Friday, January 28, 2005

குடிவகை

குடிவகை - குடிவகை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் என்னுடைய அம்மம்மாவிடம் கேட்டால் அவர் நன்றாக விளங்கப் படுத்துவார். குடிவகை என்று சொல்லும்போதே அவருடைய முகத்தில் ஒரு சுழிப்பு வந்துபோகும். அவரிடம் அப்படி என்றால் என்ன அம்மம்மா என்று Shrek-2இல் வரும் Cat மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு கேட்டுப் பேச்சு வாங்கிக் கட்டியிருக்கிறோம். ஆனால், அந்த அம்மம்மாதான் அப்பம் சுடுவதற்கு முதல்நாள் கள்ளு வாங்கிக்கொண்டு வருவா.

shrek2_cat_thumb.jpg

இப்ப குடிவகை என்ற பேச்சு ஏன் வந்தது என்று கேட்கிறீர்களா? பொறுங்க. பொறுங்க. ஏன் இவ்வளவு அவசரப் படுகிறீங்க? ஆறுதலாச் சொல்லுறன். இந்தக் குளிரில நான் ஓடிரப் போறனா இல்ல நீங்கதான் ஓடிப்போகப் போறீங்களா?

martini.jpg
[சந்தடி சாக்கில பியேர்ஸ் ப்ரொஸ்னனை உள்ளுக்குள்ள நுழைச்சாச்சு! ]

ஆ... குளிர் எண்டு சொன்னோடதான் ஒண்டு ஞாபகம் வருகுது. சனம் எல்லாம் ஏன் குளிருக்குத் தண்ணி அடிக்கோணும். குளிருக்கு சிகரெட் குடிக்கோணும் எண்டு சொல்லுதெண்டு எனக்கு இண்டைக்கு வரை விளங்கேல்ல. யாருக்காவது விளங்கினா சொல்லுங்க. அதுவும் ஆம்பிளைகள் மட்டும்தான் இதைச் சொல்லுவினம். இந்தக் குளிருக்கு சிகரெட் பிடிக்கோணும் எண்டு சொல்லுற ஆக்களுக்கு கியூபெக்கில பிரச்சினை வரப்போகுது எண்டு நினைக்கிறன். வரோணும். பொதுவிடங்களில சிகரெட் பிடிக்கக்கூடாது எண்டு சட்டம் கொண்டுவரலாமா எண்டு அரசாங்கம் யோசிக்குதாம். நல்ல விஷயம்!

கியூபெக்கில சிகரெட்டின்ற கதை இப்படியெண்டா குடிவகையின்ற கதைதான் போன மூண்டு மாசமா மோசமாயிருக்கு. இங்க கியூபெக்கில சனத்துக்கு சும்மா நாளிலயே ஏதாவது விருந்து கொண்டாட்டமெண்டா வைன் வேணும். வைனில்லாம ஒரு கொண்டாட்டமோ, பார்ட்டியோ நடக்காது. பொட்-லக் பார்ட்டிகளுக்கு, சமைக்கப் பஞ்சிப்படுற ஆக்களும் ஒரு பத்துப்பதினைஞ்சு டொலருக்கு வைனை வாங்கியண்டு போய் ஒப்பேத்திரலாம். ஆனாப்பாருங்க, அதுக்கும் ஒரு ஆப்பு வைச்சிட்டாங்கள். கிறிஸ்மஸ் வருகுது எண்டு சனங்கள் இந்த வருஷம் எத்தனை போத்தில் முடிக்கிறது எண்டு சனமெல்லாம் சந்தோஷமா இருக்கேக்க இந்த SAQ ஆக்கள் வேலைநிறுத்தம் செய்யத் தொடங்கிற்றினம். பொதுசனத்தில கொஞ்சப்பேர், முன்ஜாக்கிரதையாப்போய் கொஞ்சப் போத்தில்களைக் கொண்டந்து அடுக்கிற்றுது. மற்றச் சனம் எல்லாம், அரசாங்கம் ஏதாவது செய்யும் - ஒண்டு சம்பளத்தைக் கூட்டமாட்டனெண்டு சொல்லும் அல்லது அரசாங்கம் கடுமையா இருந்தா SAQஆக்கள் வேலைநிறுத்தத்தை நிப்பாட்டுவினம் எண்டு நினைச்சிச்சினம்.

அரசாங்கம், சம்பளத்தைக் கூட்ட மாட்டனெண்டு சொல்லிப்போட்டுது. கிறிஸ்மஸ் கிட்டக்கிட்ட வருகுது. மொன்ரியலில நாலைஞ்சு கடைகளை மானேஜ்மெண்ட் ஆக்களே நடத்திச்சினம். சனமெல்லாம் கியூல நிண்டு வாங்கத் தொடங்கிற்றுது. டீவியில எல்லாம் காட்டினாங்கள். கிறிஸ்மஸ் வரப்போறதால அரசாங்கம் கீழ்ப்பணிஞ்சு வந்திரும் எண்டு நினைச்ச SAQ ஆக்களுக்கெல்லாம் பெரிய ஷொக். அப்பிடி ஒண்டும் நடக்கேல்ல.

மற்ற எல்லாக் கடைகளப் போல SAQக்கும் கிறிஸ்மஸ்மூட்டம்தான் நல்ல வியாபாரம் நடக்கும். சும்மாவே பின்ன. ஒ·பிஸ் பார்ட்டி, வீட்டுல பார்ட்டி, ஸ்கூல் பார்ட்டி எண்டு எங்கயெல்லாம் பார்ட்டியோ அங்கயெல்லாம் வைன் ஆறா ஓடும். இதுதவிர, ஒ·பிஸ்வழிய நடக்கிற குலுக்கல்முறை பரிசுகளுக்கும் சனம் பதினைஞ்சு டொலர் இருவது டொலருக்கு ஒரு வைன் போத்திலை வாங்கிக்கொண்டுபோய் குடுத்திரும். பாக்கிறதுக்கு வடிவாயும் இருக்கும். பேர்சுக்கு ஏற்றமாதிரியும் இருக்கும் எண்டு எல்லாச்சனமும் போத்திலோடதான் வருங்கள். இப்பிடிக்கிடைச்ச போத்திலொண்டுதான் போன வருசம்.... - சரி அதை விடுங்க. அந்தக் கதை இங்க என்னத்துக்கு...

