Thursday, July 29, 2021

 தண்ணீர் பாட்டில். என்னோடு எப்போதும் எங்கேயும் வரும் ஒரு பொருள். இங்கே, எங்கேயும் தண்ணீர் குடிக்கும் வசதியும் தண்ணீர் பாட்டில் வாங்கும் வசதியும் இருந்தாலும், என்னோடு எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டில் இருக்கும். அதற்காகவே சிறிது பெரிதென தண்ணீர் பாட்டில்களும் என்னிடம் இருந்தன. அதற்காக கிண்டலடிக்கப்பட்டாலும் பெரிதும் பொருட்படுத்திக் கொள்வதில்லை. வேறெந்த குளிர்பானங்களை விடவும் தண்ணீர் விருப்பமெனக்கு. 


தண்ணீரைப் பற்றிய நினைவுகள் என்று பார்த்தால் ஹொஸ்டலில் தண்ணீர் தனியா வைத்திருந்த நினைவொன்றுமில்லை. புங்குடுதீவில், சில நேரங்களில் நல்ல தண்ணீர்க் கிணற்றுக்குப் போய் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்த நினைவுகள் உண்டு. குடத்தை இடுப்பில் வைக்கக் கஷ்டப்பட்டதும், வெறும் குடத்தை இடுப்பில் வைத்துப் பழகியதும், குறையத் தண்ணீர் இருந்தால், குடத்தைக் கொண்டு நடக்கக் கஷ்டம், நிரம்பி இருந்தால்தான் அதைக் கொண்டு நடக்கலாம் என்றும் அன்ரி சொன்ன நினைவுகளும் உண்டு. பிறகு தண்ணீர் குறித்த முக்கியமான நினைவுகளென்றால் 90களில் சென்னையில் தண்ணீருக்குக் கஷ்டப்பட்ட நாட்கள்தான். லாரியில் கொண்டு வந்து கொடுத்தார்கள்/வாங்கினோம். 

இப்ப ஏன் தண்ணீரைப் பற்றிய கதையென்றால் பிசிக்ஸ் இதழொன்றில், Water as a Metal என்றொரு செய்தி. சாதாரண நேரத்தில் சுத்தத் தண்ணீர் ஒரு நல்ல கடத்தியாம். அதுவே நிறைய pressure இருக்கும் இடங்களில் ஒரு உலோகத்தின் தன்மையைக் கொண்டு விடுகிறதாம். மற்றக் கிரகங்களில் அடியாழத்தில் அப்படி இருக்கிறதென்று சொல்கிறார்கள். அதே கூகுள் நியூஸ் பக்கத்தில் செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதுபோலத் தெரிவது களிமண் என்று இன்னொரு செய்தி.

இதற்கெல்லாம் நடுவில் என்டிபியின் ஜங்கீட் சிங், கனேடிய வடக்குப் பிராந்தியத்தில் சுற்றுப் பிரயாணம் செய்துகொண்டிருக்கிறார். உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான கனடாவில், இப்போதும் குடிதண்ணீர்ப் பிரச்சினை இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? குழாயைத் திறந்தால் குடிதண்ணீர் கிடைக்கும், அந்தத் தண்ணீரை எந்தவிதமான பயமுமின்றிக் குடிக்கலாம் என்று எல்லா இடங்களிலும் இங்கே சொல்வார்கள். ஆனால், கனேடிய பூர்வகுடிகள் வாழும் நிறைய reserveகளில் தண்ணீரைக் கொதிக்க வைத்துத்தான் குடிக்கவேண்டும். அதுவும் Attawapisket போன்ற நிலத்தின் அடியில் பல கோடி மதிப்புள்ள கனிம வளங்களும் வைரங்களும் இருக்கும் இடத்தில் வாழும் பூர்வகுடிகள் தண்ணீருக்கு இன்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாறவில்லை. Attawapisket வடக்கு ஒண்டாரியோ மாநிலத்தில் இருக்கிறது. அதே ஒண்டாரியோ மாநிலத்தில்தான் உலகின் மிகப்பெரிய நன்னீர் வளம்கொண்ட great lakesகளில் ஒன்றான ஓண்டாரியோ லேக் இருக்கிறது. 

