Thursday, June 26, 2003

இந்தக்கட்டுரையை முற்றிலும் இலங்கைத்தமிழ் நடையில் எழுதினால் என்ன என்று தோன்றியது. படித்து விட்டு புரிந்ததா என்று சொல்லுங்கள் நண்பர்களே!

என்ர ஊரின்ட பெயர் புங்குடுதீவு எண்டு நான் உங்களுக்கெல்லாம் முந்தியே சொல்லிட்டன். ஆனால் என்ர ஊர் தமிழ்நாட்டு தமிழ் நவீன இலக்கியத்தில் முக்கிய இடத்தில இருக்கிற பொன்னியின் செல்வனிலும் இடம் பெற்று இருக்கெண்டு உங்களில எத்தனை பேருக்குத்தெரியும். எனக்கே படிச்சு முடிச்சோடன எவ்வளவு ஆச்சரியம் தெரியுமா! ஊமைராணி இருந்த ஊரான "பூததீவுதான்" என்ர ஊர். அதப்போல மணிமேகலையில் வர்ற மணிபல்லவத்தீவுதான் என்னுடைய தீவுக்குப்பக்கத்தில இருக்கிற நயினாதீவு எண்டு நாங்க இப்ப கூப்பிடுற "நாகதீவு". இந்த நயினாதீவுல இலங்கை முழுக்க சனங்களுக்கு நல்லாத்தெரிஞ்ச நாகபூஷணி அம்மன் கோயில் இருக்கு. இந்த தீவுக்கு படகில தான் போகோணும். நானும் சின்ன வயசில ஒருக்கா போயிருக்கிறன் திருவிழாக்கு. நயினாதீவுல ஒரு புத்த விகாரையும் இருக்கு கண்டியளோ! அங்க ஒரு சிங்கள புத்தபிக்குவும் இருக்கிறேராம்! ஆக்கள் சொல்லி இருக்கினம்.

நாகபூஷணி அம்மன் கோயில் திருவிழாக்கு முந்தி எல்லா இடத்தில இருந்தும் சனம் வாறது எண்டு அம்மம்மா சொல்லுறவ. நிறைய சிங்கள ஆக்களும் வாறவையாம். யாழ்ப்பாணத்தில இருந்து ஒரு முப்பது மைல்தான் எண்டாலும் பிரயாணம் கொஞ்சம் கடினம். ஏனெண்டா யாழ்ப்பாணத்தில இருந்து புங்குடுதீவு வரைக்கும் தான் பாலம் இருக்கு. பிறகு எல்லாரும் லோஞ்சிலதான்(launch) போகோணும். நாங்களும் ஒருக்கா போனது எனக்கு ஞாபகம் இருக்கு. எனக்கு தண்ணியெண்டா அப்ப புழுத்த பயம். கனக்க சனத்த வேற அவங்கள் லோஞ்சில ஏத்திட்டாங்கள் எண்டு நினைக்கிறன். கடலில ஆட்டத்தில லோஞ்ச் கவிண்டு போயிரும் போல இருந்தது. அரவிந்தன் எங்களோட வந்த அண்ணாமாரோட லோஞ்சுக்கு மேல போய் இருந்திட்டான். நானும் அவனோட போவமெண்டு பார்த்தா அம்மா மாட்டனெண்டு சொல்லிப்போட்டா. கொஞ்ச நேரத்துக்கு பிறகு என்ர பயத்த பார்த்திட்டு அம்மம்மா அண்ணாமாரை என்னையும் மேல இழுக்கச்சொல்லி சொன்னா. ஆனா எனக்கு அந்த அண்ணாமார் என்னை மேல இழுக்கும்வரை சீவன் கையில இல்ல. எப்பிடியோ ஒரு வழியா நயினாதீவுக்குப்போய் சேர்ந்திட்டம். திரும்ப லோஞ்சில போகோணும் எண்ட நினைப்புத்தான் அண்டைக்கு முழுக்க இருந்தது!

எனக்குப்பொதுவா நிறைய சனம் ஒரு இடத்தில இருந்தாப்பிடிக்காது. அதுவும் சரியான சத்தம் போட்டுக்கொண்டு இருந்திச்சினம் எண்டால் அதைப்போல விசர் வேற ஒண்டும் இல்ல. நாகபூஷணி அம்மன் கோயில் நல்ல வடிவாத்தான் இருந்தது. பழைய கோயில் எண்டெல்லாம் சொல்ல ஏலாது. ஆனா எங்கட கோயில்களோடு பாக்கேக்க கொஞ்சம் பெரிய கோயில்தான். அம்மன் சரியான சக்தி வாய்ந்தவ எண்டு அம்மம்மா சொன்னா. நாங்க போனது ஏழாம் நாள் திருவிழாவோ எட்டாம் நாள் திருவிழாவுக்குத்தான். தேர் திருவிழாக்குத்தானாம் சனம் எல்லாப்பக்கத்திலயும் இருந்து வருமாம். நாங்க போன அண்டைக்கு அந்தளவுக்கு சனநெருக்கடி இல்லை எண்டு எல்லாரும் சந்தோஷப்பட்டிச்சினம். எனக்கு ஒரே ஒரு எண்ணம்தான் என்ற மனசில ஓடிக்கொண்டு இருந்தது. அது என்னெண்டா, "இந்த சன நெருக்கடியே தாங்கேலாமாக்கிடக்கு. இதுக்குள்ள இதை விட கூடச்சனமெண்டால் எங்க போய் ஒழியிறது!" எண்டுதான்.

நான் சின்ன வயசில சாமி கும்பிட எல்லாம் திருவிழாவுக்குப்போனதில்லை. கச்சான், அப்பளம், மணிக்கூடு, காப்பு, பலூன் எல்லாம் வாங்கித்தருவினம் எண்ட ஒரே ஒரு காரணத்துக்குதான் நாங்க சின்னாக்கள் எல்லாம் கோயிலுக்கு போறதுக்கு. பிறகு வளர, வளர நான் வீட்டில நிக்கிறன், நீங்க எல்லாரும் போயிற்று வாங்க எண்டு புங்குடுதீவில நடக்கிற திருவிழாக்களுக்கு போகாமல் இருக்க அடி போட்டா... இந்த மாதிரி சாமான் எல்லாம் வாங்கித்தாறம் எண்டுதான் கூட்டியண்டு போவினம். சில வேளையில ஏமாத்தியும் போட்டுருவினம்!

மொத்ததில என்ர மனசில நாகபூஷணி அம்மன் திருவிழாக்குபோனதில நினைவில நிக்கிறது அந்த லோஞ்சில போய் வந்ததுதான். அதுதான் என்ர கடைசிப்பயணமும் கூட கடலில். (அதற்குப்பிறகு ஹவாயில் திமிங்கிலம் பார்ப்பதற்காக கடலில் பயணம் செய்தேன் 2000ம் ஆண்டு.)