சரி இப்ப என்ன சொல்லியண்டு இருந்தனான். ஓம்! SAQ ஸ்ட்ரைக் நிண்டபாடில்ல. அரசாங்கமும் பணிஞ்சமாதிரியில்ல. பேப்பர்லயெல்லாம் புலம்பத் தொடங்கிற்றினம். அதிலயும் பாருங்க. மொன்ரியல் Gazetteல சனிக்கிழமை சனிக்கிழமை வைன் பற்றி எழுதுற தாத்தா ஏதேதோ வைன்களைப் பற்றி எழுதித் தள்ளியண்டுதான் இருந்தேர். நிப்பாட்டேல்ல. அவரிட்ட யாரும் போய், எங்கேயப்பா இதையெல்லாம் வாங்கிறது எண்டு கேக்கேல்லப்போல! அதே Montreal Gazetteஇல SAQல வேலை செய்யுற ஒரு பெட்டை தெரியாத்தனமா ஒண்டைச் சொல்லப்போய் பிறகு சனமெல்லாம் ஆசிரியருக்கு கடிதம் எழுதிக் குடிக்க சேச்சே! குவிக்கத் தொடங்கிற்றுதுகள். அவ, போத்தில்ல வைன் நிரப்புற வேலை செய்யுறவவாம்! அவ, தான் மொத்தமா வைன் வாங்கி தனக்குத் தெரிஞ்ச ஆக்கள், சொந்தக் காரர் எண்டு வித்து அதில வர்ர காசில அடுத்த வருசம் ஐரோப்பாவுக்குப் போகலாம் எண்டு இருக்கிறன் எண்டு சொல்லிப்போட்டா. கனக்க ஒண்டுமில்ல ஒரு 300 போத்தில் வாங்க இருக்கிறன் எண்டு சொல்லிப்போட்டுது. காய்ஞ்சு கருவாடாகிக் கொண்டிருந்த சனத்துக்கு இது காணாதா? எல்லாரும் அந்தப் பெட்டைய வறுக்கெடுக்கத் தொடங்கிச்சினம்.

இது ஒரு பக்கம் நடந்தண்டு இருக்க இன்னொரு பக்கம் கிறிஸ்மஸ் கிட்ட வந்தண்டே இருந்துது. ஸ்ட்ரைக்கும் முடியுற பாடாத் தெரியேல்ல. வைனைத் தவிர வேற குடிவகை குடிக்கிற சனம், கொஞ்சம் அக்கம் பக்கத்து ஊர், நாடு எண்டு போகத் தொடங்கிச்சுது. என்ற சொந்தக் காரர் ஒரு ஆளுக்கு கார் ஓட்டுறதை விடப் பிடிக்காத விஷயம் வேற ஒண்டுமே இல்ல! அவரே, கிறிஸ்மஸ் லீவுக்கு டொரோண்டோவுக்கு போயிற்று வருவமா எண்டு கேக்கத் தொடங்கிற்றேர். சும்மா இருக்கிற நேரத்திலயே டொரோண்டோவுக்குப் போகப் பஞ்சிப் படுறவர் இந்தப் பனிகாலத்துல எதுக்கு டொரோண்டோக் கதை கதைக்கிறேன் எண்டு யோசிச்சபிறகெல்லோ விஷயம் பிடிப்பட்டுது. அவர் போகேல்ல எண்டாலும் Montreal Gazetteஇல எழுதுற Lisa Fittermanதொடக்கம் கன சனம் டோராண்டோ அல்லது கியூபெக்குக்குப் பக்கத்தில இருக்கிற Cornwall எண்டு போயிற்று அள்ளியண்டு வந்துதுகள்.

கிறிஸ்மஸ்ஸ¤ம் வந்து போயிற்றுது, ஆனா இந்த ஸ்ட்ரைக் இன்னும் நிண்ட பாடாத் தெரியேல்ல. அதோட ஸ்ட்ரைக்ல நிண்டவைக்கு கிறிஸ்மஸ் போனஸ¤ம் கிடைக்காமப் போயிற்றுது. ஸ்ட்ரைக்கில நிக்கிறவை இரண்டு கிழமைக்கு முதல் பெரிய யூனியனில சேர்ந்திருக்கீனம். அதோட ஸ்ட்ரைக்கில நிக்கிறவைல சரியாக் கஷ்டப் படுறவையின்ற குடும்பத்துக்கு இங்க இருக்கிற சில உதவி செய்யிற ஸ்தாபனங்கள் - Sun Youth எண்டு பெயர், உதவி செய்யீனமாம். அதுக்கு கண்டனம் சொல்லி நிறையக் கடிதங்கள் வந்து குவிஞ்சண்டு இருக்கு.

இப்ப சொல்லுங்க குடிவகையைப் பற்றிக் கதைக்கிற நேரமா இது???

