Wong Geung பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல மத்தியகிழக்கு நாடுகள், எதியோப்பியா எங்கும் பலநூறு ஆண்டுகளாக மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கெல்லாம் தென்கிழக்காசிய நாடுகளைப்போல மஞ்சள் கலந்த அரிசி மங்கலப்பொருளாகக் கருதப்படுகிறது.

நம்மட ஊர்ல மஞ்சள் வேறென்னத்துக்கு பயன்படுத்தீனம்? மஞ்சள்தூளைக் நிறையத்தண்ணீரில் கலந்து வீடுகளில் தெளிப்பதைப் பார்த்திருக்கிறேன். பெண்கள் அழகுக்காக பயன்படுத்துகிறார்கள். முன்பு கஸ்தூரிமஞ்சள், பிறகு விக்கோ டெர்மரிக் கிரீம் (இப்பவுமா? இல்லையெண்டுதான் நினைக்கிறன்.) தலையிடி காய்ச்சலெண்டா பாலில விட்டுத்தருவினம். அதே விஷயத்துக்கு சுடுதண்ணீல மஞ்சள்தூளைப்போட்டு வேதுவிடச்சொல்லுவினம். இப்படி சங்கிலித்தொடராய் நிறைய சொல்லியண்டுபோகலாம்.

மார்க்கோபோலோ மஞ்சள்மகிமை பற்றி எழுதி ஏறக்குறைய எண்ணூறு வருஷம் கழிச்சுத்தான் விஞ்ஞானிகள் மஞ்சளின்ற மருத்துவ குணங்களை ஆராயீனம். ஆர்த்தரைடிஸ் இருக்கிற ஆக்களுக்கு நோக்குறைச்சு, வீக்கத்தைக்குறைக்கிறதுக்கு மஞ்சளில் இருக்கிற வேதியல் பொருள் உதவி செய்யுதாம். Curcumin என்ற அந்த வேதியல் பொருளின் பெயர் ஐரோப்பிய நாடுகளில் மஞ்சளைப்பற்றிச் சொல்லும் பெயரை ஒத்து இருக்கிறது. Curcuminதான் மஞ்சளுக்கு அந்த நிறத்தை அளிக்கிறது.

மேலும் ஆராய்ச்சியில் Curcumin கான்சர் செல்களை தந்திரமாக அளித்துவிடுவதைக்கண்டு பிடித்திருக்கிறார்கள். அப்படி செய்யப்பட்ட ஒரு சோதனையில் வாயில் கான்சர் வந்தவர்களுக்கு ஒன்பதுமாதத்தில் புண்கள் எல்லாம் ஆறிவிட்டதை நிரூபித்திருக்கிறார்கள்.

இங்கிலாந்துப்பத்திரிகைகள் அவ்வப்போது "Curry: The New Wonder Drug" என்று எழுதிவருகிறார்கள். அடுத்தமுறை சமைக்கும்போது கொஞ்சம் கூட மஞ்சளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வரட்டா....

Wednesday, November 19, 2003

கர்ணன் பேசுகிறேன்மாதவன் தந்த வரத்தால்
ஆதவனை அழைத்தாய்
சூதறியா நாளில்.. இந்தப்
பாதகனை படைத்தாய்

சொல் தாயே
பெற்றதன் பாவம் ஆற்றில்
விட்டதும் போகும் என்று
சொன்னது யார்

அன்பை காணும் வகையற்று
பண்பில் வாழும் நிலைவிட்டு
ஆற்றில் மனம் ஆறும் என்றா
என்னை துரத்தி வைத்தாய்

சொல் தாயே
உணர்ச்சிகள் மறைத்து வாழ்ந்தால்
உலகம் உய்யும் என்று
சொன்னது யார்

கனவுகளில் உனைத் தேடி
நினைவுகளில் நிதம் எனைத் தேடி
தொலைந்த மனமும் கலைந்த கனவும்
என் வாழ்வின் அடையாளம் என்றாய்

சொல் தாயே
இருக்கும் நேரம் மறந்தாய்
இறக்கும் நேரமேனும்
அடையாளம் தர வருவாயா

-----------------

இன்று மரத்தடியில் ஐயப்பன் எழுதிய கவிதை இது. தொடர்ந்து நடந்த விவாதத்தின்போது ஹரி கிருஷ்ணன் அவர்கள், மகாபாரதத்தில் கர்ணனைப்பிடிக்கும் என்று சொன்னவர்களிடம் ஏன் என்று சொல்லமுடியுமா என்று கேட்டார்.

நான் சொன்னது
கர்ணனை எதுக்காகவெல்லாம் பிடிக்கிறது?

