பண்டாரப்பெத்தாச்சி
நாலரை அடிக்கும் ஐந்தடிக்கும் இடைப்பட்ட உயரம். எங்கள் ஊரில் வயதானவர்கள் கட்டுவதுபோன்ற புடவைக்கட்டு. நூறு கிலோவுக்குள் மதிப்பிடக்கூடிய எடை. காது கேக்காததால் கொஞ்சம் சத்தமாக பேசும் வழக்கம். கூட யாருமே இல்லை என்பதாலோ என்னவோ, யாரோடு பேசிக்கொண்டிருந்தாலும் கொஞ்சம் அதிகமாகவே பேசும் பழக்கம். இந்தப்பழக்கத்தால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சிலவேளைகளில் இவர் கண்களில் படாமல் ஒளிவது. பண்டாரப்பெத்தாச்சியை நினைத்தால் மனதில் விழும் பிம்பம் இதுதான். பண்டாரப்பெத்தாச்சியை முதலில் எப்போது பார்த்தேன் என்பதெல்லாம் ஞாபகம் இல்லை. ஆனால், நான் புங்குடுதீவிலும் யாழ்ப்பாணத்திலும் இருந்த நாட்களில் இவரை நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. யார் வீட்டு ஆல்பத்தில் இருக்கிறாரோ இல்லையோ, எங்கள் வீட்டு புகைப்பட ஆல்பத்தில் இருக்கிறார். எங்கள் வீட்டிற்கு இடதுபுறம் சாலையின் அதே பக்கத்தில் இருக்கிறது இவருடைய சிறிய வீடு. வீடு என்று சொல்வதைவிட குடிசை என்று சொல்லலாம். எங்கள் வீட்டு கேற்றிலிருந்து நடந்தால் பண்டாரப்பெத்தாச்சியின் வளவும் வீடும், படலையும் வரும். எங்கள் வீட்டில் இருந்தமாதிரி பெரிய படலையும் சிறிய படலையும் இல்லை. பண்டாரப்பெத்தாச்சியின் சிறிய ஆட்கள் போய்வரும் படலையை திறந்தவுடன் எங்கள் வீடு மாதிரி முன்பக்கம் மரமில்லாமல் இருக்காது. பண்டாரப்பெத்தாச்சியின் சிறிய படலையை திறந்து கொண்டு உள்ளே போனால், உடனே நம்மை வரவேற்பது அப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கும் பனைமரம். அதே உயரத்தில் இன்னும் சில பனைமரங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கின்றன. இவற்றோடு வேலி ஓரங்களில் பனைமரங்களும் தென்னைமரங்களும் உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. என்ன மரம் என்று என்னால் சொல்லமுடியாத சில மரங்களும் வளர்ந்து இருக்கின்றன. இந்த மரங்களின் கீழே புற்கள் நன்றாக பச்சைப்பசுமையாக வளர்ந்திருக்கின்றன. ஆனால், எனக்கு எப்போதும் அந்த புல்தரையில் நடப்பதற்கு பயம். வேறென்ன பாம்புகளின் மீதிருக்கும் மரியாதைதான். இந்த புற்களுக்கு நடுவில் ஒரு ஒத்தையடி பாதை போகும். காணியின் கடைசியில்தான் வீடு இருந்தது. இந்த ஒத்தையடி பாதையின் இரண்டு பக்கமும் வேறு மரங்களும் இருந்தன. ஒரு ஓரமாக கனகாம்பர செடியும் இருந்தது. அவ்வப்போது இங்கு வந்து பூப்பறித்துக்கொண்டு போவேன். எங்கள் இருவரின் நிலத்தையும் பிரிக்கும் வேலியின் குன்றுமணி கொடியன்றும் இருந்தது. அவ்வப்போது அம்மம்மாவுடன் வந்தால் அவவை காவலுக்கு விட்டுவிட்டு குன்றுமணிகளை பொறுக்குவது வழக்கம். பண்டாரப்பெத்தாச்சியின் வீடு சிறியது என்று முன்பே சொல்லிவிட்டேன் இல்லையா. அவரின் வீடு கல்வீடு இல்லை மண்வீடுதான். காணியின் அடித்தொங்கலில் இரண்டு குடிசைகள் இருக்கின்றன. "டனா"ப்பட