வேம்படி மகளிர் கல்லூரி/விடுதி - 10
எனக்குப் பிடித்த கட்டத்தைப் பார்த்துவிட்டோமில்லையா. வலதுபக்கமாக ஒதுங்கிய நாம் அப்படியே செல்வோம். ஆ... இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன். இப்போது பார்த்த கட்டடம் பழைய கட்டடம் என்பதால் அதை வைத்து நிறையப் பேய்க்கதைகளும் உலாவின. இரவில் எல்லாம் அந்தப்பக்கம் நடமாடக்கூடாது என்றெல்லாம் எங்களைப் பெரியவர்கள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். இரவில் விடுதி மாணவிகள் இங்குதான் வந்து படிக்கவேண்டும். ஆறுமணியில் இருந்து எட்டுமணிவரையோ ஏழரை மணிவரையோ படிப்பு நேரம். அப்போது எல்லோரும் இங்கேதான் வந்து படிக்கவேண்டும். வகுப்புகள் இருக்கும் வாசலில் இருந்து கீழே இறங்கினால், சீமெண்ட் போடப்பட்ட தளம் ஒன்று இருக்கும். அது ஏன் அங்கே இருக்கிறது? எப்போது கட்டினார்கள்? என்றெல்லாம் யாரையும் கேட்கத் தோன்றவில்லை. இருபக்கமும் படிகள் இருக்கும். ஆ.... இப்போது வகுப்பை விட்டு வெளிவந்தோமே, எனக்குப்பிடித்த கட்டடம் ஒரு பக்கத்தில் தாழ்ந்துதான் இருந்தது. நான்கைந்துபடிகள் கீழிறங்கிச் செல்லவேண்டும். தொடர்ந்து நடையைக் கட்டினால் 'டானா' வரிசைப்படத் தோன்றும் வகுப்புகள் இருந்தன. பார்ப்பதற்குத்தான் 'டானா' வரிசையில் இருப்பதாகத் தோன்றினாலும், அவை அப்படிக் கட்டப்பட்டவை அல்ல. நான்கைந்து வகுப்புகளைக் கொண்ட கட்டடங்கள் அவை. இரண்டு தனிக்கட்டடங்களுக்குமிடையில் விளையாட்டரங்கிற்கு செல்ல இடம் விடப்பட்டிருந்தது. இந்தக்கட்டத்திலும் கொஞ்சக் காலம் தள்ளினேன். இரண்டுக்கும் முன்னால் இருந்த நிலத்தில் கம்பிகள் குறுக்கும் முறுக்கும் போகக்கூடிய அமைப்பு, பூங்காக்களில் இருக்குமே? அதுபோன்றதொரு அமைப்பு இருந்தது. அதில்ந்தான் பள்ளிக்கூடம் முடிந்தபிறகு எங்களுடைய பொழுதெல்லாம் கழிந்தது. சுற்றிவர அடர்ந்த மரங்கள் நின்றபடியால் வெயில் தெரியவில்லை. இடப்பக்கத்தில் எங்களுடைய ஆராய்ச்சிக்கூடம் (ஆமா பெரிய பி.எச்.டி செய்யுறாங்கன்னு அலுத்துக்காதீங்கப்பா) இருந்தது. ஆறாம் வகுப்பில் புரதம் தலைமுடியில் இருக்கிறது என்பதைப் பரிசோதனை செய்துபார்க்க எரித்த தலைமயிர் வாசம் இன்னும் மூக்கில் நிற்கிறது. மற்றும்படி, எங்களுக்கு இந்தப்பக்கத்தில் வேலையில்லை என்பதால் என்ன என்ன கட்டடங்கள் இருந்தன என்றெல்லாம் நினைவில் இல்லை. நிறைய வாழைமரங்கள் இருந்தது ஞாபகம் இருக்கிறது. எப்போதாவது காலை, மதியம், இரவில் வாழைப்பழம் கிடைக்கும். ஆனால், எல்லோரு வாழைப்பழங்களை விற்று காசு சம்பாதிக்கிறார்கள் என்று பெரியவர்கள் கரித்துக்கொட்டுவதும் உண்டு. இந்த வளாகத்தில், பள்ளியிலும் விடுதியிலுமாக அடித்த கூத்துகள் பிறகு... |