ஆரம்பிக்கிறதுக்கு முதல் ஒன்றைச்சொல்லோணும். சின்னவயதில் பார்த்து, பிறகு அடிக்கடி பார்க்கும்(டேப் தேய்ந்துப்போகும் அளவுக்கு) 'கர்ணன்' படந்தான் கர்ணனை பிடிச்சுப்போக காரணம். அதுவும், குந்தி வந்து கூப்பிடும்போது போகாத கர்ணனும், கடைசியில் கண்ணன் வந்துகேட்கும்போது இல்லையென்று சொல்லக்கூடாது என்பதற்காக, தன்னுடைய தானதர்ம புண்ணியங்களைக் கொடுக்கும் கர்ணன். இதுக்காகவே அர்ச்சுனனைப் பிடிக்காமப்போச்சு.

இராமாயணம்பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு, சக்கரவர்த்தித்திருமகன் கிடைச்சாமாதிரி, மகாபாரதத்திற்கும் ஒரு புத்தகம் கிடைத்தது. பெயர் மறந்துபோய்விட்டது.

1. அம்மா செஞ்ச தப்புக்கு பிறந்த உடனேயே தண்டனை அனுபவிக்கும் குழந்தை.

2. தேரோட்டி வீட்டில் வளர்ந்தாலும், முன்னேறத்துடிக்கும் குணம்.

3. ஒரு முறை துரோணரிடம் சீடனாக வரக்கேட்டு அவர் மறுத்தமாதிரி ஞாபகம். (நினைவில் இருந்து சொல்வதால், everything is quite hazy :( )

4. எப்படியோ வில்வித்தை, இத்யாதி கற்று, போட்டியில் கலந்துகொள்ளமுடியாமல் இருந்து, கடைசியில் கிடைத்த சந்தர்ப்பத்தை பற்றிக்கொண்டவிதம்.

5. அங்கே அவமானப்பட்டு, போட்டியில் கலந்துகொள்ளமுடியாமல்போக இருக்கும்போது, தன் லாபத்துக்காக கர்ணனை மன்னனாக்கும் துரியோதனனுக்கு நன்றி மறவாதிருத்தல். இங்கே கொஞ்சம்/நிறையவே இடிப்பது. நண்பனுக்கு ஏன் அறிவுரை சொல்லவில்லை என்பது. சிலசமயம் எனக்குநானே சொல்லிக்கொள்வது -
தேரோட்டிமகனான தனக்கு அரசர் பதவி கொடுத்த நண்பனுக்கு அறிவுரை சொல்வதா என்று கர்ணன் எண்ணியிருக்கலாம் என்பது.

6. துரியோதனன் உதவியால் அரசனானாலும் பெரியவர்களால் அவ்வப்போது அவமானப்படுத்தப்படும் கர்ணன் - வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மேலோட்டமாகவாவது அவமானப்படுத்தப்பட்டிருக்கிறான். அதனால்தான், பீஷ்மர் வீழ்ந்தபின்னரே களத்தில் இறங்குவேன் என்று சூழுரைத்தான். அதே கர்ணன், பீஷ்
மரை அம்புப்படுக்கையில் இருக்கும்போது சென்று சந்திக்கிறான் (உபயம்: மகாபாரதா
தொலைக்காட்சித் தொடர்)

7. எல்லாவற்றிற்கும் மேலாக, குந்தி வந்து அழைத்தபோது செல்லமறுத்து, தோற்போம் என்பது தெரிந்தே நண்பனுக்குத் துணையாக நின்றது. இது ரொம்ப ரொம்ப பிடித்த விஷயம்.

இன்னொன்று: எல்லாரும் என்னை ரவுண்டு கட்டி அடிக்கலாம். ஆனால், கர்ணன் என்று நினைத்தால் சிவாஜிமுகத்துடனே ஒரு பிம்பம் வருகிறது.


Tuesday, November 18, 2003

அழைப்புதூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்
பாதில் இரவினிலும் பட்டப்பகலின் அனலினிலும்
மோதித் தெறித்து
மெல்ல முனகி அழுவதுபோல்
தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்

பக்கத்தில் ஒரு கேயில்
அதன்பக்கத்தில் ஒரு அரவு-
சொர்க்கத்தின் வழிபோல
இலை சோவெனக் கலகலக்கும்.
சற்று அப்பால் ஆலைகளில்
சருகுதிரும்.
இடைவெளியில் திக்கற்ற கன்றொன்று
தாயைத் தேடிவரும் - அப்போதும்,
தூரத்தில் நான் கேட்டேன்.

உலகருகே நிற்பேன்,
ஊரைக்காவலிடும் தென்னைகளில்
படரும் இருள் தூரத்தில்
அஞ்சிப்பறக்கும் சிலபறவை
தொடரவரும் பிறப்பெல்லாம்
எங்கோ தூரத்தில் கேட்டதுபோல்
குரலும் அதுகேட்கும்
என் குழந்தை நினைவெல்லாம்
தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்

- சண்முகம் சிவலிங்கம்.