புங்குடுதீவில என்ர வீட்டுக்கு பக்கத்தில ஒரு நாலு மைல் சுத்துவட்டாரத்துல அஞ்சாறு கோயில்கள் இருக்கு. இதுல நான் புங்குடுதீவுக்கு போய் இருந்த மூண்டு வருசத்தில் அஞ்சாறு தரம் திருவிழாக்குப்போய் வந்திட்டன். முதலில் என்னமோ நல்லாத்தான் இருந்தது. பிறகு, பிறகு எல்லாரும் வரயில்லை எண்டு சொல்லத்தொடங்கினம். ஆனாலும் கட்டாயம் ஒரு நாளாவாது போய் வந்தனாங்க. எனக்கு நல்லா பிடிச்ச ஒரு திருவிழா - பெருங்காடு கந்தசாமி கோயில் திருவிழாவில பாட சீர்காழி கோவிந்தராஜனை கூட்டியண்டு வந்த அண்டைக்குத்தான். 1983 ஜூலைக்கு முதல் எண்டு நினைக்கிறன். சும்மாவே எங்கட ஊரில லெளட்ஸ்பீக்கர்ல கடவுள் பாட்டு மட்டும்தான் போடுவினம். நான் சினிமா பாட்டெல்லாம் கேக்கத்தொடங்கினது இந்தியா வந்துதான். மத்தியானம் அவர் புத்தகங்களில கையெழுத்துப்போட்டுக்கொடுத்தவர். அரவிந்தன் ஒரு மாதிரி போய் ஒண்டு வாங்கியண்டு வந்தவன். பின்னேரம்தான் அவரின்ற கச்சேரி எண்டு சொல்லிச்சினம். நாங்களும் அம்மம்மா, அம்மா, சித்தி மற்ற படி அவைட சினேகிதர்களும் பின்னேரம் சாப்பிட்டுட்டு வெளிக்கிட்டனாங்கள். சும்மா சொல்லக்கூடாது. சீர்காழி, நல்லாப்பாடினேர். இண்டைக்கும் இந்தியா போய் கோயில் எல்லாம் பாக்கப்போகேக்க சீர்காழிக்கு போகாம போனதே இல்ல. இந்தியாவில சனம் அவ்வளவு ஏன் சீர்காழி கோயிலுக்கு போறதில்லையெண்டு ஒவ்வொருக்காவும் ஏக்கமும் கோவமுமாக இருக்கும். மத்த கோயில்களில் இருக்கிற அளவு கூட்டத்த நான் சீர்காழி தோணியப்பர் கோயிலில பார்த்ததேயில்ல.

மற்ற படி திருவிழாக்கள் எல்லாம் பத்து நாள் பதினைந்து நாள் நடந்தாலும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கிறது முதல் நாள் கொடியேற்றத்திருவிழாவும், கடைசில வாற தேர்திருவிழாவும்தான். அந்த நாட்கள்ல நல்லா கவனிக்க இல்லையே எண்டு வருத்தப்படுறது கொடியேற்றத்திருவிழாவில கொடிமரத்துக்கு செய்யிற நீட்டுப்பூசைதான். அப்ப எல்லாம் எப்படா முடிப்பினம் எண்டு பார்த்துக்கொண்டு இருப்பன். அதுவும் என்ர வீட்டுக்குப்பக்கத்தில இருக்கிற பிள்ளையார் கோயிலுக்கு கொடிமரத்த என்ர தாத்தாதான் சித்தப்பா மட்டக்களப்பில G.A (கலெக்டர் மாதிரி) இருக்கேக்க கொண்டு வந்தது எண்டு எல்லாரும் சொன்னதைக்கேட்டு தாத்தா இந்தப்பெரிய மரத்த எப்படி கொண்டுவந்து சேர்த்திருப்பேர் எண்டு என்ர கற்பனைக்குதிரைக்கு வேலை கொடுத்தண்டு இருப்பன்.

இங்க ஊரில எல்லாருக்கும் என்ர அப்பாவைத்தெரியாது. அவர் சின்ன வயசிலேயே கொழும்புக்கு போயிற்றேர் எண்டதால். எங்களைப்பார்த்து யாரெண்டு கேக்கிற ஆக்களுக்கு "சொர்ணலிங்கத்தாரின்ர பேத்தி" எண்டு சொல்லச்சொல்லி எனக்கு உத்தரவு. நிறையப்பேர் "ஓ.... மூத்தவளின்ர மகளே!" எண்டு சொல்லுவினம். சிலர் "ஆறுமுகத்தாரின் பேத்தியெண்டு சொல்லு பிள்ளை" எண்டு என்ற அப்பாவின்ற அப்பாட பேரச்சொல்லுவினம்.

இந்தியாவில எப்படி எண்டு தெரியல்ல. ஆனா இலங்கையில தேர் திருவிழா அண்டைக்கு தேர் வீதியெல்லாம் சுத்தி வந்தபிறகு சாமியை அலங்காரம் செய்வினம். அலங்காரம் எல்லாம் பச்சையில இருக்கு. இதுக்கு "பச்சைசாத்துறது" எண்டு சொல்லுவினம். பச்சைசாத்தின சாமியும் உள்வீதி வெளிவீதி வலம் வருவேர். நிறைய ஆக்கள்தான் தூக்கியண்டு போவினம். பல்லக்கும் தினமும் தூக்கிற மாதிரி சின்னன் இல்லை. சரியான பாரமெண்டு பார்த்தோடன தெரியும். சாமியை ஆட்டி ஆட்டித்தான் கொண்டு போவினம். ஏன் அப்படிக்கொண்டு போகீனம் எண்டு கேக்ககூட மறந்து பாத்தண்டு இருப்பன். வீதியெல்லாம் சுத்தி பிள்ளையார் கோயிலின்ர முன்வாசலுக்கு வரேக்க பாருங்க அவரின்ர ஆட்டம் கூடும். தூக்கிற ஆக்கள் எல்லாம் கலை வந்தமாதிரி அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஆடுவினம். சனமெல்லாம் நல்லா இடம் விட்டுத்தான் நிக்கும். வாசல் நெருங்க நெருங்க ஆட்டமும் கூடும். அதே போல் சனங்களின் பிள்ளையாரை வேண்டும்/வாழ்த்தும் சத்தமும் கூடும். உற்சவ மூர்த்தி இருக்கிற இடம் வந்தோடனதான் ஆட்டம் மட்டுப்பட்டு பிள்ளையார் சாந்தமாவேர்.

பிறகும் கொஞ்சநேரம் பூசை நடக்கும். அதுக்குப்பிறகு திருநீறு, சந்தனம், குங்குமத்தோட பிரசாதமும் கிடைக்கும். எங்கட ஊரில எல்லாரும் திருநீற்றை மூன்று அல்லது நாலு விரலால தாம் பூசுவினம். அதே மாதிரி சந்தனமும் ஒரு விரலால பூசப்படும். குங்குமம் குன்னக்குடி மாதிரி வைக்கேல்ல எண்டாலும் கொஞ்சம் பெரிசாத்தான் இருக்கும். சந்தனம் மிஞ்சி இருந்தால் சில இளம் பெண்கள் தவிர மற்ற எல்லாரும் கன்னத்தில விரலால கோடு கிழித்து இருப்பினம். அந்த வெயிலுக்கு நல்ல இதமா இருக்கும்.

