கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சில சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு சென்றேன். அங்கு நான் கண்ட சில சம்பவங்கள் எனது மனதில் நெருடலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன, அவற்றை தீர்ப்பதற்கு என்னுடைய அனுபவத்தில் சில தீர்வுகளை முன் வைக்கின்றேன். சரியான தீர்வு காண வேண்டும் என்பதற்காக உங்களுக்கும் அவற்றை தெரியப்படுத்துகின்றேன்.
போரால் நாம் அடைந்தது எத்தனையோ, அவற்றில் வறுமையான குடும்பங்களும், ஆதரவற்ற சமுதாயமும் தான் இன்னும் எம்மண்ணில் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றன. இவை தவிர பணம் இருக்கின்ற மக்கள் அளவிற்கு மிஞ்சிய பணத்தை என்ன செய்வது என்று தெரியாது அப் பணம் ஏதோ எல்லாம் செய்து கொண்டிருக்கின்றது.
இதில் முதலாவது வகையினருக்கு பல தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து கொண்டிருக்கின்றன. தொண்டு நிறுவனங்களில் சாதாரணமாக காணப்படும் ஊழல் தவிர்க்க முடியாது. கேள்வி கேட்க ஆளில்லாமல் ஒதுக்கப்பட்ட மொத்தப்பணத்தில் ஒரு தொகையாவது மக்களைப் போய் சேருகின்றதா என்று கேட்டால், அங்கும் கேள்விக்குறியே மிஞ்சுகிறது.
தொண்டு நிறுவனங்களால் செலவு செய்யப்படும் பணம் முறையாக செலவு செய்யப்பட்டால் அடையும் நன்மை அபரிமிதமாகவே இருக்கும் என்பது என்னுடைய கருத்து. அநேகமான திட்டங்கள் வெளிநாட்டை சேர்ந்த திட்டம் தீட்டும் வல்லுனர்களால் திட்டமிடப்படுகின்றது. அதன் நோக்கங்கள் சிறந்தவையாக இருந்தாலும் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தம் நம்மவர்கள் தமது மேலதிகாரிகளுக்காக அத்திட்டங்களை செய்வதனால் எந்த சரியான திட்டமாக இருந்தாலும் அத்திட்டங்கள் அதன் குறிக்கோளை அடையத் தவறிவிடுகின்றன.
உதாரணமாக சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தால் சிறுவர்களுக்கான சஞ்சிகை துளிர் கடந்த ஒரு வருடமாக வெளியிடப்படுகின்றது. இதற்காக மாதம் 15,000 ரூபா ஒதுக்கப்படுகின்றது. அந்த சஞ்சிகை தனது குறிக்கோளை இதுவரை அடையவில்லை என நான் துணிந்து கூறுவேன். ஏனெனில் நானும் அந்த திட்டத்தில் பங்கு பற்றிக் கொண்டிருக்கின்றேன். துளிர் சஞ்சிகை அச்சிடும் பொறுப்பு என்னுடையது. தரம் போதாது மாற்ற வேண்டும் என்று பல தடவை எடுத்துச் சொல்லி சில மாற்றங்கள் செய்துள்ளோம். ஆனாலும் பெரிய மாற்றங்கள் செய்வதற்கு அதற்கு பொறுப்பானவர்கள் அனுமதி அளிக்கவில்லை.
இதே போலவே அநேகமான திட்டங்கள், திட்டவரைவு, திட்டசெலவு அறிக்கை, திட்ட பின் அறிக்கை என எல்லாமே சரியாக மேலதிகாரிகளுக்கு அளிக்கப்படுகின்றன. ஆனால் அத்திட்டங்களால் எத்தனை பேர் பயன் அடைந்தார்கள் என்று பார்த்தால் ஒரு சில பேர்களாக தான் இருக்கும்.
அடுத்தது ஆதரவற்றவர்களுடையது, பல சிறுவர் பராமரிப்பு நிறுவனங்கள் உள்ளன என்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். நல்ல நோக்கம் பல ஆதரவற்ற எத்தனையோ பேர் பலன் அடைகிறார்கள். உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம் என எல்லா அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன. இதில் ஒவ்வொரு நிலையத்திற்கும் மற்றைய நிலையத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றன. இதற்குப் பல காரணங்கள், முக்கிய காரணம் அதன் நிர்வாகமே என்பது என்னுடைய கருத்து. எப்போதுமே ஒரு இனமோ அல்லது வியாபாரமோ சிறப்பாக அமைவதற்கு அதன் கொள்கைளும் தலைமையும் காரணம். இதனை யாரும் மறுக்க முடியாது, இதற்கு வரலாறு நல்ல உதாரணம்.
பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதிலும் பார்க்க அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது சிறந்தது. இது மாவோ சேதுங்கின் வாதம். இதுவே என்னுடைய வாதமும் கூட. இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் எத்தனை இக் கொள்கையைப் பின்பற்றுகின்றன என்பது கேள்விக்குறியே. இந்தச் சிறுவர்கள் இவ்வாறான ஒரு பராமரிப்பு நிலையத்திற்கு தற்சமயம் செல்லாதிருந்தால் ஒரு பகுதியினர் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் செத்து மடிந்திருப்பார்கள். ஆனால் இன்னுமொரு பகுதியினர், சமூகத்தில் இருந்து சமூகத்தைப் படித்திருப்பார்கள், தான் எவ்வாறு வாழ வேண்டும் என்று தன் அனுபவத்தால் கற்றிருப்பார்கள், சில வேளை அதில் ஒருவர் சரி விஞ்ஞானியாகவோ அல்லது பெரிய வியாபாரியாகவோ வந்திருக்கலாம். இதற்கும் வரலாறே சாட்சி. வறுமை ஒருவனை சரியாக வழி நடத்தும், அதற்காக எல்லோரும் வறியவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிர்வகிப்பவர்கள் அவர்களை சரியான பாதையில் வழி நடத்த வேண்டும். அவ்வாறு செய்யத்தவறும் சந்தர்ப்பத்தில் ஈழத்தில் உள்ள அனைத்து ஆதரவற்ற குழந்தைகளும் தொடர்ந்தும் ஆதரவற்றவர்களாகவே இருப்பார்கள்.
இந்துமா மன்றத்தால் நிர்வகிக்கப்படும் ரத்மலானையில் இயங்கும் ஆண்கள் விடுதி
அங்கு ஏறத்தாழ பாலர் வகுப்பில் இருந்து உயர்தரம் வரை 100 மாணவர்கள் இருக்கின்றார்கள். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், பல சமூகப் பின்னணிகளில் இருந்தும் மாணவர்கள் தாய் தந்தை இருவரையும் இழந்தவர்கள், தாய் அல்லது தந்தையை இழந்தவர், அல்லது குடும்பத்தில் பொருளாதாரக் கஷ்டம் உள்ளவர் என்று எல்லோரும் இருக்கிறார்கள்.
இவர்கள் இரத்மலானை இந்துக்கல்லூரிலேயே தமது கல்வியை கற்கிறார்கள், இவர்களை பராமரிக்க இருவர், இவர்களுக்கு உணவு சமைக்க ஒரு குடும்பம் இவர்களை நிர்வகிப்பவர்கள் வாரத்தில் இரண்டு தடவையாவது வந்து பார்ப்பார்கள். இது தான் இவர்களுடைய பின்னணி.
இவர்களை நான் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவர்கள் என்னிடம் சொல்லிய சில அவர்களுடைய யதார்த்தமான ஏக்கங்கள்:
எங்களுக்கு அம்மா அப்பா இருந்தால் எங்களை இப்படி ஏசுவார்களா?
எங்களுக்கு வசதியான சொந்தக்காரர்கள் இருந்தால் நாங்களும் வெளிநாட்டுக்குப் போயாவது கொஞ்சம் காசு உழைச்சு வசதியாக இருந்திருப்போம்!
எப்படியாவது படிச்சு வீட்டை பார்க்க வேணும்.
சாப்பாட்டுக்கடையில் வேலை எடுத்து தந்தார்கள். அங்கு விடிய 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணிவரை வேலை பிறகு வந்து படிக்க ஏலாது..
----------
சமீபத்தில் இலங்கை சென்று திரும்பிய திரு.சிவா பிள்ளை அவர்களிடம் அவர் கிளம்புவதற்கு முன்னர், அவருடைய பயண அனுபவங்களை திரும்பி வந்ததும் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். சில நாட்களுக்கு முன்னர், அவர் அனுப்பிய கட்டுரையின் சில பகுதிகளை இங்கு தந்திருக்கிறேன்.
கட்டுரையைத்தொடர்ந்து படிக்க இங்கே சுட்டுங்கள்
உங்களின் மேலான யோசனைகளை அக்கட்டுரையின் முடிவின் தரப்பட்டிருக்கும் முகவரிகளுக்கு எழுதுங்கள்.
|