('நீர்வளையங்கள்' கவிதைத்தொகுப்பு)

Sunday, November 16, 2003

நேரமோ நேரம் - 6வெண்மணற்பரப்பை நோக்கி ஓடிவரும் நீல அலைகள், கூட்டை நோக்கிப்பறக்கும் பறவைகள், இதமாக வருடும் காற்று, முகில்கள் இல்லாத அந்திவானில் மெதுவாக விடைபெறும் சூரியன். சூரியன் மறையும் அந்த நேரத்தில் லேசாக ஒளிவிடத்தொடங்கும் விளக்குகள். அலுவலக நேரம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் மனிதர்கள் - பறவைகளைப்போலவே.

அதே நேரத்தில் உலகின் மறுமுனையில் இதமான காலைக்காற்று வீச, அந்தக்காற்றில் தென்னை, மா, வேப்பமரங்கள் ஆட, கீச் கீச்சென்று ஒலி எழுப்பியவாறே தங்கள் பொழுதைத்தொடங்கும் பறவைகள், பறவைகளின் ஒலியினூடே காற்றில் தவழ்ந்து வரும் சுப்ரபாதம், இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே எழும்பி வரும் சூரியன், அந்த சூரிய ஒளியில் தகதகவென மினுங்கும் கோவில் கோபுரம். சோம்பல் முறித்தபடியே எழுந்திருக்கும் மக்கள், சூரியனுக்கு முன்பெழுந்து படிக்கும் மாணவர்கள், அவர்களின் தாயார்கள். குளித்து சுத்தமாக கோயிலுக்குப்போகும் பக்தர்கள். வயலுக்கு செல்லும் விவசாயிகள்.

மனிதர் பூமியில் நடமாடத்தொடங்கியதுமுதல், பகல்வேளையே நேரத்தினை அவனுக்கு காட்டும் காரணி. அதிகாலையில் உதித்து, அந்திமாலையில் விடைபெறும் சூரியனைப்போல மனிதனை கட்டுப்படுத்தும் நேர அளவு/காரணி (indicator - வழக்கம்போல யாராவது தமிழ்பதம் சொல்லுங்கப்பா) வேறெதுவும் இல்லை என்பேன்

அதிகாலையில் மாட்டில் பால்கறந்து, வயல் உழுது, சந்தையில் சாமான்களை விற்று, தொழிற்சாலையிலோ, பணியகத்திலோ வாடி, கணினியில் லொட்டுடொட்டென்று தட்டிக்கொண்டிருக்கிறான். சூரியன் மேலெழ மேலெழ, மனிதனின் உற்பத்தித்திறனும் அதிகரிக்கிறது. அப்படியே சூரியன் வானத்தில் கீழிறங்கும்போது, என்ன நடக்கிறது? உற்பத்தித்திறன் குறைகிறது. சிலர், காப்பித்தண்ணிபோன்ற (சரி சரி. லத்தே, மோக்கா, எஸ்பிரஸ்ஸோ. ஓகேவா?) செயற்கைகாரணிகளால் தங்களைத்தாங்களே உற்சாகமூட்டிக்கொள்கிறார்கள்.

சூரியன் மறையும் நேரத்தில், ஆடு மாடுகள் ஓய்வெடுத்துக்கொள்கின்றன. சந்தைகள், கடைகள் மூடப்படுகிறது. அதேநேரத்தில் உணவுவிடுதிகளும், காப்பிஷாப்புகள், பப் போன்றவற்றில் விற்பனை அதிகரிக்கின்றது. குடும்பஸ்தர்கள் கூடுநோக்கிப்பறக்கிறார்கள். சில மணிநேரத்தில் இருள்நன்குபரவியபிறகு, அந்தப்பிராந்திய மக்கள் உறங்கப்போகிறார்கள். அடுத்த நாளைக்காக தங்களைத்தயார் செய்துகொள்கிறார்கள். விழித்துக்கொண்டிருப்பது, என்னைப்போன்ற சில ஆந்தைகளும், செயற்கை விளக்குகளுமே.

அதேநேரத்தில், உலகின் அடுத்த பக்கத்தில், அடுத்த நாள் உதயமாகிறது. இன்னொரு சுழல் தொடங்குகிறது.

Friday, November 14, 2003

தையலின் தையல்வேலைசுபாஷ் பஜாரில் ஏகப்பட்ட விளக்குகள். முருகன் ஜவுளி வாசலில் வழியோடு போகிறவர்களை வருந்தி வருந்தி அழைத்துக் கொண்டு நின்றார்கள். ஒருவன் ரிக்ஷாவுக்குள் நோட்டீசைத் திணித்தான். மலிவான விலையில் டெர்லின், கிரேப் மெட்டீரியல்.