Saturday, June 21, 2003

தொலைக்காட்சியும் கிரெகொரி பெக்கும்எங்கட வீட்டில 81/82ல டீவி வாங்கிட்டினம். அப்ப எங்கட ஊரில நிறைய பேரின்ர வீட்டில டீவி இல்லை. அதனால் எங்களுக்கு அப்பப்ப கொஞ்சல் லெவல் வந்தாலும் முந்தி நாங்க கொழும்பில இருக்கேக்க நடந்த சில விஷயங்கள் ஞாபகம் வரும்.

நாங்க கொழும்பு வெள்ளவத்தையில் இருந்தனாங்க. பூலோகசிங்கப்பெரியப்பான்ர வீட்டுலதான் எங்கட வீடும் இருந்தது. கண்ணனண்ணாதான் எங்களுக்கு எல்லாம் காப்டன் மாதிரி. ஓ..... அவரைப் பற்றி கதைக்க போனா நிறைய கதைக்கலாம். நானும் அரவிந்தனும்தான் அவரின்ற எடுபிடிகள். அவருக்கும் எங்களை விட்டா விளையாட ஆக்கள் கிடையாது. ஆனா, அது எங்களுக்கு அப்ப எப்படி தெரியும். பெரியப்பா அவருக்கு பாட்மிண்டன் வாங்கி கொடுததவர். அவரோட சேந்து விளையாட ஆக்கள் இல்லை எண்டு தெரியாத நாங்கள் அவர் எள்ளெண்டுறதுக்குள்ள எண்ணையா இருந்தனாங்கள். அவர் தண்ணி கேட்டா கொண்டந்து தரோணும். ஷட்டில் கொக் விழுந்திட்டா அதை எடுத்தண்டு வந்து வைக்கோணும் எண்டு நிறைய வேலை. இப்படித்தான் அவரிட்ட சேவகம் செஞ்சு அவரின்ற ஆஸ்ட்ரிக்ஸ், டின் டின் கொமிக்ஸ் எல்லாம் வாசிக்கிறனாங்கள். கொடுமைக்கார அண்ணா எண்டு நினைக்காதீங்கோ. ஒருக்கா, என்னை ஒருக்கா கூட பேசாத அப்பா எதுக்கோ நல்லா பேசிப்போட்டேர். கையில கிள்ளியும் விட்டுட்டேர். விளையாட வந்த நான் அழுதண்டு வந்தது கண்டுட்டு கண்ணனண்ணா கவலைப்பட்டது இன்னமும் ஞாபகம் இருக்கு. கொஞ்ச நாளைக்கு எந்த விதமான சேவகமும் செய்யாம புத்தங்கள் எல்லாம் தந்தவர். :)

அவர் சரியா வால்தான். பெரியப்பா வீட்டு மதில் சுவரில போத்தில் ஓடுகள் எல்லாம் பதிச்சு வைச்சிருக்கீனம். ஒரு நாள் பெரியப்பான்ற கார் வருதோ எண்டு ஏறிப்பார்த்த கண்ணனண்ணா கீழ விழுந்திட்டேர். அவரின்ற கையில முழங்கைல இருந்து கை வரைக்கும் நீளமா போத்திலோடு கிழிச்சு இரத்தம் கொட்டோகொட்டெண்டு கொட்டிச்சுது. அண்ணா குளறாம மெதுவா வீட்டுக்கு வந்து பெரியம்மாவைக் கூப்பிட்டவர். அவ வந்து பார்த்து போட்ட சத்தத்தில அப்பாவும் வெளில வந்து பார்த்து உடன டக்ஸிய கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்கு போனவை. கண்ணனண்ணா, கொஞ்ச நாள் முழங்கைல இருந்து பெரிய கட்டோட திரிஞ்சவர். ஆனா வீட்டுக்கு வந்து எங்களிட்ட எவ்வளவு அளந்தவர் தெரியுமே! தான் பின் சீட்டில பெரியம்மாவோட இருக்கிறேராம். பெரியம்மா அழுதண்டே ஐஸ் கட்டியை துண்டிலை வச்சுப்பிடிக்கிறாவாம். அப்பா பின்னுக்கு பாத்தண்டு கெதியா கெதியா எண்டு டிரைவரிட்ட சொல்லுறேராம். டிரைவரும் வேகமா போறேராம். ஸ்பீட் காட்டுற கம்பி நல்லா தான் இது வரைக்கும் பாக்காத அளவுக்கு ஏறுனதாம். ரேசிங் கார் மாதிரி ஓடினது கார். நான் மட்டும்தான் அதில போனனான். உங்க ரெண்டு பேருக்கும் தெரியாது என்று பெரிய கதை எங்களிட்ட.

எங்கட வீட்டுதான் ரோட்டில கடைசி. Cul-de sac எண்டு சொல்லுவினமே. அதுதான். அந்தப்பக்கத்தில இன்னும் மூண்டு வீட்டிலைதான் சின்னாக்கள் இருந்தவை. முன் வீட்டில மாடியில மலையாள ஆக்கள் இர்ந்தவை. கீழயும் 2-3 கூட்டாளிமார் இருந்தவை. இவைகளோட சில நேரம் விளையாடுறனாங்க எண்டாலும். ரோட்டுக்கு அந்தப்பக்கம் போகோணும் எண்டதால போறதில்லை. அட, போக விடுறதில்லை. கொஞ்சம் நல்ல மாதிரி சொல்லுவம் எண்டால் விடுறியளோ. :)

எங்கட வீடு இருக்கிற பக்கத்தில தான் ரெண்டு வீடு தள்ளி ஒரு வீட்டில ஒரு பெட்டை இருந்தவ. அவவுக்கு பெயர் அகலிகை. எங்கட பெரியப்பா தமிழ் பொர�பசர். கலாநிதிப்பட்டம் வாங்கினவராம். புத்தகம் கூட எழுதி இருக்கிறேர். குமுதம்-யாழ் மணத்தில கூட அவர் எழுதினதில் இருந்து எடுத்துப்போட்டு இருக்கினம். சரி இதை ஏன் இங்க சொல்லுறன் எண்டால். பெரியப்பாட்ட இருந்து அப்பப்ப கொஞ்சம் தமிழ், பழைய கதை எல்லாம் கேக்கலாம். அண்ணாவுக்கு எங்கள விட நிறையத்தெரியும். எங்கள விட மூண்டு வயசு கூட வேற அவருக்கு. அந்தப் பெட்டைக்கு பெயர் அகலிகை எண்டு சொன்னனான் எல்லா. அவவை நாங்கள் எல்லாம் அண்ணா சொல்லித்தந்த மாதிரி. உன்னை ஒரு ஆள் மிதிச்ச பிறகுதான் உனக்கு உயிர் வந்தது. இராமரின்ற காலாலை உன்னை மிதிச்சவர் எண்டு பகிடி பண்ணியெண்டே இருப்பம். ஏதோ ஒரு விதத்தில கம்பராமாயணம் அப்பவே ஒட்டிற்றிது எண்டு பெருமை அடிச்சுக்கலாமே?! :p

