Sunday, August 24, 2003

சங்கடமான சமையல்



'சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போறேன்'னு பாடிக்கிட்டே இருக்கிற 'சபாபதி' பட காளி என். ரத்னத்தை எனக்கு பிடிக்கும். அவருக்கு சங்கடமாக இருக்கிற சமையல் எனக்கு இஷ்டமான விஷயங்கள்ல ஒண்ணு. இஷ்டமான சமாச்சாரங்கள்ல ஒண்ணுன்னு சொன்னதும் நான் என்னமோ பெருசா சமைப்பேன்னு எல்லாம் நினைக்காதீங்க. ஏதோ சமைப்பேன். அப்பப்ப, சமைக்கிறேன் பேர்வழின்னு செய்யுற விஷப்பரீட்சை எல்லாம் பெரும்பாலும் விஷமாகவே போயிர்ரதும் உண்டு. அப்பப்ப சுபமாகிறதும் உண்டு. சரி என்னடா வந்ததில இருந்து சமையல் சமையல்னு பேசிக்கிட்டு இருக்காளே என்ன பண்ணப்போறான்னு நீங்க யோசிக்கலாம். பெரிதாக ஒன்றுமில்லை நண்பர்களே, நம்ம 'மரத்தடி' இணையக்குழு தொடங்கி ஒரு வருடமாகப்போகுது இல்லையா. அதுக்கு ஏதாவது தடபுடல் பண்ணவேணாவா. அதுக்கு வந்து குமியும் நண்பர்களுக்கு உணவு தயார் செய்ய வேண்டுமல்லவா. அதான் மெனு ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் ஏதோ எனக்கு தெரிஞ்சத ஆரம்பிச்சு வைக்கிறேன். நீங்களும் உங்களுக்குப் பிடித்த, நீங்கள் இரசித்து செய்யும் உணவு பற்றியும் அதன் செய்முறையையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

எனக்கு ரொம்ப பிடிச்ச சமையல் கிழக்காசிய நாடுகளில் தயாராவதுதான். சீன, கொரிய, இந்தோனேஷிய, தாய், மலேசிய, சிங்கை, பிலிப்பீன்ஸ், வியட்நாமிய, ஜப்பானிய சமையல் என்று அந்த பிராந்திய சமையல் எல்லாமே பிடிக்கும். சிற்சில பதார்த்தங்கள் பிடிக்காது என்பதையும் சொல்லவேண்டும் - குறிப்பாக ஜப்பானிய ஷஷிமி, பிலிப்பீன்ஸ் நாட்டவர் செய்யும் இரத்தம் பயன்படுத்திய சில என்று பக்கத்திலேயே போகாத பதார்த்தங்களும் இருக்கின்றன.

தந்தனத்தோம் என்று சொல்லியே என்று ஆரம்பிப்பதை சுலபமான விஷயமாக தொடங்குகிறேன். சைனீஸ் வெஜிடபிள் ஸ்டர் ·பிரை. என்ன என்ன மரக்கறி தேவை என்று சொல்லி விடுகிறேன். அது என்னடா அது மரக்கறி, மரத்தின் கரியா, மரம் கறியாகி விட்டதா என்றெல்லாம் குழம்பாதீர்கள். காய்கறி என்ற சொல் எங்கள் ஊரில் இப்படித்தான் வழங்கப்படும். இதன் மூலம் எல்லாம் எனக்குத்தெரியாது.

தேவையான பொருட்கள்.
----------------------------------

1. பிரெஞ்சு பீன்ஸ் - ஒரு கைப்பிடி - காம்பு நீக்கி, ஒன்று, ஒன்றரை அங்குல நீளத்திற்கு வெட்டிக்கொள்ளுங்கள்.

2. புரொக்கொலி (broccoli) - ஒன்று - மிகவும் சத்துநிறைந்த இதை நன்றாக கழுவுங்கள். காலி·பிளவர் போல உப்புநீர் சேர்த்த வெதுவெதுப்பான நீரில் 4-5 நிமிடங்கள் வைத்தால் மிகவும் நல்லது. அடிப்பாகத்தில் முத்தலாக இருக்கும் பகுதியை வெட்டி எறிந்து விடுங்கள். மீதியை ஒவ்வொரு பூவாக floret வெட்டி வையுங்கள். பெரிதாகத்தான் இருக்கும். மிகவும் பெரிதாக இருந்தால், நீளவாக்கத்தில் இரண்டாகவோ மூன்றாகவோ வெட்டி வையுங்கள்.

3. குடை மிளகாய் - ஒன்று - உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட்டு, இதுவரை வெட்டியிருக்கும் மரக்கறிகளுக்கு தோதாக வெட்டி வையுங்கள்.

4. காரட் - இரண்டு - தோல் சீவி நீள வாக்கில் பிரெஞ்சு பீன்ஸ் வெட்டிய நீளத்திற்கு சிறு குச்சிகளாக வெட்டி வையுங்கள். முடியவில்லை பரவாயில்லை. வில்லைகளாக வெட்டி விடுங்கள்.

5. வெங்காயம் - பெரியது ஒன்று - பிடித்தவர்கள் மட்டும். நீள் வாக்கில் மற்ற மரக்கறிகளின் அளவோடு ஒத்துப்போகுமாறு வெட்டி வையுங்கள்.

6. மூங்கில் - பெரும்பாலும் டின்தான் கிடைக்கும். நன்றாக கழுவி, ஒரு கைப்பிடி வைத்துக்கொள்ளுங்கள்.

7. காளான் - 100 கிராம். - அழுக்காக இருந்தால், நனைந்த துண்டால் துடைத்து விட்டு, நான்காக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

8. இஞ்சி - சிறு துண்டு - நன்றாக பொடியாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

9. உள்ளி/பூண்டு - சுத்தம் செய்து, இதையும் பொடியாக வெட்டி வைக்கவும்.

10. சோய் சாஸ் (soy sauce) - இரண்டு டீஸ்பூன்

11. ஆஸ்டர் சாஸ் (oyster sauce) - ஒரு டீஸ்பூன் - பாட்டிலில் இருந்தே ஊற்றலாம். சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்காக வெஜிடபிள் ஆய்ஸ்டர் சாஸ் கடையில் கிடைக்கும்.

12. ரைஸ் வைன் - ஒரு டீஸ்பூன் - இதுவும் பாட்டிலில் இருந்தே ஊற்றிக்கொள்ளலாம். உங்களின் திறமையை பொறுத்தது. புது சமையற்காரராய் இருந்தால், 10,11,12 மூன்றையும் தனியே ஒன்றாக ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

13. மூடியோடு இருக்கும் கடாய், எண்ணெய், உப்பு, கரண்டி போன்ற அத்தியாவசிய சாமான்கள்.

செய்முறை
--------------

ஐந்து நிமிடத்தில் செய்து முடித்துவிடலாம். கடாயை நன்கு சூடு பண்ணி அதில் எண்ணெயை ஊற்றவும். சூடான எண்ணெயில் இஞ்சியை போட்டு கரண்டியால் இரண்டு தரம் கிளரவும். வெட்டி வைத்திருக்கும் மரக்கறிகளை ஒவ்வொன்றாக இடவும். காளானை கடைசியாக சேருங்கள். நன்கு கிளறி விட்டு, உள்ளியையும் சாஸ்களையும் சேருங்கள். ஒரு முறை நன்றாக கிளறிவிட்டு, மூடியால் மூடுங்கள். மூன்று நிமிடம் வேக விடுங்கள். திறந்து உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு இல்லையென்றால் சேருங்கள். சாப்பிடுவதற்கு முன்பு செய்து சூடாக சாப்பிடுங்கள் ஆறிவிட்டால் நன்றாக இருக்காது. சாதம், நூடுல்ஸ் போன்றவற்றோடு சாப்பிடலாம்.