வீடும், சமையல் அறையும் கட்டப்பட்டிருந்தது. படலையில் ஆரம்பித்த ஒற்றையடிப்பாதை இந்த இரண்டு குடிசைகளையும் பிரித்தது. முதலில் சமையல் அறை. மண்ணால் கட்டப்பட்ட சுவர். ஜன்னல் கதவு எல்லாம் ஒன்றும் இல்லை. கூரை பனையோலையால் வேய்ந்து இருந்தது. சமையல் அறையின் முன்பக்கம் வாசலுக்கு இரண்டு பக்கத்திலும் திண்ணை இருந்தது. வாசலுக்கு கிடுகுகள் சேர்த்துக்கட்டப்பட்ட மறைப்பு இருந்தது. இரவிலும், மத்தியானத்தில் உறங்கும் நேரத்திலும் குசினி மூடி இருக்கும். குசினி என்றுதான் எங்கள் ஊரில் சமையல் அறையை சொல்லுவார்கள். பண்டாரப்பெத்தாச்சியின் வீடும் அவரின் குசினி போலவே மண்ணால் கட்டப்பட்டு பனையோலையால் வேயப்பட்டிருந்தது. இந்த வீட்டில் உள்ளே ஒரு சிறிய ஜன்னல் இல்லாத அறையும் இருக்கிறது. இங்கும் திண்ணை இருந்தது. பண்டாரப்பெத்தாச்சியின் வீடு எப்பவும் சுத்தமாக இருக்கும். வாரத்துக்கு ஒரு தடவையோ இரு வாரத்துக்கு ஒருமுறையோ வீட்டையும் குசினியையும் பசுஞ்சாணத்தால் மெழுகி வைத்த்திருப்பார் பண்டாரப்பெத்தாச்சி. மனதிற்கு இதமளிக்கும் அந்த வீட்டு வாசனையை நான் வேறெங்கும் இன்னமும் அனுபவிக்கவில்லை. பல சமயங்களில் பண்டாரப்பெத்தாச்சி வீட்டை மெழுகுவதை உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன். வீட்டின் ஒரு பக்கத்தில் மாமரம் ஒன்று நிற்கும். அதுபோலவே சாலையில் இருந்து வெகுதூரம் உள்ளே இருந்த வீடுகள் சாலைக்கு முதுகைக்காட்டியபடி இருந்தன. இந்த குடிசைகளுக்கு முன்புறமாக வேலியின் ஓரத்தில் இன்னும் சில பனைமரங்களும் தென்னைமரங்களும் இருந்தன. கூடவே ஒரு நெல்லிக்காய் மரமும், முருங்கைமரங்களும் இருந்தன. இவரின் குடும்ப விவகாரங்கள் எங்களுக்கெல்லாம் தெரியாது. ஆனால் ஒருவரை தத்தெடுத்து வளர்த்தார் என்பது தெரியும். அவர் என்னுடைய தோழியின் தந்தைதா. உறவினரும் கூட. ஆனால், பண்டாரப்பெத்தாச்சியை கண்டால் எல்லோரும் நின்று கதைத்து விட்டுத்தான் போவார்கள். லேசாகக்கூன் விழுந்திருக்கும் அவர், கையில் பொல்லுடன் எல்லா இடமும் போய்வருவார். பண்டாரப்பெத்தாச்சி வீட்டிற்கு காலையில் போனால், முதல்நாள் சமைத்த பாத்திரங்கள் கிணற்றடியில் இருக்கும். சில சமயங்களில் எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பெண் ஒருத்தி வந்து தேய்த்து கொடுத்து விட்டுப்போவார். இல்லையென்றால் பண்டாரப்பெத்தாச்சி தேய்ப்பார். அவருடன் கூட அமர்ந்து அவர் செய்வதைப்பார்த்தும், பேசியும் இருந்திருக்கிறோம். அது என்னமோ தெரியவில்லை, வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் பண்டாரப்பெத்தாச்சிக்கும் எங்களுக்கும் நன்றாக ஒத்துப்போயிற்று. சுருக்கம் விழுந்து மிகவும் மென்மையாக இருக்கும் அவரது கைகளை தடவிக்கொண்டிருப்பதற்கு போட்டி நடக்கும். எங்களுடன் அம்மம்மாவும் வந்திருக்கிறார் என்றால், அவ்வளவாக சண்டை வராது. சிலர் அம்மம்மாவுடன் இருப்பார்கள். |