சில நாக்கள்ல அப்பா, அம்மா, நான், அரவிந்தன், விக்கி எல்லாரும் வெளிக்கிட்டு வெளியில போவம். சில நாக்கள்ல படம் பாக்கப்போறனாங்கள். அப்படி ஒருக்கா போனபோதுதான் யாரோ என்னட்ட 'வெள்ளிக்கிழமை விரதம்' படத்தில வந்த பாம்பு சீட்டுக்கடியிலை வரும் எண்டு சொல்லி அதுக்கு பிறகு எல்லாம் காலை சீட்டுக்கு மேல வச்சண்டுதான் படம் பாத்தனாம். அந்தப்படத்திலயே ஒரு பிளேன் வரும். அதிலைதான் பத்மன் மாமா லண்டனுக்கு போனவர் எண்டும் யாரோ சொல்லிச்சினம். நிறைய நாக்களுக்கு பத்மன் மாமா போறதை இவை எப்படி படம் எடுத்தவை எண்டு யோசிச்சண்டே இருந்திருக்கிறன். அரவிந்தனோட பாக்கேக்க நான் பறுவாயில்லை. அவன் சின்ன ஆளா இருக்கேக்கயாம், விக்கி பிறக்கேல்ல. அப்ப 'மூன்று முடிச்சு' படம் பாக்க போனனாங்களாம். (ஹ்ஹ்ஹ்ம்ம்ம் சிறீதேவி படம் பாக்கேக்க நான் சின்னப்பிள்ளையெண்டா, கமல்?! ;) ) அந்தப்படத்தில ரஜனி முடிச்சுப்போடுவேராம். அப்ப அவரின்ற முகத்த கிட்ட காட்டுவினமாம். அதை பார்த்து அரவிந்தன் வீறிட்டு கத்தி, படம் முழ்க்க அப்பா அரவிந்தனை வெளியிலதானாம் தூக்கி வச்சண்டு நிண்டவராம். பிறகு, அரவிந்தன் ரஜனி பைத்தியமா இருக்கேக்க இந்த கதைதான் வீட்டிலை அடிபடும்.

சரி கதை எங்க தொடங்கி எங்க எல்லாம் போகுது. சில நாக்கள்ல நாங்கள் கடைகளில அப்பதான் வந்திருந்த டீவில நிகழ்ச்சிகள் பாக்கிறனாங்க. நாங்க மட்டுமில்ல. எங்களோட சில சனமும் நிக்கும். பிறகு, நிறைய வருஷம் கழிச்சு, சென்னைல வி.ஜி.பி, விவேக்ஸ் கடைகளுக்கு முன்னுக்கு சனம் நிக்கேக்க, முந்தி நாங்களும் நிண்டதுதான் ஞாபகம் வரும்.

இப்படி போயண்டு இருக்கேக்கதான் ஒரு நாள் எங்கட வீட்டுக்கு முன்வீட்டு மாடியில பெரிய களேபரம். என்னடா எண்டு பார்த்தா அந்த விட்டுல இருந்த சின்னாக்கள் அந்த ஒழுங்கை முழுக்க கத்தியண்டு வந்திச்சினம். 'எங்கட வீட்டில டீவி வந்திற்று. நாங்க டீவி வாங்கிட்டம்' எண்டு ஒரே சத்தம்தான். எங்களுக்கு பொறாமையா இருந்துது. அதுவும் அவை நிகழ்ச்சி பாப்பினம் எண்டு இல்லை. எங்கட வீட்டில இல்லாத சாமான் அவைட வீட்டில இருக்கெண்ட பொறாமைதான். நாங்களும் கண்ணனண்ணாவோட சேந்து 'எங்களுக்கெல்லாம் டீவியே பிடிக்காது. அதிலை என்னதான் இருக்கோ' எண்டு கிரேப்ஸ் புளிச்ச கதையா கதைச்சம்.

புங்குடுதீவில சில நேரம் பெருமை வரேக்க கொழும்பில நாங்க எப்படி நடந்தனாங்கள் எண்டதுதான் ஞாபகம் வரும். அதோட அந்த பெருமையெல்லாம் வடிஞ்சு போயிரும்.

டீவி பார்த்த அனுபவங்கள், தனிய வீட்டில எல்லாரும் நித்திரை கொள்ளேக்க, நடுங்கியண்டு 'Omen' படம் பாத்தது பற்றியெல்லாம் பிறகு. கிரெகரி பெக் செத்துப்போயிற்றேர் எண்டதும் வந்த நினைவலைகளை பிடிக்க முயற்சிக்கிறேன்.Tuesday, June 17, 2003

பாரதியார்என்னில் தாக்கத்தை ஏற்படுத்திய முதல் கவிஞர்/இலக்கியவாதி/மனிதர் பாரதியார்தான். பாரதியார் பற்றி நான் முதலில் தெரிந்து கொண்டது ஒரு கவிஞராக. என்னுடைய அப்பா சொல்லித்தந்த 'ஓடி விளையாடு பாப்பா' தான் நான் கற்றுக்கொண்ட முதல் பாரதி பாடல். அதில் வந்த காக்கை, குருவிகளும் பசுவும் என்னை மிகவும் கவர்ந்தன. இன்னமும் அந்தப்பாடலை வாசிக்கும்போது சிறுவயதில் இதைப்பாடிக்கொண்டு திரிந்ததுதான் ஞாபகம் வருகிறது. அப்பா சொல்லித்தந்த இன்னுமொரு பாட்டு 'வெற்றி யெட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே' என்று தொடங்கும் பாடலின் முதல் வரிகள்.

இலங்கையில் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தந்த பாடல் - 'உலகத்து நாயகியே -எங்கள் முத்துமாரியம்மா, எங்கள்
முத்துமாரி'

அங்கு கற்றுக்கொண்ட இன்னுமொரு பாடல் -

'வெள்ளைத்தாமரைப்பூவிலிருப்பாள் வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்'

என்று சரஸ்வதியை நினைத்துப்பாடும் பாடல். முக்கியமாக நவராத்திரி நேரத்தில் பாடுவோம். வீட்டில் இருந்தால் வெள்ளிக்கிழமைகளில் இந்தப்பாடலை கட்டாயம் பாடவைப்பார்கள்.

ஒரு முறை மார்கழி மாத அதிகாலையில் திருவெம்பாவை பாடுபவர்களோடு போனபோது கேட்ட பாடல் - 'ஓம் சக்தி ஓம்சக்திஓம் - பராசக்தி'. (அது மிகவும் பிடித்துப்போய் என்னுடைய சித்தியை சொல்லித்தரசொல்லி அரித்தெடுத்து கற்றுக்கொண்டது வேறு விஷயம்.)