அப்புறம், எல்லாம் செய்தபிறகு தங்கவேலு, சரோஜா செய்த ' அதான் தெரியுமே' சப்பாத்தி போல வந்தால் நான் பொறுப்பல்ல.



Wednesday, August 20, 2003

நீங்கள் ஆணா? பெண்ணா?



ஒரு கட்டுரையை, புத்தகத்தை, கடிதத்தை எழுதியது ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்கவேண்டும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம் என்றால் நீங்கள் கேட்டது கிடைக்கப்போகிறது. இஸ்ரேல் பெல்-இலான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மோஷே கொப்பெல் என்பவரும், இல்லினொய் இன்ஸ்டிடூட் ஆ·ப் டெக்னாலஜியை சேர்ந்த ஷ்லோமோ ஆர்கமோனும் இணைந்து ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார்கள்.

http://www.bookblog.net/gender/genie.html


முயன்று பாருங்களேன். சிலவரிகள் எழுதி, அனுப்புங்கள் சிலநொடிகளில் பதில் கிடைத்துவிடும். நான் எழுதியதை அனுப்பிய சிலவிநாடிகளில் இதை எழுதியது பெண் என்று செயலி சொன்னது. ஐந்து முறை சோதித்ததில் ஒரு முறை என்னை ஆண் என்று சொல்லிவிட்டது.

இதை உருவாக்கிய மோஷே கொப்பெல் சொல்கிறார். பெண்கள் pronounகளை அதிகம் உபயோகிப்பவர்களாம். (உதா: I, you, she, their, myself). ஆண்களோ nounகளை பயன்படுத்துபவர்களாம். பெண்கள் பர்சனலாக எழுத விரும்பும்போது ஆண்கள் பொதுப்படையாக எழுதும் பழக்கம் உடையவர்களாம். ஆண்கள் விஷயங்களைப்பகிர்ந்து கொள்ள எழுதுவார்களாம். (informational) பெண்கள் அனுபவப்பகிர்வை விரும்புவார்களாம் (involved).

மேலும் விவரங்களுக்கு:
http://www.nature.com/nsu/030714/030714-13.html



Tuesday, August 19, 2003

கனகசபாபதி தரிசனம்


எங்கள் குடும்பத்தவர்களும் உறவினர்களும் சிதம்பரத்தில் இருக்கும் இறைவன் பெயர்தான் அதிகம் வைப்பார்கள். தில்லையம்பலம், தில்லைநாதன் என்ற மாமாக்களும் சித்தப்பாக்களும் அதிகம். அதிலும் எனக்கு தாத்தா முறை வரக்கூடிய உறவினர் தன்னுடைய ஐந்து மகன்களுக்கு தில்லையம்பலம், தில்லைநாதன், நடனசபாபதி, நடேசுவரன், நடனசிகாமணி என்றும் ஒரு பெண்ணிற்கு நடேஸ்வரி என்றும் பெயர் வைத்தார். ஏனோ தெரியாது எங்கள் ஊர்க்காரர்களுக்கு, சிதம்பரம் என்றால் பெரும் பித்து. அந்தக்காலத்தில் தாத்தா கப்பலில் வந்து சிதம்பரம் கோயிலுக்கு வந்ததை, பிறகு எங்களுக்கு கதை கதையாக சொல்லிக்கொண்டிருந்தார்.

Natarajar

நாங்கள் இந்தியா வந்து சேர்ந்த முதல் வருடம்; அப்பா எங்களைப்பார்க்க இரண்டு தரம் வந்தார். அவர் இரண்டாம் முறை வந்தபோது ஆண்டுத்தேர்வுகள் முடித்து நாங்களும் காத்திருந்தோம். அப்போதுதான் இந்தக்கோவிலுக்கும் ஏனைய சில கோவில்களுக்கும் முதல்முறை வந்தோம். இன்றைக்கும் மனதிற்கு மிகவும் பிடித்த இந்தக்கோவிலுக்கு போன முதல் பயணம் அவ்வளவு சரியாக இல்லை. பிற்காலங்களில் வந்தது போல காரில் சொகுசு பயணம் இல்லாதது ஒரு விஷயம். :) அடுத்தது சென்னையிலிருந்து பிற்பகல் கிளம்பி இரவு சிதம்பரம் வந்து சேர்ந்தோம். இருட்டிக்கிடந்தது நகரம் - மின்தடை. தங்க ஹோட்டல் அறைகளே இல்லை. தேர்வுத்தாள் திருத்தத்திற்காக ஆசிரியர்கள் வந்திருப்பதாக அறிந்தோம். அங்கிருந்து மயிலாடுதுறை சென்றோம். ஹ¥கூம். திரும்பி சிதம்பரத்திற்கே வந்த எங்களைக்கண்டு அனுதாபப்பட்ட ஒரு ஹோட்டல்காரர் அறை தந்தார். இரவு பூரா கொசுக்கடியில் அவதிப்பட்டதனால் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து ஐந்து மணிக்கு கோவிலுக்கு சென்ற எங்களுக்கு அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. கோவில் திறக்கப்படவில்லை.

Chidambaram Kopuram

அந்த அதிகாலை வெளிச்சத்தில் அழகாக பிரமாண்டமாக தெரிந்தது கோவில். பெரிய கோபுரமும் மிகப்பெரிய அதுவரை பார்த்திராத அளவு பெரிய கோபுர வாயிலும் கதவும் எங்களை பேச்சிழக்க வைத்தது. அதற்குப்பிறகு நடந்ததுதான் எங்களை இன்னமும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த மிகப்பெரிய வாசற்கதவில் ஒரு சின்னக்கதவு இருந்தது. அது திடீரென்று திறக்கப்பட்டு உள்ளுக்குள் இருந்து ஒரு பக்கம் குடுமி இட்ட இளம் ஐயர்கள் (தீட்சிதர்கள் என்று பிற்பாடு சொல்லத்தெரிந்து கொண்டாலும் - சட்டென்று ஐயர்மார் என்றுதான் சொல்ல வருகிறது) வந்து கொண்டே இருந்தார்கள். எட்டிப்பார்ப்பதற்கும் தயக்கமாக இருந்தது. உள்ளுக்குள் இருந்து வருபவர்களில் முட்டி விடுவோமோ என்று.

