நீள நடக்கின்றேன்
வீடு என்பது 'நான் அந்த நேரத்தில் இருக்கும் இடம்' என்ற சிந்தனை மனதில் வேரூன்றிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. சொந்த வீடு என்பதையே இப்படிக்கொண்ட என்னிடம் சொந்த நாடு பற்றிக் கேட்காதீர்கள். அது, இதுவரை நான் இருந்த நாடுகள் எல்லாமே இனி போகப்போகும் நாடுகள் மற்றும் - ஒரு நாள் தங்கிய சிங்கப்பூரானாலும் சரி, பல வருடங்கள் வாழ்ந்த இந்தியாவானாலும் சரி. எல்லாமே சொந்த நாடு.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டாலும், மனதில் தங்கியிருக்கும் ஊர் புங்குடுதீவு. என்னுடைய பெற்றோர், உற்றார் உறவினரின் ஊர். நான் அங்கே இருந்தது மொத்தம் ஏறக்குறைய இரண்டு வருடங்கள். ஆனாலும், என்னால் மறக்க முடியாத ஊர் அது. அதன் சுவடுகளை, இப்போதும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் பல வருடங்களுக்கு முன்பு விட்டுவிட்டு வந்த புங்குடுதீவு இப்போது இல்லை. இடிபாடுகளுக்கு இடையே இருக்கும் கோலத்தைப் பார்க்க எனக்கு தைரியம் இல்லை. அங்கே போய் வந்த உறவினர்கள் கொண்டு வந்த புகைப்படங்களையோ, வீடியோப்படங்களையோ நான் பார்த்ததில்லை. பார்க்க விருப்பமும் இல்லை. வாயூவேகம் மனோவேகம் என்று சொல்வார்கள். அந்த மனோவேகத்தில், அடிக்கடி நான் என்னுடைய பழைய புங்குடுதீவுக்குப் போய் வருவேன். இன்றைக்கு நீங்களும் என்னோடு வருகிறீர்களா? இங்கே ஒரு விசயம் உங்களிட்ட சொல்லோணும். நான் வெளிக்கிட்டு நிறைய வருசங்கள் ஆயிற்றுது. அதே போல நான் புங்குடுதீவுக்கு கொழும்பிலேருந்து போயும் அதைவிட நிறைய வருஷங்கள் ஆயிற்றுது. அதனால, அங்க அங்க தடங்கல்கள் வரலாம். சில இடங்களில நான் இந்தப் பயணத்தில இருந்து விலத்திப்போய் வேற கதைகள் கதைக்கலாம். விடுப்புப் பார்க்கலாம். போகப்போகத் தெரியும் என்ன நடக்குது எண்டு. என்ன வாறீங்களா? |