சிறு வயதில் 'காக்கைச்சிறகினிலே நந்த லாலா - நின்றன் கரிய நிறந்தோன்றுதையே நந்த லாலா' பாடலை k.j.ஜேசுதாஸ் பாடக்கேட்டு மெய்மறந்த நாட்களும் உண்டு. இன்று உன்னிக்கிருஷ்ணனில் இருந்து மகாராஜபுரம் சந்தானம் வரையிலும் பாடிக்கேட்டிருந்தாலும் ஜேசுதாஸ் பாடியதுதான் மனதை நெகிழ வைக்கிறது.

மிகவும் பிடித்த இன்னுமொரு பாடல் - 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!'

சென்னையில் பள்ளியில் தமிழ்வகுப்பில் கற்றுக்கொண்ட இந்தப்பாடலை நானும் தம்பியும் தங்கையும் வீட்டில் உரத்த குரலில் பாடிக்கொண்டு இருப்போம். அதே போல் 'ஜெய பேரிகை கொட்டடா! - கொட்டடா' என்ற பாடலை எங்கேயோ கேட்டேன். அந்தப்பாடலில் உள்ள கம்பீரம் பிடித்துப்போனது.

இதோ இன்னொரு பாரதி பாடல்.

'நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ'

அதே போல் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு பாடல்

' நெஞ்சில் உரமும் இன்றி

நேர்மைத்திறனும் இன்றி

வஞ்சனை செய்வாரடி - கிளியே

வாய்ச்சொல்லில் வீரடி'

'நெஞ்சு பொறுக்குதி லையே - இந்த

நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்' கவிதையைப்படித்த போது ஏற்பட்ட தாக்கம் எப்போது இதை வாசித்தாலும் ஏற்படுகிறது.

பாலச்சந்தர் தன்னுடைய ஒரு படத்துக்கு 'மனதில் உறுதி வேண்டும்' என்று பெயர் வைத்ததினாலேயே அந்தப்படத்தை பார்ப்பதற்கு முன்னமே பிடித்துப்போயிற்று.

'மாதர் தம்மை இழிவு செய்யு

மடமையைக்கொ ளுத்துவோம்' என்று பாடிய பாரதி என்னில் விசுவரூபமெடுத்து நின்றான்.

என்னுள் அதிர்வை ஏற்படுத்தியவை பாரதியின் 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' வரிகள். முதன்முறை அதை வாசித்தபோது திரும்பத்திரும்ப வாசித்தேன்.

பாரதியாரின் பாடல்களிலே எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் சில கண்ணன் பாடல்களாகும்.

'தீர்த்தக்கரையினிலே-தெற்கு மூலையில்

செண்பகத்தோட்டத்திலே'

'பாயுமொழி நீயெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு'

'நின்னைச்சரண் அடைந்தேன் கண்ணம்மா'

'சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா - சூரிய சந்திரரோ'

Wednesday, June 11, 2003

பொங்கல் அனுபவங்கள்எங்கள் ஊரில் பொங்கல்தான் பெரிய திருவிழா. வந்தாரை வாழவைக்கும் சென்னைமாநகரம் வந்துதான் தீபாவளிக்கு இத்தனை கொண்டாட்டமா என்று வியந்து போனோம், நானும் என்னுடைய குடும்பத்தாரும். முதல் வருஷம் தீபாவளி முதல் நாள் இரவு வெடிச்சத்தம் கேட்டு shell அடிக்கும் சத்தம் என்று பயந்துபோனது வேறு விஷயம்.

எங்கள் ஊரிலும் பொங்கல் வெகு விமர்சையாக 3 நாள் கொண்டாடப்படும். அம்மம்மாதான் குடும்பத்தில் பெரியவங்க என்பதால் அவர்கள் தலைமையில் முற்றம் மற்றும் வளவு (எங்கள் ஊரில் பெரும்பாலான வீடுகள் நிறைய மரங்கள் கொண்ட காணியின் நடுவே இருக்கும்.) எல்லாம் கூட்டுத்தடியால் (அதாங்க விளக்குமாறு) கூட்டி சுத்தமாக்கப்படும். எனக்கு தெரிந்தவரையில் எரிக்கமாட்டார்கள். பலகாரம் எல்லாம் முதல்நாளே சுட்டுடுவாங்க. பொங்கல் அன்று வெள்ளன (காலங்காத்தால) எழுந்து அந்த குளிரில் நடுங்கியபடியே தயாராகி அம்மம்மாவுடன் வெள்ளை அரிசிமா எடுத்து கோலம் போட்டு(எங்க ஊரில் ஐயர் வீட்டில்தான் தினமும் வீட்டிலும் கோயிலிலும் அழகாக கோலம் போடுவார்கள். அம்மம்மாவின் கோலம் நவீன ஓவியத்துக்கும் traditional artக்கும் நடுவில் இருக்கும். பிறகு யாழ்ப்பாணத்தில் இருந்து ஸ்பெஷலாக வாங்கி வந்த மண்பானையில் பொங்கல் பொங்கப்படும். வெண்பொங்கல் எல்லாம் இந்தியா வந்துதான் சமைக்க கத்துகிட்டேன். சர்க்கரைப்பொங்கல்தான். நான் எங்கள் சொந்த ஊரான புங்குடுதீவில் இருந்த சொற்ப வருடங்களில் ஒரு வருஷம் அம்மா நெல் விதைத்தார்கள். எங்களுக்கெல்லாம் இன்னும் மனதில் நிற்கும் அருமையான அனுபவம்.