வெளியில் நின்று கொண்டே அதுவரை சிதம்பரம் கோவிலைப்பற்றி படித்ததையும் தெரிந்த விஷயங்களையும் பகிர்ந்து கொண்டோம். நந்தனாரைப்பற்றியும் பேசிக்கொண்டோம். நந்தனார் கீழ்சாதிக்காரர். சிவன் மேல் பற்றுக்கொண்டவர். ஒரு முறை இவர் சிவனை தரிசிக்க சென்ற போது (வெளியிலிருந்துதான்) நந்தி நடுவில் இருந்ததால் தரிசனம் கிடைக்கவில்லையாம். அப்போது சிவன், நந்தியை நோக்கி 'சற்றே விலகி இரும்பிள்ளாய்' என்று சொன்னதாக படித்திருந்தோம். இந்த நந்தனாருக்கு சிதம்பரம் நடராஜரை தரிசிக்கவேண்டும் என்பது மிகப்பெரும் விருப்பமாக இருந்ததாம். ஆனால் அவரின் முதலாளியோ வேலை கொடுத்துக்கொண்டே இருந்தாராம். நந்தனாரும் கேட்பவர்களுக்கெல்லாம்
'நாளைக்குப்போறேன், நாளைக்குப்போறேன்' என்று சொல்லிக்கொண்டே இருந்தாராம். அதனாலேயே இவருக்கு "திருநாளைப்போவார்" என்ற
பெயரும் கிடைத்ததாம். சரி கடைசியில் என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? நந்தனார் முதலாளியிடம் விடுமுறை கேட்க வழக்கம் போல இந்தயிந்த வேலையெல்லாம் முடித்தால் நீ போகலாம் என்று சொல்லியிருக்கிறார். இரவோடிரவாக சிவபெருமானின் பூதகணங்கள் வந்து வயல்வேலைகளை முடித்துவிட்டதாம். நந்தனாரும் சிதம்பரம் கிளம்பிவிட்டார். அவர் கிளம்பிய பிறகு சிவபெருமான் தில்லைமூவாயிரர் கனவில் வந்து, என்னுடைய பக்தன் என்னைப்பார்க்க வருகிறான் அவனை வரவேற்று அழைத்து வாருங்கள் என்று கூறினாராம். நாயன்மார்களில் ஏறக்குறைய அனைவரும் தரிசித்த தலம் இதுதான். நாங்களும் வந்திருக்கிறோம். நாமெல்லாம் இங்கு வர எத்தனை புண்ணியம் செய்திருக்கவேண்டும்
என்று அம்மா சொல்லிக்கொண்டே இருந்தார்.



ஒரு வழியாக ஐயர்மார் எல்லாரும் வெளியே வந்து நாங்கள் உள்ளே சென்றோம். உள்ளே சென்றவர்கள் கொஞ்ச நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிமுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். வாழ்நாளில் நாங்கள் யாரும் அத்தனை பெரிய கோவில்களைக்கண்டது கிடையாது. வெளிவீதியின் நீள அகலத்தைக்கண்டு பிரமித்து விட்டோம் நாங்கள். கூடவே அந்த அதிகாலை வேளை தென்றல்காற்றும், வெளியில் இருந்து வந்த
பக்திப்பாடலும் மனதை கொள்ளைகொண்டது.

வெளிவீதியில் இருந்த கிணற்றில் கைகால் அலம்பிக்கொண்ட நாங்கள் ஒருவர் கையை மற்றவர் பிடித்தவாறு - தொலைந்து போகாமல் இருப்பதற்காக - கோவிலின் உள்ளே நுழைந்தோம். மெய் சிலிர்க்கும்படி இருந்தது கோவிலின் அமைப்பும் இறைவன் தரிசனமும். யாரோ ஒருவர் வழிகாட்ட நாங்கள் கோவிலின் மையப்பகுதியை அடைந்தோம். மற்றக்கோவில்கள் போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. உள் பிரகாரத்தில் மரத்தாலான கர்ப்பக்கிருகத்தில்தான் நடராஜரும் உமையும் இருக்கிறார்கள்.



சிதம்பரம் பஞ்சபூத தலங்களில் ஒன்று. அதாவது நிலம், நீர், காற்று, தீ, வெளி ஆகிய சக்திகளுக்கு ஒவ்வொரு சிவன்கோவில் இருக்கிறது. சிதம்பரம் வெளிக்கு - Space - ஆன கோவில். கர்ப்பக்கிருகத்தில் நடராஜருக்கு வலதுபக்கத்தில் ஒரு சன்னதி இருக்கிறது. இங்குதான் இறைவன் உருவில்லாமல் தங்கத்தால் ஆன வில்வ மாலையை அணிந்து காட்சியளிப்பதாகவும் கூறுவார்கள். அர்ச்சனை முடிந்து ஐயர் அழைத்து நன்றாக பாருங்கள் என்று சொல்லி தீபாராதனை காட்டினார். "எனக்கு ஒண்டுமே தெரியேல்ல" என்று ஐயரிடமே என்னுடைய தங்கை முறையிட்டாள். அதற்குப்பிறகு சிதம்பரம் செல்லும்போதெல்லாம் நினைவிற்கு வரும் சம்பவம் இது.

தெற்கு நோக்கி இருக்கும் நடராஜருக்கு அருகிலேயே கிழக்குப்பக்கத்தை பார்த்த வண்ணம் இருக்கிறார் திருமால். அடுத்த பிரகாரத்தில் உற்சவ மூர்த்திகளும், சிவலிங்க வடிவில் சிவனும், பிள்ளையார், முருகன் மற்ற தெய்வங்களும் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் பிள்ளையார் மிகவும் பெரியவர். எங்கள் வீட்டில் எல்லாருக்கும் இஷ்ட தெய்வம் பிள்ளையார். ஆகவே அவருக்கு ஒரு விசேட வணக்கம் தெரிவித்தோம். கூடவே கோவி
லமைப்பை பற்றி அவ்வப்போது சிலாகித்துக்கொண்டோம். கருங்கல்லால் கட்டப்பட்ட மிக நீண்ட பிரகாரங்களை அந்தக்காலத்தில் எப்படி கட்டினார்கள். அதுவும் கொஞ்சம் கூட பிசகு இல்லாமல் என்று வியந்து கொண்டோம். இன்று வரை வியக்கிறோம்.

சிதம்பரம் கோவிலை நினைக்கும்போதெல்லாம் நினைவு வரும் இன்னொருவர் - மாணிக்க வாசகர். சைவக்குரவர் நால்வரான சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் வரிசையில் இன்னொருவர் இவர். மாணிக்க வாசகர் இயற்றிய திருவாசகம் சின்னவயதில் வெள்ளிக்கிழமைகளில் எங்கள் வீட்டிலும் பிறகு பள்ளிக்கூடத்திலும் பாடிய ஞாபகம் இருக்கிறது. அதே போல (நான் முன்பொரு நாள் எழுதிய மார்கழி அனுபவத்தில் வந்த) மார்கழி மாத அதிகாலை வேளையில் பாடப்பட்ட திருவெம்பாவை இவர் இயற்றியதுதான்.



சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பல முறை வந்திருந்தாலும் இன்றைக்கும் மனதில் நிற்கும் இன்னொரு பயணம், என்னுடைய அத்தை, மாமா, மற்றும் தமிழ் பேசத்தெரியாத என்னுடைய கசின் இவர்களோடு வந்ததுதான். மற்றவர்களால் முடியவில்லை என்பதால் இம்முறை நானும் அப்பாவும் மட்டுமே வந்திருந்தோம். டீவியில் இந்தியக்கோவில்களைப் பார்த்து தன்பெற்றோரை நச்சரித்து அந்த வருட விடுமுறையை தமிழ்நாட்டு கோவில்களில்
செலவிட வந்திருந்தாள் அவள். இது வரை சென்ற கோவில் சுற்றுலாக்களில் 90%க்கும் மேலானவற்றை சிதம்பரத்தில் இருந்துதான் ஆரம்பித்திருக்கிறேன். அவ்வளவு ஏன் சிதம்பரம் வருவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பாக இருக்கும் வளைவு எனக்கு அத்துப்படி. இம்முறை நாங்கள் மாலைவேளையிலேயே சிதம்பரம் வந்து சேர்ந்தமையால் இரவு நேர பூஜையை தரிசிக்க முடிந்தது. சிவனுக்கு பல ஆடை அணி
கலன்களை அணிவித்து பல உபசாரங்கள் செய்து சிவனின் பாதுகைகளை உள்பிரகாரத்தில் இருக்கும் பள்ளியறைக்கு கொண்டு சென்றனர். என்ன நடக்கிறது என்று என்னுடைய கசினிற்கு அப்பா விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார். உள்பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருக்கும்போது ஒரு வயதானவர் என் கசினின் அருகில் வந்து மேலும் சில விளக்கங்களை அவளுக்கு புரியும் ஆங்கிலத்தில் தெளிவாக கூறிவிட்டு கையில் ஒரு நடராஜர்
படத்தையும் வீபூதியையும் கொடுத்தார். சற்றுப்பின்னே வந்து கொண்டிருந்த எங்களிடம் அவள் அவற்றைத்தந்ததும் மாமா(முன் அனுபவத்தின் காரணமாக) அவளிடம் கொஞ்சம் பணத்தைக்கொடுத்தார். அவள் அன்று முழுக்க அவளுடன் பேசியவரைத்தேடிக்கொண்டிருந்தாள்.