[குறிப்பு: என்னுடைய மனதில் இருக்கும் கேள்வியன்றை இங்கே வைக்கிறேன். நேரம்கிடைக்கும்போது கொஞ்சம் ஆராய்ச்சி செய்து எழுத உத்தேசம். யாருக்காவது விடை தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். கியூபெக்கில் குடிவகை விற்கும் அதிகாரம் அரசாங்கத்திடம் இருக்கிறது. Depanneurs - அதாங்க சந்து முனைகளில் இருக்கும் கடைகள். Depanneurகளிலும் குடிவகை விற்க அனுமதிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், தரம் ஒரேமாதிரி இருக்காதாம். பியர் வகைகள் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் காஸ் ஸ்டேஷன் கடைகளிலும் கிடைக்கும். சரி குடிவகை முடிஞ்சுதா. இந்த லாட்டரி இருக்குதே, அதை இங்கே கியூபெக்கில் நடத்துவதும் அரசாங்கம்தான். என்னைப் பெருவியப்பில் ஆழ்த்தும் விஷயம் இது. குடியை விட, இதென்னத்துக்கு என்று கடுப்பாக்கும் விஷயம். லாட்டரி தொடர்பான சர்ச்சைகள் பிரச்சினைகள் ஒரு தொடர்விஷயம். அதுபோக மொன்ரியலில் இருக்கும் காசினோ'வும் அரசாங்கத்தால்தான் நடத்தப் படுகிறது. உருப்படுமா??? - இதெல்லாம் எப்படி எங்கே ஆரம்பித்தது. அரசாங்கத்தின் கைகளுக்குப் போனது ஏன் என்றெல்லாம் கொஞ்சம் படிக்க வேண்டும். Prohibition சமயத்தில் குடிவகை அரசாங்கத்தால் கையகப் படுத்தப் பட்டது என்று மட்டும் தெரிந்துவைத்திருக்கிறேன். பிறகு பாப்பம்.]

ஓ! முக்கியமான விசயத்த மறந்திட்டன். இந்தப் பக்கம் வர்ர யாராவது கருணை வைச்சு வைனோ, ஏதாவது நல்ல குடிவகையோ கொண்டந்தா சொல்லுங்க.

Tuesday, January 25, 2005

கனேடிய பனிக்குளிரும் சாப்பாடும்

stjohns_snow050124.jpg
நன்றி: CBC

பொதுவாக கனேடிய குளிர் எப்படியிருக்கும் என்று எல்லோராலும் ஊகிக்க முடியும் என்று நினைக்கிறேன். 'குளிர்நிலை' என்று செல்லமாக வெங்கட் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். ஜனவரி மாதக் கடைசி இரண்டு வாரங்கள்தான் வருடத்திலேயே அதிக குளிர் கொண்டது என்று எல்லோரும் சொல்வார்கள். அது உண்மை உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. போன கிழமையில் இருந்து பகல் நேரங்களில் -20 செல்சியஸ் அளவில் குளிர்நிலை இருக்கிறது. குளிர் காற்று வீசினால் இன்னொரு -10ஐக் கூட்டிக் கொள்ளுங்கள். போன வாரம் ஒரு நாள் -40 செல்சியஸிற்குச் சென்ற குளிர்நிலை இதுவரைக்கும் அந்தளவு போகவில்லை. மொன்ரியலில் இந்த வருடம், பனிக்காலம் தொடங்கியதில் இருந்து இதுவரை இரண்டு தடவை பனிப்புயல் வீசியிருக்கிறது. பனி பெய்தால் அவ்வளவு குளிராது என்றாலும், பனிப்பொழிவு அவ்வளவு சௌகரியமானதல்ல! மொன்ரியல் கதை இப்படியென்றால் அட்லாண்டிக் கரையையொட்டி மாகாணங்களில் கடந்த ஏழு நாட்களில் மூன்று பனிப்புயல்கள் வீசியிருக்கின்றன. மூன்றாவது பனிப்புயல் அட்லாண்டிக் நகரங்களை 70 செ.மீ. பனியில் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவு குளிரடித்தாலும், பனி பெய்தாலும் கனேடிய மக்கள் தங்களின் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டதில்லை. ஜனவரி 22இல் இருந்து ·பெப்ரவரி 6ஆம் தேதிவரைக்கும் fறூte des Neiges de Montrளூalஐக் கொண்டாடுகிறார்கள்.

கியூபெக் மாகாணம் கனேடிய மாகாணங்களிலேயே தனியாகத் தெரியும். பிரெஞ்சு மொழி பேசும் மாகாணம் என்பது ஒர் புறமிருக்க, இம்மாநிலத்துக்கேயான பல விசேட குணங்களும் இருக்கின்றன. உணவு முக்கியமான ஒன்று. மொன்ரியல் நகரம் அதன் உணவு விடுதிகளுக்குப் பெயர் போனது. பல்வேறு வகையான உணவு வகைகள் இங்கே கிடைக்கும். அருமையான Sushiஇலிருந்து ஒவ்வொரு கிழக்காசிய நாட்டு உணவு வகைகளும், எஞ்சிய ஆசிய நாட்டு உணவு வகைகள், மத்திய கிழக்கு, ஐரோப்பிய, தென்னமெரிக்க, கரிபிய உணவு வகைகள் மட்டுமல்லாது கியூபெக் மாகாணத்து உணவுகளும் உண்டு. இதுபோன்றதொரு குளிர்காலத்தில் Poutineபற்றி எழுதியிருந்தேன்.