எல்லோரிடமும் டெர்லின் சட்டை இருக்கிறது. பெரும்பாலும் சந்தன நிறத்தில். இந்த வருடமும் என் டெர்லின் கோரிக்கை வீட்டுப் பெரியவர்களால் உறுதியாக நிராகரிக்கப்பட்டது.

டெர்லின், போன பிறவியில் புண்ணியம் செய்தவர்களுக்கு. எனக்கு வேண்டிய துணிகளை சப்ளை செய்யவே மூக்கையாச் செட்டியார் அவதாரம் எடுத்திருக்கிறார். முழங்காலுக்கு மேலே வழிகிற டிராயரும், முழங்கைக்குக் கீழே இறங்கின சட்டையும் தைத்துக் கொடுக்க குருசாமி டெய்லர் இருக்கிறார்.

போன வாரமே, கொளகொளவென்று தைத்து அம்மா ரவிக்கைகளோடு பிரிமணை மாதிரிச் சுற்றிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

"ஏதாவது மாத்தணும்னா, இப்ப எடுத்துட்டு வந்துடாதீங்க. ஏகப்பட்ட துணி விளுந்து கெடக்குது. தீபாவளிக்கு அப்புறம் தாங்க".

இது அம்மாவுக்கு. என் துணிகள் குருசாமியிடம் திரும்பப் போவதே இல்லை.

- எழுத்தாளர் இரா.முருகனின் "ஒரு கோடீஸ்வரன்-ஒரு தீபாவளி" கதையில் இருந்து.

oru buildup photoமூளையைக்கசக்கி யோசித்தால், ஆரம்பத்திலிருந்து ஒன்பதாவது படிக்கும்வரைக்கும் என்னுடைய உடைகளை தைத்துத்தந்தது அம்மாதான். எப்பவாவது வெளியில் டெய்லரிடம் கொடுக்கப்படும். புங்குடுதீவில், பக்கத்தில் இருக்கும் ஒரு அக்காவிடம் கொடுத்து தைக்கப்பட்ட ஏராளமான லேஸ் வைத்த சட்டைகளை ரொம்பவும் பிரியத்துடன் போட்டுக்கொண்டு மயில் தோகையை வைத்துக்கொண்டு அலட்டியதுபோல அலட்டி இருக்கிறேன். அவ்வப்போது வெளியில் இருந்து யாராவது வந்தால் கொண்டு வரும் ·பிராக்குகளும், அப்பாவோடு போயிருந்தபோது வாங்கிய மிச்ச உடைகளும் தனி.

அதுவும் சென்னை வந்து, 'தனித்தன்மை' என்ற சமாச்சாரம் தலைதூக்கியபோது கடைக்கு சென்று சுடிதாருக்கு துணி எடுக்கும்போது விக்கிக்கும் எனக்கும் ஒரே மாதிரி வாங்கவேண்டாம் என்று மல்லுக்கு நின்றது. என்னுடையதுமாதிரியே ஆனால் வேறு நிறத்தில் அவளுக்கு வாங்க, அதையெல்லாம் நான் போடும் நாட்களில் போடவேண்டாம் என்று சொல்லியும் போட்டுக்கொண்டு வருபவளோடு குடுமிப்பிடி சண்டையில் இறங்கியது என்று எத்தனையோ கதைகள் உண்டு. (மல்லுக்கு நின்று அலுத்துப்போய், எல்லாரும் உடுத்தபிறகு வெளிக்கிட்ட நாட்களும் உண்டு. - எல்லாருக்கும் மலரும் நினைவுகள் வரும் என்று நினைக்கிறேன்... உனக்குந்தான் விக்கி... சரி சரி முறைக்காதே!)

அம்மாவிடம் துணி தைக்கக்குடுத்தால் நிறைய பிரச்சினைகள். தைத்துமுடிக்கும்வரை, அவவுக்கு எடுபடி வேலை செய்யோணும். 'தையல் பழகச்சொன்னா கேட்டாத்தானே, இப்ப, இப்படி நிக்கத்தேவையில்ல' என்ற போதனைகள். (அதெல்லாம் காதுல ஏறும்னு நினைக்கிறீங்க. ம்ஹ¥ம்...) தைக்கத்தொடங்கிற்றா எண்டா - அதெப்படி சனி, ஞாயிறுல மட்டும்தான் தைக்கிறதுக்கு நேரம் கிடைக்குமெண்டு தெரியேல்ல. அண்டையான் சமையல் செய்யோணும். அதுவும் எனக்கு சமைக்கவெளிக்கிட்டனெண்டால் ஒரு எடுபிடி தேவை - அதாங்க Sous Chef. 'விக்கி, வெங்காயம் உடை', 'உள்ளி உரி', 'தேங்காய் திருவு', 'இந்தச்சட்டியைக்கழுவு' இத்யாதி! இத்யாதி!!