பொங்கல் பொங்கி வரும்போது சவுண்ட் எ�பெக்ட் குடுக்க சொல்வார்கள்.(வேறென்ன, பொங்கலோ பொங்கல் கோஷம்தான்.) பிறகு சூரியனுக்கும் சாணில பிடித்து பூசணிப்பூ சொருகி அலங்காரம் செய்த திருவாளர் பிள்ளையாருக்கும்(இஷ்ட தெய்வம் என்கிற படியால் நிறைய பட்டப்பெயர் அவருக்கு. உதா: பில்ஸ்.) படைப்பார்கள். இனித்தான் எங்களுக்கெல்லாம் பிடித்த விஷயம். வெடி வெடிக்கறது. சின்ன பசங்க என்று சொல்லி எங்களை கிட்ட விட மாட்டார்கள். அம்மம்மாவும், அம்மாவும், சித்தியும்தான் வெடிப்பார்கள். மூணு பேருக்கும் வெடி வெடிக்கிறது என்றால் கிலி. ஒரு சிரட்டையில் (விளக்கம் - தேங்காய் ஓடு) வெடியை வைத்து விட்டு ஒரு நீட்டுக்கம்பில் அம்மம்மா ஊதுபத்தி கட்டி, ஒரு பத்து அடி தள்ளி நின்று வெடியின் மீது வைக்க try பண்ணுவாங்க. வெடி என்றவுடன் அட்டம் பாம்ப், ஹைட்ரஜன் பாம்ப் என்றெல்லாம் நினைக்காதீங்க. தமிழ்நாட்டில இந்த கைல வச்சு வெடிப்பாங்களே அதுதான். :-)
வெடியை ஒருக்கா தொட்டுட்டு ஒரு ஓட்டம் எடுப்பாங்க பாருங்க, அதுதான் எங்களுக்கு எண்டர்மெயின்ட் எப்படியோ ஒரு வழியா அவங்க வெடிச்சதும் எங்க அம்மாவின் முறை. அம்மா, பொண்ணுங்கல்லாம் இந்த விஷயத்துல ஒரே மாதிரி. எங்க அம்மாவும் இப்படி ஓட்டமும் நடையுமா வெடிச்சதும் சித்தியும் அவங்க பங்குக்கு ஓடி ஓடி வெடிப்பாங்க. சின்னவங்க என்பதால் எங்களுக்காக
இன்னும் கூட வெடிப்பாங்க. மிச்ச வெடியெல்லாம் பின்னேரம் (அதுதான் சாயங்காலம்) அம்மாவின் கசின்ஸ் - சித்தப்பாக்கள் வந்து வெடிப்பார்கள்.

பிறகு என்ன, எல்லார் வீட்டுக்கும் கொன்டுபோய்க்குடுக்கும் படலம். அதுக்கப்புறம்தான் எங்களுக்கு உணவு. ஆனா இந்த உற்சாகத்துல பசி என்பதே தெரியாது.

அடுத்த நாள் எங்கள் ஊரிலும் தமிழ்நாடு மாதிரியே மாட்டுப்பொங்கல். என்ன ஒரு வித்தியாசம் எங்கள் வீட்டில் எல்லா
பண்டிகையிலும் எல்லாரும் சைவம்தான். சிலர் வீடுகளில் தீபாவளிக்கு அசைவம் உண்டு. ஆனால் எங்கள் வீட்டில்? மூச்ச்ச்... அம்மம்மா கொன்னுடுவாங்க கொன்னு!

Friday, June 06, 2003

வைக்கிகி கடற்கரையோரம், ஒரு மாலைவேளையில்இன்னிக்கு வைக்கிகி கடற்கரையோரம் போகலாம் என்று எண்ணம். மாலை வேளை வேறு. இதுதான் வைக்கிக்கி போவதற்கு நல்ல நேரம். கடற்கரையில் காற்று வாங்கி விட்டு, அந்தி சாயும் வேளையில் சூரியன் மறைவதைப் பார்த்து அதற்குப் பிறகு கொஞ்சது நேரம் கடற்கரையோரம் உலாவி விட்டு வீடு திரும்பலாம்.

நகரின் மத்திய பகுதியில் இருந்து எத்தனையோ பேருந்துக்கள் வைக்கிகிக்கு செல்கின்றன. ஒரு இருபது நிமிடப்பயணத்தில் போய் சேர்ந்து விடலாம். வைக்கிகிக்கு அருகில் இறங்கி கடற்கரையை நோக்கி நடக்கிறோம். ஆங்காங்கே நட்சத்திர ஹோட்டல்களும், அடுக்குமாடி அப்பார்ட்மெண்டுகளுமாய் இருக்கிறது. நேராகப்போனால் கடற்கரையை அடைந்து விடலாம். இடது பக்கம் திரும்பினால் விதவிதமான பொருட்கள் விற்கும் இடத்திற்கு போகலாம். அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். கொஞ்சத்தூரம் தள்ளிப்போனால் உலகில் உள்ள டிசைனர் கடைகள் அத்தனையும் இருக்கின்றன. ஜப்பானியர்கள்தான் முக்கிய வாடிக்கையாளர்கள். அதையும் இன்னொருநாள் சுற்றிப்பார்ப்போம். இந்த அற்புதமான மாலைநேரத்தை கடைகளை வேடிக்கை பார்ப்பதிலும் மக்களை வேடிக்கைப் பார்ப்பதிலும் ஏன் வீணாக்குவது? அப்படியே இன்னமும் கொஞ்சம் தூரம் நடந்தால் கடற்கரையை எட்டி விடலாம். அலைகளில் சத்தம் கேட்கிறதா உங்களுக்கு? வாருங்கள் வாருங்கள். அந்த நீல நிறமான கடலலைகளைக் கண்டு நீங்கள் சந்தோஷப்படுவதை எனக்கு பார்க்க வேண்டும்.

இதோ இதுதான் பலரும் பல ஊடகங்களில் பேசிக்கொண்ட வைக்கிக்கி கடற்கரை. சாலையோரத்தில் ஆங்காங்கே நுனி இலைகளுடன் காட்சி அளிக்கும் தென்னை மரங்கள். இங்கெல்லாம் தேங்காய்களை அவை குரும்பைகளாக இருக்கும்போதே வெட்டி விடுவார்கள். அதே போலத்தான் பாளைகளையும் தென்னோலைகளையும் வெட்டி சாய்த்து விடுவார்கள். இங்கு வந்த புதிதில் எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. பிறகு ஒரு கதை சொன்னார்கள். எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியாது. அமெரிக்கர்கள்தான் இருந்தால், நடந்தால், உட்கார்ந்தால் வழக்கு போடுபவர்கள் அல்லவா? அப்படிப்பட்ட அமெரிக்கன் ஒருவனின் தலையில் ஒரு தேங்காய் விழுந்து விட்டதாம். அவனும் அரசின்மீது வழக்குப்போட்டு நிறையப்பணம் சம்பாதித்துக்கொண்டானாம். அதிலிருந்து தென்னைமரத்தை சிரைத்து விடுகிறார்களாம்.

மணலைப்பாருங்கள். எவ்வளவு வெண்மையாக இருக்கிறது. கடலலைகளும் மிகவும் வேகமாக வந்து விழாமல் இருக்க அதோ பாருங்கள் ஒரு தடுப்புக்கட்டி இருக்கிறார்கள். சின்னஞ்சிறுவர்கள் எல்லாம் எப்படி கூத்தடிக்கிறார்கள்!. தூரத்தில் போவதெல்லாம் சரக்குக்கப்பல்கள். மெயின்லாண்டுக்கோ, பக்கத்து தீவுகளுக்கோ போகின்றன. சனிக்கிழமை வந்தால், மற்ற தீவுகளுக்கு சுற்றுலா போகும் கப்பல்களை பார்க்கலாம்.

அதோ கொஞ்சம் தூரத்துக்கு அப்பால் இடது பக்கம் தெரிகிறது பாருங்கள் அதுதான் டையமண்ட் ஹெட் என்றழைக்கப்படும் பழைய எரிமலை. அதற்கு இன்னொரு நாள் போகலாம். காலைவேளையில் ஹைக்கிங் போவோம். உச்சியில் இருந்து நிறைய விஷயங்களைப் பார்க்கலாம். சரி அப்படியே டையமண்ட் ஹெட்டை நோக்கி நடப்போமா? கடலலைகளுக்கு பக்கத்தில் நடக்கலாம்.