குளிர்காலத்துக்கு ஏற்ற இன்னுமொரு உணவு கிழக்காசிய நூடுல் சூப் வகைகள். செய்து சாப்பிடுவதை விட உணவு விடுதிக்கே சென்று சாப்பிடுவதுதான் சுலபமானது என்றாலும், இந்தப் பனியில் யார் இரவில் வெளியே போவார்கள்? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றிருக்கும் என் போன்றோர்களுக்கென்றே உடனடி நூடில்ஸ் விற்கிறார்கள். உடனடி நூடில்ஸ்களில் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது. சூப்பர்மார்க்கெட்டுகளை ஒதுக்கி விட்டு சைனீஸ் கடைகளுக்குப் பகலில் ஒரு நடை சென்று வாருங்கள். விதவிதமான நூடுல்ஸ் வகைகளைப் பொறுக்கிக் கொள்ளலாம். 3 பாக்கெட்டுகள் ஒரு டாலர் என்பதிலிருந்து 80 சதத்திற்கு ஒரு பாக்கெட் என்று கிடைக்கும்.

shinramyun.jpg

நன்றாகக் காரசாரமாக கொரியன் நூடில்ஸ் சூப் வேண்டும் என்று நினைப்பவர்கள் Shin Ramyunஐ முயற்சி செய்துபாருங்கள். காரம் ஆந்திராவையும் தோற்கடித்துவிடும். அதனால் கொஞ்சம் கவனமாக இருங்கள்.


mamypho.jpg

உங்களுக்கு இன்றைக்கு எனக்கு வந்ததைப்போல Pho Bo பசி வந்தால் என்ன செய்வது? என்ன செய்வது??? ஒன்று உணவு விடுதிக்குப் போய் வாங்கி வர வேண்டும். இல்லையென்றால் வீட்டிலேயே செய்துகொள்ள வேண்டும் என்கிறீர்களா? வியட்நாமைச் சேர்ந்த பெண் ஒருத்தியை 'செட்-அப்' செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இதில் சேர்க்க முடியாது. ;)

இன்று நான் செய்ததுபோல தண்ணீரைச் சுடவைத்து Mamy Pho Bo உடனடி நூடுல்ஸ் பாக்கெட்டைப் பிரித்து சூப் பௌலில் இட்டு சுடு தண்ணீரில் அமிழ்த்தி தட்டால் மூடி விடுங்கள். மூன்று நான்கு நிமிடங்களில் கொஞ்சம் ஸாஸ் விட்டு, பயற்றிலிருந்து செய்யும் bean sprout கொஞ்சம் போட்டு 'ஸ்வாகா' செய்யுங்கள்.

குளிர் காலத்துக்குக் கை கொடுக்கும் இந்த சூப், கோடை காலத்துக்கு ஏற்றதாக இருப்பது விந்தைதான்.

என்ன நாளைக்கு உங்க வீட்டிலும் Pho Boவா?

pho.jpg

Monday, January 24, 2005

வெள்ளாவி - ஒரு வாசிப்பனுபவம்

வெள்ளாவி நாவலில் வரும் ஒரு பகுதியை முந்தைய பதிவில் கொடுத்திருக்கிறேன். இலங்கை, மட்டக்களப்புத் தமிழில் எழுதப் பட்டிருக்கும் இந்நாவல் வண்ணார் சமூகத்தை மையமாக வைத்து எழுதப் பட்டிருக்கிறது. இச்சமூகத்தைப் பற்றியோ வேறு சில சமூகங்களைப் பற்றியோ விரிவாக ஆராய்ந்து கூட இந்நாவலையும் ஆராய்ந்து விவரித்து எழுதும் சூழ்நிலை இப்போது இல்லையென்று நினைக்கிறேன். நம் சமூகத்தின் பழக்க வழக்கங்கள் இன்னும் மாறாத அல்லது முழுவதும் மாறாமல் எச்சங்களை இன்னும் இறுக்கிப் பிடித்திருக்கும் இந்த நாட்களில், 'வெள்ளாவி' போன்றொதொரு நாவலைப் பற்றி விரிவாகக் கதைக்க முடியாது. குறைந்தது, புத்தகங்கள் மற்றும் வேறு வழிகளில் மூலம் தங்கள் வேர்களைக் கண்டு பிடிக்கும் என்போன்றவர்களால் சமூகவியல் என்பதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தஇயலாது என்று நினைக்கிறேன். அதிலும் இந்நாவலாசிரியர் விமல் குழந்தைவேல் தம்முடைய பூர்வீகப் பிரதேசத்தைக் களமாக வைத்ததோடு நிற்காமல், நிஜ சம்பவங்களையும் அந்தச் சம்பவங்களில் சம்பந்தப் பட்ட மனிதர்களின் பெயர்களையும் மாற்றாமல் பயன்படுத்தி இருக்கிறார் என்றும் அறிகிறேன். அதுவே, பல பிரச்சினைகளுக்கு வழிவகையாக அமைந்திருக்கிறது(படிக்க ஜனவரி மாத உயிர்மை). பாதிக்கப் பட்டவர்கள் இன்னமும் இருக்கும்போது பெயரைக்கூட மாற்றாமலிருந்ததை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை.

நாவலில் வரும் பழக்க வழக்கங்கள் மாறியிருந்தாலும்(நிச்சயமாகத் தெரியவில்லை), தமிழ் சமூகமோ சாதிக் கண்ணோட்டங்களோ மாறவில்லை என்பதால் நாவலில் வரும் சமூகத்தாரைப் பற்றியோ அவர்களைப் பற்றிய விவரங்களைப் பற்றியோ பெரிதும் விவாதிக்க விருப்பமில்லை.

இந்நாவல் மாதவி என்ற பெண்ணைச் சுற்றி வருகிறது. மாதவி, அவளுடைய மகள் பரஞ்சோதி மற்றும அவர்களின் அயலட்டத்தவர்களையும் அக்கிராமத்திற்கு அருகில் வசிக்கும் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் சிலரையும் நாம் சந்திக்கிறோம். பல கஷ்ட நட்டங்களுக்கு இடையில் தன்னுடைய மகளை பத்திரமாக வளர்த்தெடுக்கப் பாடுபடும் மாதவி, தாய் நடந்துகொள்ளும் விதத்தால் அவளை வெறுத்தொதுக்கும் பரஞ்சோதி, மாதவியின் மருமகன் முறைக்காரனான நாகமணி, மாதவியை வீட்டு வேலை மற்றும் துணி தோய்ப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் போடியார் மனைவி என்று பலரைச் சந்திக்கிறோம்.