இப்படிக் கரணமாடி, கடைசில சுடிதார் கைக்கு வரேக்க, நான் சொன்ன பாட்டேர்ன் இருக்காது. அல்லது ஒருக்கா விக்கின்ற பிறந்தநாள் சுடிதார் மாதிர் கழுத்து 'ஙே' எண்டு முழிக்கும். 'ஒப்பரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் டையிட்' மாதிரி சுடிதார் நல்லாத்தான் இருக்கும் - கழுத்தை விட. 'கழுத்து நல்லாயில்லை', 'கழுத்தை ஒழுங்கா வெட்டித்தைக்கத்தெரியேல்ல - தைக்க வெளிக்கிட்டுட்டா', 'தைக்கத்தெரியும் எண்டு வெளியிலை சொல்லாதேங்கோ', 'எல்லாம் அன்னமுத்து (என்ற அம்மம்மா) கொடுத்த செல்லம்' என்ற பொருமல்கள் சகஜம்.

naanum ivaiya maathiri kaiyaalathaan thaichanaan :Dஇந்தப்பிரச்சினையே வேண்டாம் எண்டு சூளுரைச்சிற்று, தேடுதெண்டு தேடி ஒரு நல்ல டெய்லரைக்கண்டு பிடிச்சதில இருந்துதான் நிம்மதி. அதுவும் ·பௌண்டன் பிளாசாவுக்கு முன்னுக்கு விக்கிற பிளாட்·போர்ம் துணி - முதன்முதல்ல வாங்கப்போகேக்க மீட்டர் 15 ரூபாய். நானும் வித்யாவும் கையில ஒரு சுடிதார் வாங்குறதுக்கு வச்சிருந்த காசில மூண்டு சுடிதாருக்கு துணி வாங்கினனாங்க. பிறகு கொஞ்சங்கொஞ்சமா அதை டெயிலரிட்ட குடுத்து தைப்பிச்சது தனிக்கதை.

சரி ஏன் இண்டைக்கு இந்தப்புராணம் எண்டு கேக்குறீங்களா? மான்ரியலில் உடுப்புத்தைக்கும் தொழிற்சாலைகள் அதிகமாம். அதோட தயார்செய்யும் இடங்களும் இங்கே இருக்கு எண்டு சொல்லி ஒரு பிரண்டோட போனகிழமை போயிற்றுவந்தன். வுல் கோட்டு, Mexx நிறுவனத்தின் இடம் என்று ஒரு சுற்றுலா. அந்த இடத்தில் ஒரு கடையில துணிகளும் வித்தண்டு இருந்திச்சினம். நிறைய இத்தாலியன் பொம்பிளைகள் துணி வாங்கியண்டு நிண்டிச்சினம். அதில ஒரு துணி - சட்டை தைக்கும் அளவு வாங்கியண்டு வந்து ஒரு பரிசோதனை நடந்தது. ஒரு கிழமையா நடந்த பரிசோதனை முயற்சி நேற்றுத்தான் முடிவுக்கு வந்தது.

போட்டுப்பார்த்தன். நல்ல மரூன் நிறம். எல்லாம் சூப்பர் - ஒண்டத்தவிர. கழுத்து 'ஙே...' எண்டு என்னைப்பார்த்து முழிச்சுது!

Wednesday, November 12, 2003

நட்பு - 1வெள்ளை யூனி·பார்ம், பாப் தலை, காலில் கறுப்பு ஷ¥ இதுதான், நான் மூன்றாம் வகுப்புவரை படித்த 'பிஷப்ஸ் காண்வெண்டின்' சீருடை. அதற்குமுதல் வேறுமாதிரியான ('ப' வடிவமுள்ள கழுத்தும், வினோதமான பாட்ஜும்) சீருடை போட்டுக்கொண்டு வேறு ஏதோ ஒரு பள்ளிக்கூடத்திற்குப்போனது ஞாபகம் இருக்கிறது. இரண்டு-மூன்று நாட்களே போனதாக பிறகு சொல்லிச்சினம்.

பள்ளிக்கூடத்தில் காண்டீன் ஞாபகம் இருக்கு. முதலாம், இரண்டாம் வகுப்புப்பிள்ளைகளுக்கு காண்டீன்ல என்ன வேலையெண்டு கேக்காதீங்க. எனக்கும்தெரியாது. யோசிக்கிறன். வீட்டில, பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும்வரையில் கையில் காசு தரயில்லை. பியானோக்குப்பக்கத்தில நிண்டு ஏதோ இரைஞ்சது, ஏதாவது விழா எண்டா, வெக்கப்படாம ஆட்டம், பாட்டத்தில சேர்ரது, வித்தியாசமான முறையில் சுலபமாகப்புரிந்துகொள்ளும் முறையில் ஆங்கிலம் சொல்லித்தந்தது இதெல்லாம் ஞாபகம் இருக்கு.