இங்கு ஹவாயில் வெகு சிலருக்கு சிலை வைத்திருக்கிறார்கள். ஹானலூலுவின் மத்திய பகுதியில் King Kamehamehaவிற்கு ஒரு சிலை இருக்கிறது. இதோ பாருங்கள். இவர்தான் ட்யூக் கஹானமோகு (Duke Kahanamouku). இவர்தான் Surfingஐ பிரபலப்படுத்தியவர். பலருக்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே. ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறாராம். இவரை Father of International Surfing என்றும் சொல்லுவார்கள். சர்�பிங்க் போர்டோடு சிலை செய்திருப்பது நன்றாக இருக்கிறதல்லவா?

அதோ, சாலைக்கு அந்தப்பக்கம் இருக்கும் பூங்காவைப் பாருங்கள். ஏதாவது தெரிகிறதா? நன்றாக பாருங்கள். நமக்கு மிகவும் தெரிந்த ஒருவரின் சிலை இருக்கிறதே! ஆமாம், மகாத்மா காந்திக்கும் சிலை வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மாலை போடுவார்கள். முதல் முதலில் இந்த சிலையை பார்த்ததும், ரொம்ப உணர்ச்சி வசப்பட்டேன்.

சூரியன் மறையப்போகிறான். இங்கே உட்கார்ந்து சூரியன் மறைவதைப் பார்க்கலாமா? நல்ல நீல நிறத்தில் இருந்த கடல் கொஞ்சம் கொஞ்சமாக அடர்த்தியான நீல நிறமாக மாறுகிறது. கடற்காற்றும் லேசாக குளிர ஆரம்பிக்கிறது. கூட்டைத் தேடி போகும் பறவைகள் எப்படி சத்தம் போடுகின்றன. நல்ல வேளை இன்று நிறைய முகில் இல்லை. முகில் இருந்தால் சூரியன் மறைவதை பார்க்க முடியாது. எத்தனை சிவப்பாக இருக்கிறது பாருங்களேன். அதே சிவப்பு முகில்களின் மீதும் பட்டு, எத்தனை விதமான சிவப்பு நிறத்தை காட்டுகின்றன அந்த முகில்கள். தூரத்தில் போகும் கப்பல்களும் கொஞ்சம் mysteriousஆக இல்லை?! கடலும் லேசாக அந்த சிவப்பு நிறத்தை பிரதி பலிக்கிறது பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் நம் பார்வையில் இருந்து மறைகிறான். இங்கு வைக்கிக்கி கடற்கரையில் மறையும் அதே வேளையில் வேறு எங்காவது சூரியோதயம் நடக்கும்.

அத்தோடு இந்த வைக்கிக்கி கடற்கரையில் நம்மைப்போல எத்தனை பேர் இப்படி அமர்ந்து இந்த சூரியனை அந்திசாயும் பொழுதில் பார்த்து இருப்பார்கள்! எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த சூரியனும், இந்தக்கடலும், வைக்கிக்கி கடற்கரையும் இருக்கும். பார்வையாளர்கள்தான் மாறுகிறார்கள்!!

Tuesday, June 03, 2003

வினோதரசமஞ்சரி கொணர்ந்த நினைவலைகள்!எனக்கு எப்போது புத்தகங்கள் மேல் காதல் வந்தது என்று தெரியாது. நான்கைந்து வயதிருக்கும் என்று அம்மாவும் ஐந்தாறு வயதிருக்கும் என்று அப்பாவும் சொல்கிறார்கள். அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா கைக்கு கிடைத்ததை விட மற்ற புத்தகங்கள்தான் கிடைத்தன. ஊருக்குப் போனபிறகு என்ன படித்தேன் என்பதை விட எங்கே உட்கார்ந்து படித்தேன் என்பதுதான் இப்பொழுது நினைத்தாலும் புன்சிரிப்பை கொண்டுவரும்.

எங்கள் வீட்டை சுற்றி பெரிய வளவு இருந்தது. நாங்கள் ஊருக்குப் போனபிறகு படலையை எடுத்து விட்டு கேற் போட்டார்கள். படலை என்றால் நீள்சதுர வடிவத்தில் இருக்கும். பனையோலையாலோ தென்னோலையாலோ கட்டப்பட்டிருக்கும். அவற்றைத் தாங்கிப்பிடிப்பதும் பனையிலிருந்தோ, தென்னையிலிருந்தோ எடுக்கப்பட்ட நீளமான உறுதியான பொருள் (பெயர் தெரியவில்லை. அப்போ அதையெல்லாம் யார் கவனித்தார்கள். :) ). பகலில் சும்மா சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் படலையை, இரவில் லாம்பையும் கையில் கொண்டு போய், அம்மம்மாவுடன் கயிற்றால் கட்டி விட்டு வருவோம். தெருவிலிருந்து ஐநூறு மீட்டராவது நடக்க வேண்டும் வீட்டை அடைவதற்கு. போகும் வழியில் ஒரு குண்டு மல்லிகை பந்தல் இருக்கிறது. நாங்கள் ஊருக்குப் போன புதிதில் வசந்த காலத்தில் பூக்கும் பூக்களை ஒன்று விடாமல் பொறுக்கி எவ்வளவு பூக்கள் இருக்கின்றன என்று பார்த்து விட்டு. சித்தி மாலை கட்டித் தந்தது போக மீதியை வீட்டில் இருக்கும் கடவுள் படங்களுக்கு கொஞ்சமும், வீட்டிற்கு ஓரளவு அருகில் இருக்கின்ற இரண்டு கோவில்களுக்கு மீதிப்பூவையும் மாலைகளையும் கொடுப்போம். இரவில் மல்லிகை பூக்கும் வாசனையை முகர்ந்திப்பவர்கள் என்னைப் பொறுத்தவரையில் அதிர்ஷ்டசாலிகள். பறித்த பிறகு வரும் வாசனைக்கும் கொடியில் இருக்கும்போதே பூக்கும் வாசனைக்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது. இரவில் பூப்பறிக்கப்போனால் வேண்டாம் என்று தடுத்துவிடுவார்கள். பாம்பு மல்லிகை மணத்திற்கு வருமாம் என்று சொல்லுவார்கள். அது உண்மையா என்று இதுவரை தெரியாது. யாரையும் கேட்கவும் இல்லை. ஆனால் ஆங்காங்கே பார்த்திருந்த சாரைப் பாம்புகளும் சுருட்டைப் பாம்புகளும் பயமுறுத்த, இரவில் பக்கத்தில் போவதே இல்லை. வெளிச்சம் குறைந்து கொண்டே போகும் பின்மாலை நேரத்தில் கொஞ்சம் பறித்து வந்து விடுவேன். :)