மட்டக்களப்புத் தமிழைப் பற்றித் தெரியாததால் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், போகப் போக அந்தத் தமிழின் அழகை ரசிக்கப் பிடித்திருந்தது. ஆசிரியர் சில சமயங்களில் எழுத்துத் தமிழையும் பேச்சுத் தமிழையும் குழப்பிக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. அறிந்தவர்கள் சொல்ல வேண்டும்.

நாவலில் இருந்து இன்னுமொரு பகுதியை உங்களுக்காக இங்கே கொடுக்கிறேன்.


வளவு முழுக்கக் இறைஞ்சி கிடந்த இலை செடி மரம் எல்லாத்தையும் ஒதுக்கி குவிச்சிப் போட்டு, கிணத்தடியில் நிண்ட செவ்விளநீர் தென்னம் கண்டுக்கீழ கத்தியப் போட்டுப் போட்டு தண்ட தோழ் உயரத்துல வளர்ந்து நிண்ட தென்னைய உத்துப்பாத்தான் நாகமணி.

ஒட்டி ஒட்டி வைச்சாப்போல இருந்திச்சி செவ்விழநி குலை.

"டேய் நாகமணி என்னடா வைச்சகண் வாங்காம தென்னையைப் பாத்த மாதிரி நிக்காய்."

"இல்ல மாதவியக்க எண்ட தோழ் உசரம்கூட இல்ல என்னமா காய்ச்சித் தொங்குது. நல்ல காலம் அடிச்ச காத்துக்கு ஒள்ளம் உசரமா இருந்திருந்தா ஒரு குரும்பைகூட மிஞ்சியிருக்காது. அதான் பாக்குறன்."

"தூ... தூ... உண்ட கண்ணேண்டா அதுல பட்டிச்சி, கண்ணூறு படப்போகுது. இஞ்சால வாடா."

"பாக்கப் பாக்க சோட்டையா இரிக்கக்க. ஒரு இளநி பிய்ச்சிக் குடிக்கட்டோ?"

"டேய் மாரி காலம் அடை மழையும் வெள்ளமும்.... அடிக்குற காத்துக்கும் குளிருக்கும் இளநியக் குடிச்சி கைகால் கொடுகிச் சாகப் போறயோடா?"

"மாதவியக்க சோட்டையா இரிக்கி அதுதான்..."

"டேய் முன்னமுன்ன காய்ச்ச தென்னங்குலைய அம்மன் கோயிலுக்கு குடுக்கறதெண்டு நேந்து வச்சிருக்கன். அது அம்மாளுற தென்னை தொட்டுடாதை.... அத உட்டுப்போட்டு இஞ்சாலவாடா."

குசினிக்குள்ள போன நாகமணிக்கு ஒரு தட்டுல முருங்கையிலைச் சுண்டலையும் அவிச்ச கிழங்கையும் வைச்சிக் குடுத்தாள் மாதவி. பரஞ்சோதியும் வந்து ஒரு தட்டுல சுண்டலையும் கிழங்கையும் போட்டெடுத்து மூலைக்குள்ள குந்திக்கொண்டு முழங்காலுல தட்ட வைச்சித் தின்றுகொண்டிருந்தாள்.

"முருங்கையிலைச் சுண்டல் நல்ல சோக்கா இரிக்கக்க. இந்த மையரிக் கிழங்குதான் செப்பமாயில்ல."

"ஏண்டா நல்ல மாப்போல விரிஞ்சி அவிஞ்சிதானேடா இரிக்கி."

"அவிஞ்சிரிக்கக்க இல்லையெண்டதாரு? வெள்ளத்துல வேர் அழகுனதால ஒரு பூங்கறை நாத்தம் அடிக்கிற மாதிரி இரிக்கெல்லோ.'

"அடா இதாகுதல் கிடைச்சிதே... விளைஞ்ச பூமிய வெட்டிக் கட்டுற காலத்துல வெள்ளம் வந்திரிக்கேடா. இண்டைக்கு நாளைகாகுதல் முகத்துவாரத்த வெட்டி உட்டாங்களெண்டா பரவாயில்ல. தண்ணி வடிஞ்சி நிலம் காஞ்சாத் தானேடா களவட்டிக் காகுதல் போகலாம்."


'வெள்ளாவி' நாவல்
ஆசிரியர் - விமல் குழந்தைவேல்
முதல் பதிப்பு - ஜூலை 2004
வெளியீடு - உயிர்மை, சென்னை
விலை - 125 ரூபாய்

Sunday, January 23, 2005

ஜனவரி மாத உயிர்மை

இம்மாத உயிர்மை இதழில் பல சுவாரசியமான கட்டுரைகள் வெளிவந்திருந்தன.

'எம்.டி. ராமநாதன் என்ற பெருங்கலைஞன்' என்னும் தலைப்பில் சுகுமாரன் எழுதிய கட்டுரையே அருமையான தொடக்கமாக அமைந்தது. கட்டுரையாளருக்கு எம்.டி. ராமநாதன் மேலிருந்த நேசமும் நட்பும் நன்கு புலப்பட்டது. கூடவே இன்னுமொரு சுவாரசியமான விஷயம் கிடைத்தது.

'எம்.டி. ராமநாதன் என்ற பெருங்கலைஞர்' கட்டுரையிலிருந்து:

"மோகமுள் நாவலில் ஒரு காட்சி ராமநாதனின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டது. இசைக்கலைஞரான ரங்கண்ணா, சீடரான பாபுவின் மடியில் கிடந்து உயிர் துறக்கும் காட்சி எம்.டி.ஆரின் நிஜ வாழ்க்கைச் சம்பவம். குருவான டைகர் வரதாச்சாரியின் உயிரைக் கடைசியாகத் தாங்கியது சீடரான ராமநாதனின் மடிதான். எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு நாள் திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையிலிருந்த கணையாழி இதழ் அலுவலகத்தில் தி.ஜானகிராமனைச் சந்தித்தபோது என்னுடைய அவதானிப்பைச் சொன்னேன். அது ராமநாதன்னு உங்களுக்குத் தோணினால் பாபுவோட பாக்கியம்" என்று சிரித்தார். அது மெய்யா? மழுப்பலா?"