கடந்த முறை நானும் அம்மாவும் தங்கையும் சென்றிருந்த போதும், வெளிப்பிரகாரத்தில் ஒருவர் அற்புதமாக தன்னைமறந்து நடராஜர் போல நடனம் ஆடியவாறு நின்றிருந்தார்.

Friday, August 15, 2003

பேர்ல் துறைமுகம்



அமெரிக்காவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடச்செய்த தாக்குதல் Pearl Harbor இன் மீது மார்கழி 7ம் தேதி 1941ம் ஆண்டு நடந்தது. பறந்து வந்த ஜப்பானிய விமானங்கள் பெய்த குண்டுமழையில் ஏராளமான வீரர்கள் மாண்டனர், ஏராளமான பொருட்சேதமும் ஏற்பட்டது.



அந்த பேர்ல் துறைமுகத்துக்குத்தான் நாம் இன்று செல்லப்போகிறோம்.
காலை நேரம் பத்து மணி. அதற்குள் நல்ல வெய்யில் சுள்ளென்று அடிக்கிறது. ஹானலூலுவின் மையப்பகுதியில் இருந்து பதினைந்து-இருபது நிமிடப்பயணத்தில் துறைமுகத்தை அடைந்துவிடலாம். சைனா டவுனைத்தாண்டியதும் பேருந்து வேகம்பிடிக்கிறது. இரு புறமும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் ஆங்காங்கே வீடுகளுமாய் அழகான காட்சிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் மக்கள். அவற்றில் பலர் சுற்றுலாப்பயணிகள். பெரும்பாலானவர்கள் ஜப்பானியர்கள். ஜப்பானியர்கள்தான் ஹாவாய்தீவுகளுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் எண்ணிக்கையில் அதிகமானவர்கள். பல வியாபார ஸ்தலங்களும் இவர்களுக்கு சொந்தமானதே. சுற்றுலாப்பயணிகளுக்கென இயங்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர் ஜப்பானிய மொழி தெரிந்திருக்கவேண்டும் என்பது எதிர்பார்க்கப்படும் ஒன்று.

சரி, பேசிக்கொண்டிருந்ததில் நமது நிறுத்தம் வந்ததே தெரியவில்லை. சாலையைக்கடந்து இரண்டு-மூன்று நிமிடங்கள் நடந்து பேர்ல் ஹார்பரை அடைந்து விட்டோம். வெளியில் இருந்து பார்த்தால் நமக்கு அருகில் இருக்கும் USS Missouri என்னும் கப்பல் தெரிகிறது. 1999 ஆண்டு USS Missouri Memorial திறக்கப்பட்டது. இந்தக்கப்பலில் வைத்துத்தான் ஜப்பான் இரண்டாம் உலகப்போர் முடிவடையும் தறுவாயில் சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் கையப்பமிட்டது.

பேர்ல் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் இருக்கின்றன. அதாவது இரண்டு நினைவிடங்கள். ஒன்று மைட்டி மோ என்றழைக்கப்படும் USS Missouri என்ற பிரமாண்டமான சிறிதளவும் சேதமடையாத கப்பல். மற்றது 1941ல் கடலில் மூழ்கிய USS Arizona. ஜப்பானியத்தாக்குதலின் போது மிகவும் மோசமாக சேதமான கப்பல் இது. மூன்று எண்ணூறு கிலோகிராம் எடையுள்ள குண்டுகளால் தாக்கப்பட்டு மூழ்கிய இந்தக்கப்பல் ஏறக்குறைய ஆயிரத்திநூறு வீரர்களுக்கு சமாதியாக இருக்கிறது. ஆமாம், இவர்களின் உடல்கள் இந்தக்கப்பலின் உள்ளேதான் இருக்கின்றன. கப்பல் தாழ்வதற்கு ஒன்பது நிமிடங்கள் ஆனதாம். வீரர்களின் சமாதியாக இருக்கும் இவ்விடத்திற்கு மரியாதைக்குரியவாறு உடையணிந்து இருப்பவர்களே அனுமதிக்கப்படுகிறார்கள். நீச்சலுடை அணிந்திருப்பவர்களோ, காலணியணியாதவர்களோ அனுமதிக்கப்படுவதில்லை.



சரி இப்போது நான் பார்வையாளர்கள் கூடத்திற்கு செல்கிறோம். வழியிலேயே பேர்ல் துறைமுகம் பற்றிய படம் ஒன்றைப் பார்ப்பதற்கான சீட்டையும் வாங்கிக்கொள்கிறோம். தேசிய பூங்கா இலாகா இந்த இடத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. இங்கு நுழைவுக்கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் நினைவுப்பொருட்கள் வேண்டுமென்றால் விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். கோடை காலத்தில் கூட்டமாக இருக்கும் இவ்விடம் மாசி மாதங்களில் அவ்வளவு கூட்டமாக இல்லை. ஆகவே அடுத்து தொடங்க விருக்கும் படக்காட்சிக்கு சுலபமாக போய் அமர இடம் கிடைக்கிறது. இரண்டால் உலகப்போரில் அமெரிக்கா பங்கு பெற வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கிய இத்தாக்குதல் எப்படி எவ்வாறு நிகழ்ந்தது என்று காட்டுகிறார்கள். இருபது நிமிடங்கள் ஓடும் இப்படத்தை பார்த்தபிறகு நமக்கே லேசாக ஜப்பானியர்கள் மீது கோபம் வருகிறது. இதைப்பார்க்கும் அமெரிக்கர்கள் என்ன உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள். அதேபோல எங்களுடன் இருந்து படம் பார்த்த நூறுக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் என்ன மாதிரியான உணர்வுகளுக்கு ஆளானார்கள்? அவர்கள் நாட்டில் இருக்கும் ஹிரோஷீமா, நாகசாகி நகரங்களில் இருக்கும் நினைவிடத்தை நினைத்துக்கொண்டார்களா என்ற கேள்விகளோடு வெளியே வருகிறோம்.