அந்த மல்லிகைப் பந்தலுக்கு அருகே சில செம்பருத்தி செடிகளும், காயே காய்க்காத எலுமிச்சை செடியும் இருந்தது. இப்போது தெரிகிறது. அந்த எலுமிச்சை இலையை எப்படி பயன்படுத்தலாம் என்று. அப்போதெல்லாம், அம்மம்மாவை அரித்தெடுத்து விடுவோம். எப்போது எலுமிச்சை காய்க்கும் என்று கேட்டு. இத்தோடு சில செவ்விழனி மரங்களும் வாழை மரங்களும் ஒரு மாமரமும் (எங்கள் ஊரில் கறுத்தக்கொழும்பான் என்று சொல்லும் வகை.) இருந்தன. இவற்றிற்கெல்லாம் நிழல் கொடுத்து பரந்து விரிந்திருந்தது வேப்பமரம். அதன் நிழல் வீட்டு வாசல்வரை நீண்டது. அதன் நிழலில் சில சமயம் உறவினர்கள், முக்கியமாக அம்மாவின் அண்ணா வந்தால் இளைப்பாறுவது வழக்கம். எங்கள் ஊரில் வீடுகளில் திண்ணை கிடையாது. ஆனால், இரண்டு மூன்று படிகள் ஏறித்தான் வீட்டிற்கு போக வேண்டும். அந்தப்படிகளின் இரண்டு பக்கமும் நீண்ட பக்கசுவர் எழுப்பி இருப்பார்கள். எல்லா வீட்டிலும் இல்லை. சில வீடுகளில் இருந்தன. ஏறக்குறைய திண்ணை போலவே பயன்பட்டு வந்தது. காற்று வாங்கியபடி அரட்டை அடிக்கலாம். இரவில் கூட்டாஞ்சோறு தின்னலாம். பேய்க்கதை சொல்லச்சொல்லி கேட்கலாம். இப்படி பல உபயோகங்கள்.

வீட்டிற்கு அருகே வலது கோடியில் வேலிக்கு அருகேயும் ஒரு வேப்பம் மரம். அதற்கு பக்கத்தில் கொஞ்ச வாழை மரங்கள், மாதுளை மரங்கள், முருங்கை மரங்கள், தென்னை மரங்கள் இருந்தன. சில சமயம் அந்தப்பக்கம் காய்கறித் தோட்டமும் போடுவார்கள். இரண்டு முறை போட்டதைப் பார்த்திருக்கிறேன். அதற்கு எல்லாம் அருகில் மாட்டுமால் இருந்தது. முன்பு போல நிறைய மாடுகள் இல்லையென்று அம்மம்மா குறைப்படுவார். இரண்டு மாட்டை வைக்கிறது ஒரு மாட்டுமால் தேவையா என்றும் சொல்லிக்கொள்வார். அங்கேதான் அரிசிமா இடித்தல் எல்லாம் நடக்கும். உரல்களும் அங்கேதான் இருக்கும். வீட்டிற்கு இடதுபக்கத்தில் இருக்கும் நிலம் கொஞ்ச இருநூறு முன்னூறு மீட்டர் இடைவெளி விட்டு வேலி கட்டி இருந்தார்கள். அதற்கு அந்தப்பக்கம், நிறைய தென்னைமரங்களும் பனை மரங்களும் இருந்தன. இரண்டு கருவேப்பிலை மரங்களும் நின்றன. கூடவே சில கனகாம்பர செடிகளும் இருந்தன. என் தோழியிடம் வாங்கிக்கொண்டு வந்து போட்ட ஆமணக்கும் வளர்ந்து சிறு மரமாக இருந்தது. இங்கேதான் பனந்தோப்பிலிருந்து கொண்டு வந்த பனம்பழக் கொட்டைகளை புதைப்பார்கள். இந்தப் பக்கத்திலும் வேலியோரமாக ஒரு பனைமரம் இருந்தது.

வீட்டிற்கு பின்பக்கத்திலும் வேலியை ஒட்டி ஒரு வேப்பமரம். அருகே சில தென்னை மரங்கள் இருந்தன. இவற்றிற்கு அருகே ஒரு மாமரம் இருந்தது. வீட்டுக் கூரைக்கு மேல் அதன் கிளைகள் வளர்ந்து இருந்தன. சில சமயம் இரவில் விழித்து இரவு வெளிச்சத்தில் அதன் கிளைகள் ஆடுவது கண்டு வெருண்டதும் உண்டு. இந்த மாமரம் முன்பக்கம் இருந்த மாமரத்தின் வகை என்றாலும், எங்களுக்கெல்லாம் இது விசேஷமானது. ஏன் தெரியுமா? இந்த மாமரத்தில் எங்கள் தோள் உயரத்தில் ஒரு கிளை இருந்தது. மாமரத்தின் கீழ் ஒரு மரத்தாலான பெட்டி போட்டிருந்தோம். அதில் ஏறி அந்தக்கிளையில் ஏறிவிடுவது சுலபம். அங்கிருந்து அருகிலிருக்கும் இன்னொரு கொப்பிற்கு தாவினால், அங்கேதான் என்னுடைய சிம்மாசனம் இருந்தது. மூன்று கிளைகள் ஓரிடத்தில் இருந்து வெளியே கிளம்பியது. ஆகவே அங்கே நடுவில் ஒருவர் உட்கார்ந்து... சரி ஒரு சிறுவன்/மி உட்கார்ந்து கொள்ள இடம் இருந்தது. ஒரு கிளை முதுகு சாய்த்துக் கொள்ள வசதியாக இருந்தது. இன்னொரு கிளை எனக்காகவே கொஞ்சம் சரிவாக வளைந்து இருந்தது. அங்கே என்னுடைய தின்பண்டங்களையோ (வேறு என்ன? அப்பப்பா அம்மம்மாவை தாஜா பண்ணி வாங்குகிற மாங்காயும் மிளகாய்த்தூளும், பனங்காய் பணியாரம், பினாட்டு போன்றவை.), புத்தகங்களையோ வைத்துக்கொள்ளலாம். அதற்கு பிறகு என்ன ஜமாய்தான். பின்னேரம் சூரிய வெளிச்சம் குறையும் வரை அங்கேதான் என்னுடைய ராஜாங்கம். வீட்டுக்காரர் வந்து கூப்பிடும்வரை நகரமாட்டேன்.

அதுவும் நான் அங்கே ஆடாமல் அசையாமல் இருப்பதால், என்னைப்பார்த்து பயப்படாமல் துள்ளி விளையாடும் அணில்கள், மாம்பழத்தை கடிக்க வரும் கிளிகள். அணில் கோதிய மாம்பழம் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அணில் ரொம்ப கொஞ்சமாக கோதி இருந்தால் அதை நன்றாக வெட்டி விட்டு தருவார்கள்.

விநோதரசமஞ்சரி பற்றி பேச ஆரம்பித்ததும் முதலில் என் முன்னே வந்துபோன நினைவுகள் அந்த மாமரம்தான்.