எம்.டி. ராமநாதன் பற்றிய கட்டுரையைப் படித்ததோ என்னமோ தெரியவில்லை சி. அண்ணாமலை, 'மகுடங்களுக்குப் பின்னால்' என்று எழுதிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் அஞ்சலிக் கட்டுரை தட்டையாக இருந்தது. அதே நேரம் ஜமுனா ராஜேந்திரன் எழுதிய 'சூறைக் காற்றடித்து ஓய்ந்த துறைமுகம்' என்று ரெஜீ சிறிவர்த்தனவின் மறைவையொட்டி எழுதிய அஞ்சலிக் கட்டுரை பல விஷயங்களைத் தெரியப் படுத்தியது. ரெஜீ சிறிவர்த்தனவின் 'birthday apology and apologia: 80 iambre pentameters for my 80 years என்னும் கவிதையை ஆங்கிலத்திலேயே படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழில் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

அடுத்து பக்கங்களைப் புரட்டிக்கொண்டு போகும்போது தன்னுள்ளே இழுத்துக்கொண்ட கட்டுரை இணையத்தில் எழுதும் ரவி ஸ்ரீனிவாஸ¤டைய 'சே குவாரா: புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல்'. சோஷலிச நாடுகளில் படைப்புரிமை, கியூபாவின் படைப்புரிமைக் கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், மற்றும் படைப்பாளிகளின் படைப்புரிமை என்று பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அட்டைப் படக் கட்டுரையாக வந்திருக்கும் இக்கட்டுரைக்கு அதற்கான தகுதி முழுக்க இருக்கிறது என்று கட்டுரையைப் படித்ததும் தோன்றியது.

இம்மாதம் படித்த கட்டுரைகளிலேயே மிகவும் பிடித்த கட்டுரை எது என்று கேட்டால் எம்.டி. ராமநாதன் பற்றி சுகுமாரன் எழுதியது என்று உடனே சொல்லலாம்தான். ஆனால், கொஞ்சம் தயங்கி யோசித்ததற்குக் காரணம் ஆறுமுகப்பெருமாள் நாடார்(1909-1983) பற்றி அ.க. பெருமாள் எழுதிய கட்டுரை. பழைய விஷயங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் சாதாரண மக்கள் சம்பந்தப் பட்ட விஷயங்கள் என்றால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். காரணம் அரசர்களைப் பற்றிப் பலருடம் உள்ளதையும் பொல்லாததையும் எழுதி வைத்திருக்கிறார்கள். நம் புலவர் பெருமக்கள் உயர்வு நவிற்சியை உலகிற்கே கற்றுக் கொடுத்தவர்கள் என்று நினைக்கிறேன். அந்த நிலையில் பொதுமக்கள் குறித்து யாரேனும் எழுதியிருப்பதாகத் தெரிந்தால் படித்து முடிக்கும் வரைத் தூக்கம் வராது. இப்போது அப்படித்தான் பாருங்கள் ஆறுமுகப்பெருமாள் நாடார் பதிப்பித்திருக்கும் நூல்களில் ஒன்றிரண்டாவது படிக்கக் கிடைத்தால் எப்படியிருக்கும் என்று ஒரு எண்ணம். கூடவே Stuart H Blackburn எழுதியிருக்கும் 'Singing of birth and dirth' என்ற நூலையும் படிக்க வேண்டும் போலிருக்கிறது. குறித்து வைத்திருக்கிறேன். என்றாவதொரு நாள் கையில் கிடைக்கும் என்ற நப்பாசைதான்.

யார் இந்த ஆறுமுகப்பெருமாள் நாடார் என்று கேட்கிறீர்களா?

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஏடுகளைத் தேடித் தொகுத்த தமிழர். ஆரம்பத்தில் வைத்திய ஏடுகளைத் தொகுத்த ஆறுமுகப்பெருமாள் நாடார் 1940-45களில் வில்லிசை ஏடுகளைச் சேகரித்திருக்கிறார். நாஞ்சில்நாட்டு நாடார்கள் குறித்த செய்திகளைச் சேகரித்து வைத்திருந்தாராம். பதனீரின் குணங்களைப் பற்றிய ஏடுகள் சிலவற்றையும் கண்டெடுத்திருக்கிறார்.

கட்டுரையில் இருந்து இது சம்பந்தமான பகுதிகள் உங்கள் வாசிப்பிற்காக


"ஒருமுறை நான் ஆறுமுகப்பெருமாள் நாடாரைப் பார்க்கப்போனபோது சென்னை ரத்தினநாயகர்சன்ஸ் வெளியிட்ட பதார்த்த குணசிந்தாமணியைப் படித்துக் கொண்டிருந்தார். நான் அதைப் பற்றிப் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தபோது, திடுதிடுப்பென்று வீட்டிற்குள் போனார். உதிரியான ஏடுகள் சிலவற்றைக் கொண்டு வந்தார். எல்லாம் ஒழுங்கில்லாத ஏடுகள்; அழுக்கடைந்தவை. அவை பதனீரின் குணங்களப் பற்றிய நூல் என்றார். அது முழுதும் கிடைக்கவில்லை. கிடைத்தவற்றை மட்டும் தொகுத்திருக்கிறார். அவரே அதற்குப் பதனீர் குண சிந்தாமணி எனப் பெயரிட்டிருக்கிறார். உன்னங்குளம் வைத்தியரின் வீட்டில் அது கிடைத்ததாகச் சொன்னார்.