பிறகு அங்கிருக்கும் ஒரு படகில் ஏறி சற்றுத்தொலைவில் கடலில் இருக்கும் USS Arizona நினைவிடத்திற்கு செல்கிறோம். முகில்கள் அற்ற நீல நிற வானமும், நீல வண்ணத்தில் ஜொலிக்கும் அலைகடலும் சுகமாக வந்து தழுவும் தென்றல் காற்றும் மிகவும் இதமாக இருந்தாலும். சற்று முன் பார்த்த திரைப்படம் நெஞ்சில் கனக்கிறது. கிட்ட வந்து கொண்டிருக்கும் அரிசோனா நினைவிடத்தை அனைவரும் படமெடுத்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்.



நூற்றிஎண்பத்திநான்கு அடி நீளமுள்ள நினைவுக்கட்டிடம் மூழ்கிப்போன அரிசோனா கப்பலின் வயிற்றுப்பகுதிக்கு குறுக்காக கட்டப்பட்டிருக்கிறது. பார்வையாளர்கள் படகில் இறங்கி கூடுமிடம் ஒரு ஓரத்திலும், விசேட நிகழ்ச்சிகள் நடாத்துவதற்காகவும் பார்வையாளர்கள் பார்வையிடவும் என்றிருக்கும் பகுதி நடுவிலும், Shrine Room என்றழைக்கப்படும் இடத்தில் அரிசோனா கப்பலில் இறந்தவர்களின் பெயர் பொறித்த பளிங்கு கல் இன்னொரு பக்கத்திலும் இருக்கிறது. பார்வையாளர்கள் பார்வையிடும் இடத்தில் நின்று கொண்டு மக்கள் 'லே' (lei) என்றழைக்கப்படும் மாலைகளை அரிசோனா கப்பல் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் பகுதியில் வீசுகிறார்கள். கூடவே மலர்களையும் சிலர் சொரிகிறார்கள். உலகெங்கும் சப்தமிடுபவர்கள் என்று அழைக்கப்படும் அமெரிக்கர்கள் இங்கு அமைதியாக இருக்கிறார்கள். சற்று முன்பே பார்த்த திரைப்படம் நினைவில் நின்று மனதைக்கனக்க செய்கிறது. பார்வையாளர்கள் பார்வையிடும் பிரிவில் நின்று பார்க்கும்போது கீழே மூழ்கிய கப்பல் தெரிகிறது. இங்கு ஆயிரம் பேர் சமாதியாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் நிலைத்து நிற்கிறது. கப்பலிலிருந்து இன்னமும் எண்ணெய் கசிந்தபடி இருக்கிறது. தினமும் 2/3 quart கசிகிறதான். முக்கால் வாசிக்கும்மேல் எண்ணை டாங்க் நிரம்ப இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அது அபாயகரமானது என்றும் சிலர் எச்சரிக்கிறார்கள். விசேட மரியாதையாக, மூழ்கிய கப்பலின் main mastஇல் (தமிழில் என்ன? கொடிக்கம்பம்??) அமெரிக்க நாட்டுக்கொடி பறக்கிறது.



இவ்விடத்தில் நினைவிடம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் 1942ம் ஆண்டிலிருந்தே எழத்தொடங்கி விட்டாலும் 1949ல் ஹவாய் பிராந்தியம் அதற்கென ஒரு குழுவை அமைத்தது. 1958ம் ஆண்டுதான் இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற காரணமான ஒருவரான ஐக் (Ike) என்று அழைக்கப்பட்ட ஐசன்ஹோவரால் அனுமதிக்கப்பட்டு 1961ல் அரசு மற்றும் தனியார் நிதியுதவியினால் கட்டி முடிக்கப்பட்டு 1962ம் ஆண்டு திறக்கப்பட்டது.

இந்த நினைவிடத்தின் கட்டிடக்கலைஞரான (architect) Alfred Preis பின்வருமாறு கூறினார். "Wherein the structure sags in the center but stands strong and vigorous at the ends, expresses initial defeat and ultimate victory....The overall effect is one of serenity. Overtones of sadness have been omitted to permit the individual to contemplate his own personal responses...his innermost feelings."

கடல் வாசனையும் நினைவுக்கட்டிடத்தில் வந்து லேசாக முட்டும் அலைகளின் சப்தமும், பஸிபிக் சமுத்திரத்திலிருந்து வீசும் தென்றல் காற்றுமாக அரிசோனா கப்பலின் பணிபுரிந்து மாண்ட வீரர்கள் என்றும் இங்கு அமைதியுடன் இருப்பார்கள் என்று நம்புவோம்.




Thursday, August 14, 2003

பெயர்களும் குழப்பங்களும்



இப்போதுதான் பெயர்களைப்பற்றிய நிகழ்ச்சி ஒன்றைக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.(நன்றி ரமணி) எனக்கு ஏன் இந்த பெயரை வைத்தீர்கள் என்று அப்பாவிடம் சண்டையிட்ட நாட்கள் ஞாபகம் வருகிறது. தமிழில் 'சந்திரமதி' என்று எழுதினால் ஆறு எழுத்துகள்தான் இருக்கின்றன. ஆனால் ஆங்கிலத்தில் எழுதினால் - '-------------' என்று பதின்மூன்று எழுத்துகள் இருக்கின்றன. ஏனோ தெரியவில்லை. இலங்கைத் தமிழர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதினால் இந்திய தமிழர்களை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும். இலங்கையில் இருந்தவரைக்கும் பள்ளிக்கூடத்தில் பெரிய பிரச்சினை வரவில்லை.

உங்கள் எல்லாருக்கும் அரிச்சந்திரன்-சந்திரமதி கதை தெரிந்திருக்கும். இலங்கையில் பள்ளிக்கூடத்தில் யாரும் எதுவும் சொன்னதில்லை. ஆனால், சில உறவினர்களால் பகிடி பண்ணப்பட்டேன். ஏறக்குறைய பத்துவயதாகும்போது என்னைக் கிண்டல் செய்யும் மாமாக்களையும் சித்தப்பாக்களையும் அப்படி சொல்லவேண்டாம் என்று சண்டைபோடத்தொடங்கினேன். அப்போதுதான் அப்பாவிடமும் புறுபுறுக்கத்தொடங்கி இருக்கவேண்டும்.

ஆனால் இந்தியா வந்து பள்ளியில் சேர்ந்தபிறகுதான் பெரும்பிரச்சினை வந்தது. பதிவேட்டில் என்னுடைய பெயரைக் கொலை செய்யும் ஆசிரியர்கள் ஒரு பக்கம். 'சாஆஆஆந்திரமதி', 'சாந்திமதி' என்று கொலை செய்த ஆசிரியர்களுடன் எனக்கு ஏனோ ஒட்டவில்லை. ஆரம்பத்தில் பொறுத்துப்பொறுத்து பார்த்து விட்டு ஓரிரு வாரங்களுக்குப்பிறகு ஆசிரியர்களை தனியாக சந்தித்து - Santhiramathy என்று எழுதப்பட்டிருந்தாலும் 'சந்திரமதி' என்றே கூப்பிடுங்கள் என்று சொல்லி இருக்கிறேன். கல்லூரியில் ஒரு டீச்சருடன் முறைத்துக்கொண்டதும் உண்டு. இப்படி வினோதமாக வைத்துக்கொண்டு எல்லாருக்கும் விளக்கி சொல்லுவதற்கு பதில் காஜெட்டில் மாற்றிவிடலாமே என்றார். ஒரு முறைப்போடு அது எனக்கு வைக்கப்பட்ட பெயர். அதை மாற்றுவதற்கு இஷ்டம் இல்லை. உங்களுக்கு பெயரை சொல்லுவதற்கு கஷ்டமாக இருந்தால் 'மதி' என்று சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன். பொதுவாக ஆசிரியர்களிடம் முறைத்துக்கொள்ளும் சாதியில்லை என்றாலும், ஏனோ இதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.