இங்கே ஒன்டாரியோ மாநிலத்தில் Elmvale என்ற இடத்தில்தானாம் உலகிலேயே மிகவும் சுத்தமான தண்ணீர் இருக்கிறதாம். சில வாரங்களுக்கு முன்பு செய்தியில் சொன்னார்கள். விவசாய கிராமமான Elmvaleஇன் அடியில் இருக்கும் glacial deposits களில் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு ஆர்டிக் பனி தண்ணீராக இருப்பதாகவும், சில இடங்களில் மாடர்ன் தண்ணீர் - 1950களில் பெய்த மழை தண்ணீர் சேமிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த இடமும் ஐரோப்பியர்களும் பூர்வ குடியினரும் தத்தமக்கு முக்கியம் என்று சொல்லும் இடந்தான். Tiny and Wye Marshes என்னும் தண்ணீர்ப்பகுதிகள் அங்கே இருக்கின்றன.  

The area was known as Wendake to the first Indigenous inhabitants, the Wendat people, who farmed this area. Called “Huron” by the French, present day Huronia is the birthplace of Canadian agriculture. A Wendat settlement near Elmvale was known as Ekhiondastsaan (“the lands which exude water”). The French Jesuit community of Sainte-Marie among the Hurons was built at the mouth of the Wye River in 1636.

 இப்ப இந்த இடத்திலும் தண்ணீரின் தன்மையில் பிரச்சினைகள் வருகின்றன. தொழில்களுக்காக நிலத்தைப் பயன்படுத்தும் தன்மை மாறுவதால் வரும் பிரச்சினைகள்.

Wednesday, July 28, 2021

  நேற்று, நான் மதிக்கிற ஆட்களில் ஒருத்தர் ஆசாத் பாய்க்கு நான் எழுதுவன் எண்டு சொன்னன். அவர், மட்டுமில்ல இன்னும் நிறைய ஆட்கள் - மரத்தடி ஆக்கள்,  வலைப்பதிவு சனம், கூகுள் பஸ்/பிளஸ் ஆட்களெண்டு அப்பப்ப கேட்டபடி... அப்படியென்ன எழுதுறன் எண்டு தெரியேல்லயெண்டாலும், இந்த எழுத்துதான் நிறைய நண்பர்களைச் சம்பாதிச்சுக் குடுத்திருக்கு. என்ர உணர்வுகளை சரிசமமா வைச்சுக்கொள்ள உதவியிருக்கு. ஒத்த இரசனையுள்ள மனிதர்களிடம் அவர்களின் விருப்பு வெறுப்பு தாண்டி கற்றுக்கொள்ள வழிவகை அமைச்சுக் கொடுத்திருக்கு.

எழுதிறதெண்டு ஆயிற்றுது. எங்க எழுதுவம் எண்டு யோசிச்சா, இப்ப மரத்தடி குழுமம் இல்லை. அதில் இருந்த குருவிகள் நாங்களெல்லாம் ஒவ்வொரு திசையா பறந்து போயிற்றம். அதுக்கடுத்தது வலைப்பதிவு. இந்த வலைப்பதிவு blogspot.com. சின்னப்பிள்ளை அடிமேல அடிவைச்சு பழகின மாதிரி வலைப்பதிவில் தமிழை எப்படி எழுதிறது எண்டும் தமிழில எழுதிற ஆட்களை எப்படி ஒருங்கிணைக்கிறது எண்டும் பழகின இடம். ஒவ்வொருத்தரின்ட அஜெண்டாக்களுக்குள்ள சிக்கிக்கொள்ளாமல் தமிழில், தமிழோடு உறவாட ஒரு தளமாக உருவமைச்ச இடம்.

பார்வதி கிட்டடியில ஒரு பேட்டியில சொன்னமாதிரி... அந்தக் காலத்தில அப்படி செய்தம், இப்படி செய்தம் எண்டு பெரிய ஆட்கள் சொல்லி அறிவுரை செய்யேக்க கேட்கப் பிடிக்காது. அதையே நானும் செய்யக்கூடாது எண்டு நினைச்சாலும் அப்பப்ப பழைய நினைவுகள் வந்துபோகுது. 

வலைப்பதிவுக்கு வந்து உள்ளநுழையலாமெண்டு போனா, கதவு உடனயே திறந்தது ஒரு பெரிய ஆச்சரியம். அப்ப பாவிச்ச மின்னஞ்சல்தானெண்ட படியால இருக்கும்... உள்ளுக்குள்ள வந்து தன்பாட்டில எழுதத் தொடங்கிற்றன். இருந்த பழைய கணினியில சில மாதங்களுக்கு முந்தி உபுண்டு லினக்ஸ் போட்டுப் பார்த்தனான். இண்டைக்கு fbல கேட்டு தமிழில தட்டச்சவும் வழி வகுத்தாச்சு... என்ன எழுதுறது எண்டு நாளைக்கு யோசிப்பம்


July 28, 2021