அந்த நூல் வெங்கலராசன் கதையின் ஒரு நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. பத்திரகாளியின் புத்திரர்களான வலைங்கையர், ஒரு காட்டினுள் சென்றபோது தண்ணீர் குடிக்க ஒரு சிறிய குளத்திற்குச் சென்றனர். வலங்கையர் நீர் அருந்த வருகிறார்கள் என்பதைப் பார்த்த ஒரு பிராமணனும், பிராமணத்தியும் அந்தக் குளத்து நீரைக் கலக்கிவிட்டனர். இதனால் நீர் குடிக்க முடியாமல் போன வலங்கையர் இந்த நிகழ்ச்சியைப் பத்திரகாளியிடம் வருத்தத்துடன் முறையிட்டனர். காளி அந்தப் பிராமணனையும் பிராமணத்தியையும் பிடித்து தலைகீழாக நட்டுவிடுங்கள் என்றாள். வலங்கையரும் அப்படியே செய்தனர். உடனே அவர்கள் இருவரும் ஆண்பனையும், பெண்பனையுமாக மாறினர். இந்த நிகழ்ச்சியிலிருந்த் பதனீர் குண சிந்தாமணி ஆரம்பிக்கிறது.

நாஞ்சில் நாட்டில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பலருக்குப் பதனீர் முக்கிய உணவாக இருந்ததை அந்த ஏடு விலாவாரியாகக் கூறியது. பதனீரைப் பதப்படுத்தி எப்படிப் பாதுகாக்கலாம், பதனீரில் சிறுபயறு சேர்த்து பதப்படுத்துவது எப்படி என்ற பல செய்திகள் அதில் இருப்பதாகக் கூறினார். (இந்த ஏட்டின் உதிரி ஓலைகளைத் தஞ்சாவூரிலிருந்து ஒரு பேராசிரியர் 1989இல் விலைக்கு வாங்கிச் சென்றதாகப் பிறகு அறிந்தேன்.)"


ஆறுமுகப் பெருமாள் நாடார் பதிப்பித்திருக்கும் புத்தகங்களின் பட்டியலையும் அ.க. பெருமாள் தந்திருக்கிறார்.

ஜனவரி மாத உயிர்மையில் என்னுடைய கவனத்தைக் கவர்ந்த இன்னுமொரு கட்டுரை லூயி கரோலின் 'ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட்' குறித்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை. லூயி கரோல் எழுதிய 'ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட்' போலவே கொஞ்சம் நின்று நிதானித்து வாசித்தால் மனதில் அப்படியே நின்றுபோகும் கட்டுரை.

இதுபோகச் சில கவிதைகளும் கதைகளும் இருந்தன. இன்னும் சில கட்டுரைகளும். கதைகளில் எட்வர்ட் ஜோன்ஸ் எழுதிய கதையொன்றைத் தமிழில் 'முதல் நாள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருப்பவர் ஆ.முத்துலிங்கம். சுவாரசியமாகச் சென்றாலும் ஆங்காங்கே தொய்வாக இருக்கிறது. ஆங்கிலத்தில் என்ன தலைப்பு என்பதுபோன்ற விவரங்களெல்லாம் இல்லை. எட்வர்ட் ஜோன்ஸ் பற்றிய சில செய்திகளைத் தந்திருக்கிறார்.


மொத்தத்தில் 2005 ஆம் ஆண்டை நல்லபடியாகச் சுவாரசியமாகத் தொடங்கியிருக்கிறது உயிர்மை. அடுத்த மாதம் என்ன படிக்கக் கிடைக்கும் என்று ஆவலோடு நான்...

Sunday, January 16, 2005

'நேசமுடன்' அட்டையில் இருக்கும் இவர் யார்?

nesamudan.jpg


இந்தப் புத்தகத்தை வாங்கலை. ஆனா, இன்னிக்கு இந்த அட்டையைப் பார்க்கையில் எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று தோன்றியது. கணினியைக் குடாய்ந்ததில் நான் நினைத்தது சரியே!

இரண்டு படங்களையும் இங்கே இடுகிறேன். இருவரும் ஒருவரே. யார் அது என்று சொல்ல முடியுமா?

yaar.jpg


[கொசுறு: திருவிளையாடல் தருமி போல பரிசுப்பணம் எவ்வளவு என்று கேட்பவர்கள் கார்த்திக் ராமாஸை அணுகவும். ஐந்து டாலர் கணக்கில் வலைப்பதிவில் சம்பாதித்திருப்பதைப் பரிசுத் தொகையாக வழங்குமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறேன்.

கொசுறு இரண்டு: புகைப்படத்தில் இருப்பவர் கார்த்திக் ராமாஸ் அல்ல.]

Saturday, January 15, 2005

வலைப்பதிவாளர்களுக்கு வணக்கம்!

பொங்கல் வாழ்த்துகள்! (மாட்டுப்பொங்கல் கொண்டாடுபவர்களுக்கு மாட்டுப்பொங்கல் வாழ்த்துகளும்! ;) )

எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு என்னுடைய வலைப்பதிவிற்கு வந்திருக்கிறேன். தூசி தட்டித் துப்பரவாக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. கூடவே JDஇடம் Wordpressகு மாறுவதற்கும் கேட்டிருக்கிறேன். எப்போது மாறுவேன் என்று தெரியாது. அதுவரைக்கும் கொஞ்சம் இங்கேயே கதைக்கலாம் என்றிருக்கிறேன்.