அதுவும் பள்ளியில் புதிதாக வந்து சேர்ந்த பாட்டனி ஆசிரியருக்கும் எனக்கும்தான் பயங்கர கொழுவல். அப்போது ஒன்பதாம் வகுப்பில் இருந்தேன். அப்போதுதான் எம்.எஸ்.ஸி படித்து முடித்து எங்களுக்கு பாடம் நடத்த வந்தார் அவர். உங்களுக்கெல்லாம் புதிதாக பாடம் நடத்த வரும் ஆசிரியர்களுக்கு இருக்கும் பயத்தையும், மாணவர்கள் அவர்களை இன்னமும் பயமுறுத்த தங்களால் இயன்றதை செய்வதும் தெரிந்திருக்கும். நீங்களும் செய்திருப்பீர்கள். :D தன்னை அறிமுகப்படுத்தி விட்டு பதிவேட்டில் பெயர்களைப்படித்து மாணவர்களுடன் ஒவ்வொருவராகப் பேசிக்கொண்டு வந்தார். என் முறையும் வந்தது. என்னுடைய பெயரை சரியாக உச்சரித்தாலும், அவர் அதற்குப்பிறகு செய்ததுதான் என்னுடைய கொதியை கிளப்பி விட்டது. 'நீ இங்கே இருக்கிறாய். அரிச்சந்திரன் எங்கே? லோகிதாசன் எங்கே?' என்று ஒரு கேள்வி கேட்டார் பாருங்க. அன்றிலிருந்து அவருடைய ஜென்ம விரோதியாகி விட்டேன். ஒரு வழியாக, தினந்தினம் நண்பர்களும், இந்த வாத்தியின் பேச்சைக் கேள்விப்பட்ட மற்ற வகுப்பில் இருப்பவர்களும் கிண்டலடிப்பது குறைந்தது.

இப்படியெல்லாம் இருந்தபோதுதான் ஒரு சுபயோகதினத்தில்தான் ஹவாய் வந்தேன். என்னுடைய வீணை டீச்சருக்கு நான் 'சந்திரா'தான். அதைப்போலவே இங்கும் பல நண்பர்கள் 'சந்திரா' என்று அழைத்தனர். வந்த வினை 'மதி'க்குத்தான். 'மாடி', 'மாதி' என்றெல்லாம் ஆனது. நல்லவேளை 'மந்தி' என்று அழைக்காமல் விட்டார்களே என்று நினைத்துக்கொள்வேன். என்னுடைய பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்பவர்கள் அதிகமானார்கள். சந்திரனை குறிக்கும் இரண்டு பெயர்கள் என்றும், 'மதி' என்றால் அறிவு என்பதை வைத்து அதனையும் சொல்லி வந்தேன். ஆனால் எனக்குப்பிடித்த பொருள். 'நிலவைப்போல அழகான, புத்திசாலி' என்பதுதான். அதைத்தான் இப்போதெல்லாம் கேட்பவர்களுக்கெல்லாம் சொல்லிவருகிறேன். அட முறைக்காதீங்கப்பா. ஏதோ என்னோட அற்ப சந்தோஷம். :D தமிழ் இணையப்பக்கம் வந்தபிறகு பலர் என்னுடைய பெயர் அழகாக இருக்கிறது என்று சொன்னதை அப்பாவிடம் ஒரு அசட்டுச்சிரிப்புடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பார்த்தியா பெயர் நல்லா இல்லை. பெருசா இருக்கு என்று சண்டை போடுவாயே என்று நான் எதிர்பார்த்ததையே சொன்னார். வீட்டில் என்னுடைய பெயர் எப்படி எல்லாம் அரவிந்தனாலும் விக்கியாலும் கிண்டலடிக்கப்பட்டது என்பது தனிக்கதை. அதையெல்லாம் இங்கே சொல்லி என் தலையில் நானே மண்ணை வாரிப்போடமாட்டேன்.

நம்மவர்கள் தென்கிழக்கு ஆசியா, குறிப்பாக சீனா, ஹாங்காங் தேசத்தவர்கள் போல ஆங்கிலப்பெயர்கள் வைத்துக்கொள்வதில்லை. ரமணீதரன் அவர்களின் வலைப்பதிவில் பார்த்து கேட்ட அந்த நிகழ்ச்சியிலும் 'மீனாட்சி' தன்னுடைய குழந்தைகளுக்கு இந்தியப்பெயர் வைக்கப்போவதாக சொன்னாள். நம்மவர்கள் இப்படி அர்த்தமுள்ள பெயர்களை ஏன் வைக்கிறார்கள். பாசிட்டிவ் அப்ரோச் என்ற விஷயம் நம்முள் முன்பே இருந்திருக்கிறதா? சின்னவயதில் படித்த ஒரு கதை ஞாபகம் வருகிறது. பெரிய குற்றங்கள் செய்தவன் ஒருவன் தன்னுடைய கடைசி மகனுக்கு 'நாராயணன்' என்று பெயர்வைக்கிறான். கடைசிகாலத்தில் இறக்கும்தறுவாயில் மகனது பெயரை சொல்லிக்கொண்டே இறந்ததினால், உணர்ந்து சொல்லாவிடினும் பெயர்சொன்ன காரணத்திற்காகவே சொர்க்கம் போகிறானாம்.

அமெரிக்காவில் இருக்கும் உறவினர் ஒருவர் வந்திருந்தபோது 'தவமணி' என்ற அவரது பெயரை சுருக்கி 'மணி' என்று கூப்பிடுங்கள். 'Money', 'மணி' இரண்டும் ஒரே மாதிரிதான் என்று சொல்லியும் எல்லாரும் 'மானி' என்று கொலை செய்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். பொதுவாக நம்மெல்லோருக்கும் இப்படி நடந்திருக்கும். உங்களுக்கு ஏதாவது சுவாரசியமான சம்பவங்கள் தெரிந்திருந்தாலோ நடந்திருந்தாலோ பகிர்ந்துகொள்ளுங்களேன்.

Wednesday, August 13, 2003

இரமணீதரன் கவிதை



இரமணீதரன் அவர்கள் எழுதிய கவிதை ஒன்றை இங்கு உங்களுக்காகவும் எனக்காகவும் இடுகிறேன். குறைந்த சொற்களை வைத்துக்கொண்டு எத்தனையோ விஷயங்களை போகிறபோக்கிலேயே கூறிச்செல்கிறார். இதை இங்கிடுவதற்கு முக்கிய காரணம். அவ்வப்போது வாசிக்கலாம் என்ற சுயநலமின்றி வேறில்லை.

1997ம் ஆண்டு Tamil.netஇல் எழுதிய கவிதை என்று சொல்லி உள்ளார் ரமணி.