school athuthaan, aanaa naan ithula illai

இதோட இன்னும் ஒண்டும் ஞாபகம் இருக்கு. ஆட்டம் பாட்டம் எல்லாத்திலையும் சேர்ரனான் எண்டு சொன்னனான்தானே. அதில, சில பிள்ளைகளின்ற அம்மாமார், உதவிக்கு வருவினம். இரண்டாம் வகுப்பிலயோ, மூண்டாம் வகுப்பிலயோ சிங்கள டான்ஸெல்லாம் ஆடினது லேசா ஏதோ ஒரு மூலையில் ஞாபகம் வருகுது. அந்த டான்ஸ¤க்கு முழுக்கமுழுக்க உதவியா இருந்தது 'சுனேகா' எண்ட ஒரு பிள்ளையிண்ட அம்மாதான். அவ, ஒவ்வொருத்தரிண்ட உடுப்பையும் எப்படிப்பிடிச்சு விட்டவ, எண்டெல்லாம் ஞாபகம் இருக்கண்டா பாருங்களன்.

ippidithaan oru kaalathilai naangalum nindanaangal

அதுக்குப்பிறகு, அப்பா யேமனுக்குப்போக, ஹொஸ்டல்'ல இருக்கமாட்டனெண்டு அடம்பிடிச்சு, அழுதுகுழறி புங்குடுதீவுக்குப்போய் சேர்ந்திட்டன். அங்கயும், யேமனிலயும் இரண்டரை வருசம் இருந்தபிறகு, யாழ்ப்பாணம் 'வேம்படி மகளிர் கல்லூரியில்' ஆறாம் வகுப்பு, ஹொஸ்டலில் சேர்ந்தன். சேர்ந்து, ஆறுமாசத்தில பிரச்சினைவந்து, நிறையப்பிள்ளைகள் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தவை. அதில கொஞ்சப்பேர் எங்கட வகுப்பிலயும் வந்தவை. அந்தப்பிள்ளைகளில ஒரு ஆளை எங்கயோ கண்டதுபோல இருந்துது.

அவவும் என்னைப்பாத்தண்டே இருந்தா... சினிமாப்படங்களில வர்ர மாதிரி, பள்ளிக்கூடத்தில இருக்கிற ஒரு மரத்துக்குக்கீழதான், நாங்கள் கதைச்சம். 'நீர்.....' எண்டு அவ இழுக்க, நானும் முழிக்க. நல்ல ஜோக்! பிறகு, அவ என்னைப்பார்த்து, 'நீர் கொழும்பில் இருந்தனீரா?' எண்டு கேக்க, நான் ஓமெண்டு தலையாட்டீட்டு, நாங்க படிச்சபள்ளிக்கூடத்தின்ற பெயரைச்சொல்லிற்று அவவைப்பாத்தன். பிறகு அவதான், சுனேகா எண்டு எல்லாரிட்டயும் அறிமுகப்படுத்தி வச்சு, நான் இந்தியா வெளிக்கிடும்வரைக்கும் ஒண்டாத்திரிஞ்சம்.


Songs Sectionபசுமை நிறைந்த நினைவுகளே

Music India Online

Cool Goose - mp3


Monday, November 10, 2003
நேரம்பற்றிக்கதைப்பதை கொஞ்சம் நிறுத்திவிட்டு, இன்னொரு விஷயம் சொல்கிறேன். உங்களில் சிலருக்குத்தெரிந்திருக்கலாம்.

இணையத்தில் இருக்கும் யாகூ குழுக்களைப்பற்றி உங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவற்றில், தமிழ் திரையிசைக்கென்று ஒரு குழு இருப்பது உங்களுக்குத்தெரியுமா? பாலாஜி ஸ்ரீனிவாசனின்http://groups.yahoo.com/group/tfmpagesotd/
நீங்களும் சேர்ந்து தனமும் காலையில் ஒரு பாடலைக்கேட்டு அனுபவிக்கலாம். பாலாஜியின் இசை குறித்த இணையத்தளங்கள் இரண்டு.
ஒன்று http://www.tfmpage.com/home.html, மற்றது http://www.dhool.com/இதைத்தவிர மன்றமையம் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அதாங்க Forum Hub. பல அருமையான இழைகள் கிடைக்கும். கம்பராமயணத்திலிருந்து, வெண்பா இலக்கணத்திலிருந்து, திரையிசைவரைக்கும்.

Friday, November 07, 2003

நேரமோ நேரம் - 5malligai

நாம நேரம் சொல்லுறது இருக்கட்டும். இந்தப்பூக்கள் எல்லாம் எப்படி நேரம் கண்டுபிடிக்குது எண்டு யாருக்காவது தெரியுமா? மாலையில் விரியத்தொடங்கும் மல்லிகை, முல்லைப்பூக்கள்தான் ஞாபகத்துக்கு வருகுது. செம்பருத்தியும் இரவில லேசா விரியத்தொடங்கும். காலமை வந்து பாத்தா நல்லா விரிஞ்சு இருக்கும்.

ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு நேரத்தில விரியும் எண்டு உங்களுக்கெல்லாம் தெரியும். இந்தப்பூக்களையெல்லாம் வச்சு ஒரு மணிக்கூடு செய்யோணுமெண்ட யோசனை ஸ்வீடன் நாட்டு Carl Linnaeusத்தான் முதலில் வந்ததாம்.

Linnaeus' Flower Clock

அவர் முதலில ஒவ்வொரு பூவும் பூக்கிற நேரத்தைக்குறிச்சேராம். பிறகு உள்ளூரில கிடைக்கக்கூடிய, மழை-குளிர் நாட்களில கூட பூக்கக்கூடிய பூச்செடிகளை தெரிவுசெஞ்சு மணிக்கூடு வடிவத்தில நட்டேராம்.

கார்ல் லின்னௌஸ்க்குப்பிறகு நிறையப்பேர் இந்தமாதிரி மணிக்கூடுகளை பூங்காக்களில செய்யத்தொடங்கிச்சினமாம். நான் இதுமாதிரியான மணிக்கூட்டைப்பார்த்ததில்லை. எனக்குத்தெரிஞ்சதெல்லாம், மணிக்கூடு வடிவத்தில் பூங்காக்களில் இருக்கிற பெரிய அளவு மணித்தியால, நிமிட முள்ளுகள்கொண்ட மணிக்கூடுதான்.

Normal flowerclock

நான் தந்திருக்கும் படத்தில் உள்ள பூக்களின் விவரம் இதோ.


6 a.m. Spotted cat's ear (opens)
7 a.m. African marigold (opens)
8 a.m. Mouse-ear hawkweed (opens)
9 a.m. Prickly sow thistle (closes)
10 a.m. Common nipplewort (closes)
11 a.m. Star-of-Bethlehem (opens)
Noon Passion flower (opens)
1 p.m. Childing pink (closes)
2 p.m. Scarlet pimpernel (closes)
3 p.m. Hawkbit (closes)
4 p.m. Small bindweed (closes)
5 p.m. White water lily (closes)
6 p.m. Evening primrose (opens)


Wednesday, November 05, 2003

நேரமோ நேரம் - 4

சூள்இலங்கையே ஒரு தீவு. அதுக்குள்ள எங்கட ஊர் இன்னொரு குட்டித்தீவெண்டு உங்களுக்குத்தெரியும்தானே. வடக்குப்பக்கத்தில அந்த நாளைல, எங்கட அப்பா சின்னப்பிள்ளையா இருந்தபோது சிலர் எப்படி மீன்பிடிக்கிறவை எண்டு சொன்னேர். கூட ஒரு சின்னத்துணுக்கும். இண்டைக்கு அதை உங்களோட பகிர்ந்துகொள்ளுறன்.

Jaffna (W) Punguduthivu"

கடல் சூழ்ந்து இருக்கிறபடியா எங்கட சாப்பாட்டில செவ்வாய், வெள்ளி தவிர்த்து மற்ற நாளெல்லாம் மீன் முக்கிய உணவு. மீன்பிடிக்கிறதில நிறைய விதம் இருக்கு. இண்டைக்கு நான் சொல்லப்போறது அந்தக்காலத்தில ஆக்கள் மீன்பிடிச்ச ஒருவிதம் பற்றி. எங்கட ஊர்ல தென்னை மரங்களும் பனைமரங்களும் நிறையத்தானே. நல்லாக்காஞ்ச தென்னோலைகளை எடுத்து ஒண்டுக்குள்ள இன்னொண்டை வச்சு நல்லாக்கட்டுவினமாம். அடிக்கொரு தரம் நல்லாக்கட்டுவினமாம். இப்படி இறுக்கிக்கட்டின தென்னோலை சரியான பாரமெண்டுதான் நினைக்கிறேன். எத்தனை தென்னோலை சேர்த்துக்கட்டுவினம் எண்டு அப்பாவுக்கு சரியாத்தெரியேல்லை.

இப்படி இறுக்கிக்கட்டின தென்னோலையை ஒரு ஆள் பிடிச்சண்டு இடுப்பில பறியோட நல்லா இருட்டு வந்தபிறகு ஏறக்குறைய எட்டுமணியப்பிடித்தான் கடலுக்குள்ள இறங்குவினமாம். இன்னொரு கையில கரப்பு எண்டு சொல்லுற சாமான். அப்பா சொல்லுறதைப்பார்க்கேக்கை. அது, நாம் கோழிகளைப்போட்டு பிடிச்சு அடைச்சுவப்பமே, அதுபோல இருக்கும் எண்டு நினைக்கிறன். ஆனா, கடலில மீன்களை பிடிச்சு வைக்கிறதுக்கு. இதோட, இடுப்பில கத்தியும்.