கடைசியாக இந்தப் பக்கம் வந்தது 2004 ஜூலையில். ஏறக்குறைய ஒன்றரை வருடங்களாக வலைபதிந்த அனுபவத்தில் நீண்ட நாட்களாக வலைப்பதிவில் எழுதாமல் இருந்தது இப்போதுதான். எத்தனையோ காரணங்கள். மரத்தடியில் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள், அதற்கான ஆயத்தங்கள், ஆண்டுவிழாப் போட்டியும் ஆயத்தங்களும் அது தொடர்பான வேலைகளும் என்று குழும வேலைகள் ஒரு புறமிருக்க, ஒப்புக்கொண்ட வேறு சில வேலைகளும், தோழியர்/வலைப்பூ வலைப்பதிவுகள் சம்பந்தப் பட்ட வேலைகள் என்று அவை ஒரு புறமிருந்தன. இடையில் ஆபத்பாந்தவராக வந்த காசி 'தமிழ்மணம்' தொடங்கினாரோ இல்லையோ நான் பிழைத்தேன். தமிழ் இணையத்தில் ஒரு மைல்கல் 'கலக்கல்' காசியின் 'தமிழ்மணம்'. ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சந்தித்தபோது அவரோ நானோ ஏன் யாருமே நினைத்திருக்க மாட்டோம் - இப்படி இங்கே வந்து நிற்போம் என்று. என்னதொரு இனிமையான பயணம்?! ம்ம்ம்?

காசியைப்போலவே வலைப்பதிவுகளை இன்றியமையாததொரு விஷயம் ஆக்கியதில் பலரது பங்கு இருக்கிறது. பட்டியலிடத் தொடங்கினால் தீராத விஷயம் அது. சுரதா, மாலன், பத்ரி, ரமணிதரன், பரி, வெங்கட் என்று தொடங்கி நேற்றைக்கு வலைப்பதிவு தொடங்கிய நண்பர் வரைக்கும் பட்டியலிட வேண்டும். அட முதன்முதலில் தமிழ் வலைப்பதிவைத் தொடங்கிய நவனை மறந்துவிட்டேன் பாருங்கள். இதற்குத்தான் இந்தப் பட்டியலிடும் வேலை வேண்டாமென்று சொன்னேன். பிறகு 9 கட்டளைகள்போல ஆகிவிடும். ;)

போன மாதம் ஒப்புக்கொண்ட சில வேலைகளை முடிக்காவிட்டாலும், மறுபடியும் எழுத வேண்டும் என்ற முனைப்பு வந்ததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தோழியர் வலைப்பதிவையும் கவனிக்க வேண்டும். சீரமைக்கத் தொடங்கிய நான், அரைகுறையில் விட்டுச் சென்றிருக்கிறேன். தோழியர்களே மன்னியுங்கள்! கோழிக்கிறுக்கலாகவேனும் ஏதேனும் எழுத வேண்டும் என்ற முனைப்பு வந்ததற்கு அமுக்கிக் கொண்டிருந்த சில விஷயங்களில் இருந்து வெளியேறியதும் ஒன்று. முக்கியமாக மரத்தடி இணையக் குழுமம்.

கடந்த ஐந்தாறு மாதங்களில் பல நண்பர்கள் வலைப்பதிவுகளுக்கு வந்திருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். ஸ்வஸ்திக் ஆட்ஸ் சுரேஷ், ஆசி·ப் மீரான், ஆசாத் அண்ணாச்சி, எல்லே ராம், துளசி, நிர்மலா, நம்பி, 'லலிதா'ராம், ஜெயந்தி(தனிவளை சூப்பர் ஜெயந்தி. தொடர்ந்து கலக்குங்க!). இவர்களைத் தொடர்ந்து இன்னும் சிலர் வலைப்பதிவு தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று ஒரு பட்டியல் மனதில் இருக்கிறது. சட்டென்று ஞாபகம் வருபவர்கள் ஸ்ரீரங்கத்து தேவதை' ஜெயஸ்ரீயும் 'வியாபாரிமூலை' விஜயாலயனும். இருவரையும் தொடர்ந்து அரிக்கலாம் என்றிருக்கிறேன். கல்லும் கரையும் இல்லையா? ;)

இந்த இடைவெளியில் படித்த புத்தங்கள், பார்த்த படங்கள், சந்தித்த மனிதர்கள், போன இடங்கள் என்று கொஞ்ச விஷயம் சேகரித்திருக்கிறேன்.

முன்போல இல்லாமல், நேரத்தைக் கொஞ்சம் பயனுள்ள வகையில் செலவழிக்கவேண்டும் என்று நினைத்திருப்பதால், இங்கே அடிக்கடி எழுதமாட்டேன் என்று நினைக்கிறேன். கிடைக்கும் நேரத்தையும், எழும் சிந்தனைகளையும் பொறுத்து பதிவுகள் அமையலாம். நேரம் கிடைத்தால் அதைக் கொஞ்சம் உருப்படியாக சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் செலவழிக்கலாம் என்று இருக்கிறேன். உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, கனேடிய அரசாங்கம் சுனாமியால் பாதிக்கப் பட்ட நெருங்கிய உறவினர்களை கனடாவிற்கு கூப்பிட ஆவன செய்துள்ளது. 1985இல் இங்கிலாந்து செய்ததுபோல ஓப்பன் விசா என்றில்லாமல் ஒவ்வொரு விண்ணப்பமாகப் பார்த்து முடிவெடுக்கப் போகிறார்களாம். அதற்கான விண்ணப் படிவங்கள் பூர்த்தி செய்வது, கடிதங்கள் எழுதுவது, தேவையெனில் தொலைபேசியில் பேசவேண்டியவர்களோடு பேசுவது என்பதுபோன்ற வேலைகளைச் செய்யலாம் என்று இருக்கிறேன்.


இங்கு வந்த அனைத்து நண்பர்களுக்கும் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்தபடி விடைபெறுவது

-சந்திரமதி கந்தசாமி