நளப(¡)(ங்)கம்*


"வேலை மிகைக்கேடு,
காலமும் கஷ்டமும்;
வேண்டா வேதனை,
விடப்பா, வெளியுண்போம்",
நவில் நண்பன்,
"உடலுக்கிங்குறையினும் தஞ்சம்,
உணவுக்கு,
மக் சிக்கனும்
மெக் ஸிக்கனும்
புகுவாயோ பேடி, நீ?
சேலை கட்டு சிகண்டி"
என்ற என் சினங் கண்டு,
அனலிடையிடு அறுக்குளாவென,
துடித்துப்பின், துவண்டனன்.
ஹா! என் சொற்தூண்டில்துவள்புழு, அவன்.
காய்கறிக்கடை சென்ற கதை கதி இன்னொரு
கணணியேறாக் காவியம்; அது விடும்,
கட்டுட் சமையலுக்கு வாரும்.
இ·து இளங்கத்தரி,
அது கடுகு காண்,
அப்பாலே அரிசி, கல்நெல்லற்று பஸ்மதியாய்,
வேறு, இவையிவை இன்னென்ன அறிவீர்.
புதுமை செய் சொர்க்கார் நான்;
வையவிரிவுவலைச் சங்கத்தமிழ்ச்
சமையற்பக்கமிருக்கப் பயமேன்? பங்கமேது?
படிவமெடுத்தது வலக்கைவேலாய்
வடிவமெடுத்தது வாகாய்க் கூலாய்.
தாளிப்போம் என்று,
தண்ணீரிட்ட கடுகு
கொதிஎண்ணெய்க்குளிடல் கண்டு,
வெண்காயம் உரித்துக்
கண்ணீர்விட்டழுத கைகேயிதன்
கடைசி வேண்டுதலாய்,
"விடவேண்டும் இத்தொழில்
விபரம் அறியாய் நீ"
என அவனரற்ற,
"விட்டேனோ, சுவர்ணபூமிக்குக்
கப்பலோட்டிய வீரம், சுவறிடுமோ
பேதை? கடுகிற்கு அஞ்சல் தகுமோ,
இது முறையோ? தள்" எனப் பொங்கி,
அண்ணன் ரஜனியென, அலாக்காய்த்
தூக்கிப்போட்டு, அதிலரை தரை கொட்டி,
"சட்டச்சட வென்றெட்டுத் திசையடி"
ஈழத்து, உயிர்கொல் 'செல்', தூணிலுந்
துரும்பிலுமென்றாகி,
ஓடி ஒளிந்தேன்,
அடுப்புப்பின் மேசைப் பங்கரின் கீழ் நான்.
என்ன, அவன் கதியோ?
ஒளியோ(ந்தோ)டு கதியிலும் மேல்;
ஆர் கண்டது?
குளிர் சாதனப்பெட்டி உள்ளேயோ,
ஆள் உயிரோடு இல்லையோ?
வெளிவந்து,
"வேண்டாம் விஷப்பரீட்சைச் சோறுகறி,
ஊற்று உடன் தோசை; (வயிறு, தலை)வலி குறைவு"
என முட்டைக்கோழிக்கேரல்கேட்டு,
"உடன் உண்ண, சாம்பாரோ, சட்டினியோ?"
-தேம்பாமற் கேட்டுவைத்தேன்;
முன்வெடித்த கடுகெல்லாம்
தன்முகத்தே வெடிக்கலுற்று,
"நாயே,
நாள் முழுக்க
நான் பட்டினி;
இதற்குள்
ஆர் கேட்டான்
உனை, சட்டினி?"
நான் ஏன் போக, அரைச்சட்டினியாய்?
தோசை ஊற்று சத்தமின்றி,
வேறு சத்தம் போட்டறியேன்.
பின், சிக்ஸருக்கடித்ததை
பவுண்டறி லைனிற் கைவிட்டவன் போல்,
ஒட்டு உடம்பு ஒட்டுதற்காய் உணவுக்கு,
ஊற்றிய உடன்தோசை சுட்ட தட்டு
உடன் ஒட்டி, உருகி, உருவி,
வெந்து வெளிவந்த வினை, உப்புமா எனக்
காண் நெற்றிக்கண் நரன்,
"பக்கத்துச்சீனன், இரவு
பத்தரைக்கும் திறந்திருப்பான், கடை;
குக்கரை மூடிக் கட்டு அங்கு குறுநடை",
செப்புதல் கண்டு, விட்டால்,
ஒரு விள்ளலிலே அள்ளிவிழுங்குவான் ஆளையென
திரிபுரம் எரித்த விரிசடைச்சிவனென நானும்
ஊழித்தாண்டவம் ஆடிக்களைத்த அரன் அவனும்
வெளிவந்து, விட்டோம் எட்டுப்பிறவிக்கும் எம் சமையல்:
முட்டாள் நளன்,
கெட்டான் உடல் கறுத்து; பின்,
பட்டான் வதை சமையலால்;
பின்னென சொல்ல?
எம் கைப்பக்குவம் குப்பைத்தொட்டி தின்னல் கண்டு
முதல் முகர்ந்தருகோடி,தன் முகம் வெறித்துச்சீறி,
பின், வால் கூரை வளை படப் பறந்தோடி,
மறுநாள், தன் தலை காண,
நக்கலாய்ச் சிரித்ததென்றான் நண்பன்,
பக்கத்தறைப் பைங்கிளி தன்
பஞ்சுமிட்டாய்ப் பொமெரேனியன் (நாய்).

-*'97 வைகாசியில் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

Tuesday, August 12, 2003

டோர்வால் விமானநிலையத்தில் சுற்றுலாப்பயணிகள்





மான்ரியல் டோர்வால் விமானநிலையத்தில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஆறு பயணிகள் சொந்த ஊருக்குப்போக முடியாமல் விமான நிலையத்திலேயே கடந்த நான்கு நாட்களாக தங்கி இருக்கிறார்களாம். மான்ரியல், கனடாவிற்கு சுற்றுலாவிற்கு வந்தவர்கள் அவர்கள். அங்கேயே படுத்து அங்கேயே உண்டுகொண்டு ஏன் இப்படி விமானநிலையத்தில் இருக்கிறார்கள்? விஷயம் இதுதான் பத்துநாட்களுக்கு முன்பு அமெரிக்கா, பாதுகாப்புக்காரணங்களின் காரணமாக அமெரிக்க விமானநிலையங்களில் வேறு விமானம் மாறுபவர்களும் விசா வாங்கவேண்டும் என்று சொல்லிவிட்டது. திடீரென்று கொண்டுவந்த சட்டத்தின் படியால் இந்த ஆறு மெக்சிகர்களுக்கும் அட்லாண்டா விமானநிலையம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ஆகஸ்ட் முதலாம் தேதியிலிருந்தே இங்கிருந்து நேரடியாக செல்லும் 'மெக்சிகானா'வில் மேலதிக இடம் இல்லையாம்.

கனடா இவர்களை விமானத்தில் இடம் கிடைக்கும்வரை அனுமதித்திருக்கிறது என்று நினைக்கிறேன். சரி, சுற்றுலாவிற்காக வந்தவர்கள் ஏன் விமானநிலையத்திலேயே உண்டு உறங்கவேண்டும். அங்கேதான் பிரச்சினை. இவர்கள் விமானச்சீட்டு வாங்கியது 'டெல்டா' நிறுவனத்திடம். அவர்கள் அட்லாண்டாவில் தங்களால் முடிந்ததை செய்கிறோம் என்று சொன்னாலும் இவர்களுக்கு ஹோட்டலில் அறைகூட தரமுடியவில்லையா என்ன? அது தங்களின் பிழை இல்லை அமெரிக்க உள்நாட்டுப்பாதுகாப்பு விவகாரம் இது என்று சொல்லுகிறதாம். கூடவே விசா வாங்கிக்கொண்டு அவர்கள் வரலாம் என்றும் தாங்கள் பல பயணிகளை நேரடி விமானங்களில் அனுப்பி வைப்பதாகவும், மற்றவர்கள் அமெரிக்க விசா வாங்கிக்கொண்டு பறக்கவேண்டும் என்றும் சொல்லுகிறதாம்.