'ஒன் மேன் ஆர்மி'போல இத்தனை சாமான்களையும் ஒரு ஆள்தான் தூக்கியண்டு கடலில இறங்கோணும். அந்த நல்லாக்கட்டின தென்னோலை இருக்கல்லா, அதின்ற நுனியில நெருப்பு பத்தவச்சிருவினமாம். நெருப்பு மெலிசாத்தானாம் எரியுமாம். முழங்காலழவு தண்ணில போய் நிண்டுவிருவினமாம். இரவில இந்த நெருப்பு வெளிச்சத்துக்கு மீன்கள் எல்லாம் வருமாம். வர்ர மீன்களைப்பிடிக்கத்தான், கரப்பு. இல்லாட்டி கைல இருக்கிற கத்தியால அடிப்பினமாம். பிடிச்சமீன்களைப்போடத்தான் இடுப்பில் பின்புறம் கட்டின பறி.

மீன்

மிகவும் மெதுவாக எரியிற சூள், கட்டுப்போட்டிருக்கிற இடத்துக்கு வந்தோட நூந்துபோகுமாம். அந்தக்கட்டை கத்தியால வெட்டிவிட்டபிறகு திருப்பி எரியவிடவேணுமாம். மொத்தமாக அந்த சூள் எரிஞ்சுமுடிக்க ஒரு ஒண்டரை மணித்தியாலம் எடுக்குமாம்.

இப்படித்தான் ஒரு நாள் ஒரு மீனவன் சூள் பிடிச்சண்டு இருக்கேக்க (ஓ, இங்க வந்து சூள் எண்டு சொல்லுறனெல்லே. இப்பிடித்தான் அப்பாவும் சொன்னவர்.) கரையில ஒரு ஆள் ஓடுறதைப்பார்த்தவனாம். அந்தக்காலத்தில (நூறுவருசம் இருக்குமெண்டு அப்பா சொன்னேர்) சனம், மின்சாரம் இல்லாத நேரத்தில இரவில புழங்கிறது இல்லைத்தானே. ஆனபடியா, மீன்பிடிகாரனும் இப்படி ஒரு ஆள் ஓடுறதைப்பார்த்தவனாம். அவனுக்கு அடுத்தநாள்தான் தெரிஞ்சது, ஊரில ஒரு கொலை நடந்திற்றுது எண்டு. கொலைகாரனும் பிடிபட்டுட்டான். இந்த மீன்பிடிகாரன், தான் ஒரு ஆளைக்கண்டதா சொன்னபடியா, நீதவான் இவனையும் கூப்பிட்டனுப்பினேர்.

நீதவான், இந்த மீன்பிடிகாரன், ஓடின ஆளைப்பார்க்கேக்க எத்தனை மணி இருக்குமெண்டு கேட்டேராம். என்னைய்யா ஒரு, ஒரு சூள் ஒண்டரைச்சூள் இருக்குமய்யா எண்டானாம் அந்த மீன்பிடிகாரன். இப்படித்தான் மீன்பிடிகாரர் தங்களுக்குள்ள நேரத்தைப்பற்றிக்கதைச்சிருப்பினம் எண்டு சொன்னேர் அப்பா.

Sunday, November 02, 2003

நேரமோ நேரம் - 3

கால அளவு (தொடர்ச்சி...)தமிழில் புழங்கும் கிழமைகள்பற்றி நமக்குத்தெரியும். அதாங்க. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி. திருஞானசம்பந்தரோட தேவாரம் உங்களில் பலருக்குத்தெரிந்திருக்கும்.


வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

தமிழர்கள் பயன்படுத்தும் திதிகள்:

பிரதமை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, தசமி, ஏகாதசி, த்வாதசி, த்ரயோதசி, சதுர்தசி, பௌர்ணமி, அமாவாசை.
நான் ஆரம்பத்தில் சொன்னபடி, எனக்கு தெரியாத விஷயங்கள் இவை. விஷயம் தெரிந்தவர்கள், விவரமாகக்கூறினால் உதவியாக இருக்கும்.

தமிழ் மாதங்கள்:

சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி

பட்சங்கள்:

கிருஷ்ண பட்சம், சுக்ல பட்சம்.

பருவங்கள்:
இளவேனில், முதுவேனில், கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம்.

அட, நீவேற ஏம்மா வயித்தெரிச்சலைக்கொட்டிக்கற. இப்போல்லாம் இதுமாதிரியா இருக்கு. வெயில் காலம், அதிகமான வெயில்காலம், மிகவும் அதிகமான வெயில்காலம், தாங்கமுடியாத வெயில்காலம் இதுதான் இருக்குன்னு சொல்லுறீங்களா? அதுவும் சரிதான்.