அமெரிக்காவில் டிரான்சிட் விசா தேவையில்லை என்ற விதிகளின்படி போனவருடம் அமெரிக்க விமானநிலையங்களை உபயோகித்தவர்கள் 381,065 பேர்களாம். பிரேசில் நாட்டவர்கள்தான் அதிக எண்ணிக்கையினர். அடுத்த இடம் மெக்சிகோவிற்கு.

சரி உங்களில் எத்தனை பேருக்கு விசா வாங்குவதில் ஒரு பிரச்சினையுமே ஏற்படாதவர்கள்? அப்படியே கொஞ்சம் சென்னை, பறங்கிமலைக்கு எக்சிட் விசா, மாணவர்களுக்கான விசா நீட்டித்தல் வாங்க அனுப்பவேண்டும் உங்களை. :)

Monday, August 04, 2003

கோடை கால மான்ரியல்



கடந்த இரண்டு நாட்களும் மான்ரியல் நகரம் களைகட்டி இருந்தது. கோடை வந்தாலே இந்த நகரத்து மக்களுக்கு உற்சாகம் பீறிட்டுக்கொண்டு வரும். இரண்டு வாரங்களுக்கு முன் வந்த சனிக்கிழமையன்றுதான் நகரத்தில், முக்கியமாக Down Town என்று சொல்லப்படும் பகுதியில் வாகனப்போக்குவரத்து திருப்பி விடப்படவில்லை. அதே போல வாகனப்போக்குவரத்து திருப்பி விடப்படாத நாள் வரும் ஐப்பசியில் இரண்டாம் வார இறுதியில்தான் வருமாம். இதை மிகவும் சுவாரசியமாக நக்கலோடு எழுதி இருந்தார் ஜொஷ் ·ப்ரீட். இவர் சில புத்தகங்களும் எழுதி இருக்கிறார்.

முதலில் இந்த வார இறுதியில் என்ன கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன என்று சொல்லுகிறேன். உயரமான மனிதர்களுக்காக தனி கொண்டாட்டம் நடத்தப்பட்டது. பங்குகொள்பவர்கள் பெண்கள் குறைந்தது ஐந்தடி பத்தங்குலம் இருக்கவேண்டுமாம், ஆண்கள் குறைந்தது ஆறடி இரண்டங்குலம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டார்கள். மொண்ட் ரோயால் என்னும் நகரின் மையப்பகுதியில் இருக்கும் சிறு குன்றிலிருக்கும் மரங்களைடந்த பூங்காவின் ஒரு பகுதியில் இவர்களில் கொண்டாட்டம் இடம்பெற்றது.

மான்ரியல் தீவிற்கு அருகில் இருக்கும் இன்னும் குட்டியான வீடுகள் அற்ற, ஆனால் அழகான பூங்காக்களும், தண்ணீருக்கான விஞ்ஞான அருங்காட்சியகமும்,
ஸ்டூவர்ட் அருங்காட்சியகமும், சூதாட்ட நிலையமும் இருக்கும் தீவிற்கு பெயர் செயிண்ட் ஹெலன் தீவு. மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும் இந்தத்தீவில் இன்று காலையில் சர்வதேச மரமேறுவோர் போட்டி நடந்தது. முப்பத்தாறு நாடுகளைச்சேர்ந்தவர்கள் பங்குபெற்றார்களாம்.

ஹ்ஹ்ம்ம்ம்..... நான் ஒட்டகச்சிவிங்கியுமில்லை, குரங்குமில்லை என்று சொல்லுகிறீர்களா? மான்ரியலில் பழைய துறைமுகப்பகுதிக்கு வாருங்கள். நீங்கள் 1976ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவரென்றால், ஓல்ட் போர்டை உங்களுக்கு ஞாபகம் இருக்கும். சில படங்களிலும் தலையைக்காட்டி இருக்கிறது. இப்போதெல்லாம் கனடாவை 'ஹாலிவூட் ஆ·ப் த நோர்த்' என்று அழைக்கிறார்கள். எந்த எந்தப்படங்களில் மான்ரியல் நகரம் தலையைக்காட்டி இருக்கிறது என்று அப்புறம் சொல்லுகிறேன். இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே ஹால்ல பெரியும் இன்னும் நிறையப்பேரும் இங்கு நடித்துக்கொண்டிருக்கிறார்கள். சரி சரி, விஷயத்துக்கு வருகிறேன். இந்தப்புகழ் பெற்ற ஓல்ட் போர்ட்டுக்கு வந்தீர்களென்றால்... ஏன் இங்கே இத்தனை கூடாரங்கள். அதுவும் எத்தனை வர்ணங்கள்? விசாரித்துப்பார்த்தால் கிரேக்கத்தை சேர்ந்தவர்களின் கொண்டாட்டமாம். கிரேக்கர்களின் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று அமர்க்களமாக இருந்தது. கிரேக்க உணவு, குடிவகைகள் கூடக்கிடைத்தன.

Old Port

இதைப்பார்த்தாயிற்றா, இப்போது தீவின் மேற்கு எல்லையை அடைவோம். ஒரு மணி நேரப்பயணத்தில் பியர்·பொ (ண்ட்ஸ் உச்சரிக்கப்படவில்லை) (Pierrefonds)வை அடைகிறோம். 'மான்ரியல் ஹைலாண்ட் கேம்ஸ்' என்ற இந்த விழாவில் ஆயிரம் டிரம் வாசிப்பாளர்களும், பாக் பைப் வாசிப்பவர்களும் கலந்து கொள்கிறார்களாம். நீங்கள் இவர்களின் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறீர்களா? அருமையாக இருக்கும். நான் டீவியில் பார்த்திருக்கிறேன்.

இவையெல்லாம் சுத்தபோர், கர்நாடகம் என்று நினைப்பீர்களாயின் பின்வரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள். இது ஒரு ஊர்வலம். நகரின் வண்ணமயமான பகுதியில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. இந்தப்பகுதியில்தான் மான்ரியல் மாநகரின் அருமையான உணவுவிடுதிகளும், பார்களும் இருக்கின்றன. ஓரினச்சேர்க்கையாளர்களின் ஊர்வலம் வெகு விமர்சி
யாக நடைபெற்றது. ஏறக்குறைய ஒரு மில்லியன் ஆட்கள் பங்கேற்ப்போவதாக சொன்னார்கள். கனடாவில் இத்தகையோர் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்து, அதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டு வரமுயற்சிக்கிறது. இதற்கு இங்கே இருக்கும் கத்தோலிக்க பாதிரிமார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதுநாள்வரை வெளியிலேயே இதைப்பற்றி பேசியவர்கள், இன்று தேவாலயங்களிலும் மக்களிடம் பேசுவதாக இருக்கிறார்கள் என்பதையும் அறிந்தேன். இந்த ஊர்வலம் பற்றி சில புகைப்படங்களை இங்கே போய் பாருங்கள்.

Gay Pride Parade
NOTE: could be offensive. Use your discretion.

இத்தனை கேளிக்கை அம்சங்கள் இருந்த இரண்டு நாட்களையும் எப்படிக்கழித்தேன் என்று கேட்கிறீர்களா? நேற்றைக்கு முக்கியமாக ஒன்றும் செய்யவில்லை. இன்றுதான், சைனா டவுனுக்கு தோழிகளுடன் சென்று மூக்குப்பிடிக்க டிம் சம் சாப்பிட்டேன். :D